கோகுல்

கோகுல்

  • By Magazine
  • |

டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்….பீப்பீ….டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்…

மிக அனாயசயமாக வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. புகை கக்காத பைக் வண்டி. நேராக ஓடிக்கொண்டிருக்கும் அந்த வண்டி சட்டென்று ஒரு ட வளைவில் திரும்பி மேல் நோக்கி விரைகிறது. இரண்டடி உயரத்திற்கு பயணித்த அது சடாரென திரும்பி கீழ் நோக்கி வருகிறது. மறுபடியும் அதே ட வளைவுக்கு உடன்பட்டு தரைக்கு வந்து சேர்கிறது. இப்போது அது எல்லா இடங்களிலும் தனக்கான பாதையை உருவாக்கிக்கொண்டு ஓடுகிறது. அல்லது அதன் சக்கரங்கள் போகும் வழியெல்லாம் பாதையாகிவிடுகிறது. டுர் டுர் சத்தமும், பீப்பீ சத்தமும் அந்த அறையின் சுவர்களில் பட்டுத்தெறித்து கீழே விழுந்துகொண்டிருக்கின்றன.

சுவரோரம் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளின் டயர் வளைவில் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது அந்த வண்டி. அப்படியே சறுக்கி கம்பி வழியாகக் கீழிறங்கி இடது பெடலில் பயணித்து மேலேறி கேரியருக்குத் தாவி நின்று நிதானித்து பின் சக்கரம் வழியாக கீழிறங்குகிறது. பின் சக்கரம் ரொம்பவும் தேய்ந்துபோயிருக்கிறது. தாத்தாவின் மிதிவண்டி இது. டுர்ர்ர்ர்…டுர்ர்ர்ர்…பீபீபீபீ……….

அடுத்ததாய் கட்டிலின் குத்துக்கால் மீதேறி மூங்கில் சட்டங்களில் பயணிக்கிறது. பாட்டி தூங்கிக்கொண்டிருக்கிறாள். பாட்டியின் தூக்கம் கலைந்துவிடாதபடி டுர்…பீப்பீ…சத்தம் மங்கி ஒலிக்கிறது.

ஒரு இருமல் வர வண்டி பிரேக்கிட்டு நிற்கிறது. இரண்டு நாட்களாகவே அவ்வப்போது குத்தி குத்தி இருமல் வந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனாலும், தாங்கிக்கொள்கிறாள் ஓவியா. சொன்னால் கேட்பதேயில்லை. மிட்டாய்களைத் தின்று தின்று கடைவாய்ப்பல் ஒன்று சொத்தை விழுந்துவிட்டது. அதிலும் ஜிகினா பேப்பர் சுத்திய சாக்லேட்டுகள் என்றால் அத்தனை பிரியம் அவளுக்கு.

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டால் தேவலாம் என்றிருக்கும்போல. பைக் பொம்மையை டிவி ஸ்டேண்டு மேல் கிடத்திவிட்டு வாசற்படியில் வந்து அமர்கிறாள். அக்கம்பக்கத்தில் எந்த வீடுகளும் இல்லை. அதோ தூரத்தில் தெரிகிறதே ஒரு ஓட்டுவீடு. அந்த வீடும் இங்கிருந்து இருநூறு அடி தூரத்தில் இருக்கிறது. அதிலும் மனிதர்கள் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இப்போது தென்படவில்லை. இருமல் மெள்ள மெள்ள மட்டுப்படுகிறது. அப்பாடி என்றிருக்கிறது ஓவியாவுக்கு. அடுத்ததாய் என்ன விளையாடுவது என்ற யோசனை அவளுக்குள் எட்டிப்பார்த்திருக்க வேண்டும். வாசற்படியில் உட்கார்ந்தவாறே அறைக்குள் திரும்பிப்பார்க்கிறாள்.

சிதறிக்கிடந்த விளையாட்டு பொம்மைகளுக்கு நடுவே நீள்வட்ட இரயில்பாதையில் இரண்டு பெட்டிகள் பிணைக்கப்பட்ட இரயில் எஞ்சின் வளைந்த பாதையில் நின்றிருக்கிறது. சேலத்திலிருக்கும் ராஜா மாமாதான்  இந்த இரயில் வண்டியை வாங்கிக்கொடுத்தார். வாங்கிக்கொடுத்த புதிதில் இந்த வண்டியைப் பார்த்தாலே கண்களை இறுக்கி மூடிக்கொண்டு அழத்தொடங்கிவிடுவாள் ஓவியா. அந்த நீள்வட்டப் பாதையில் அது நகர்ந்து செல்வதைப் பார்த்தாலே பூச்சி ஊர்வதுபோல் அவளுக்கு அருவெறுப்பாக இருந்திருக்கும் போல. அத்தனை பயம் சூழ்ந்துகொள்ளும் அவளை. இப்போது பரவாயில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அதனோடு பழகிக்கொண்டுவிட்டாள். இப்போதெல்லாம் இரயில் பூச்சியைப் பார்த்து பயப்படுவதில்லை.

முன்பக்க சக்கரங்கள் உடைந்துபோய் பொக்கையாக இருந்த கார் பொம்மை, பள்ளத்து கருப்பணார் கோயில் கிடாவெட்டுக்கு வந்திருந்தபோது கோபால் சித்தப்பா வாங்கிக்கொடுத்தது. அந்த கார் வண்டி வீட்டிற்குள் போகாத இடமில்லை. டிவி ஸ்டேண்டின் ஒரு கால் வழியாக  மேலேறி டிவி பெட்டியின் தலையில் ஊர்ந்து மற்றொரு கால் வழியாக கீழிறங்கி, பக்கத்திலிருக்கும் மேசை மீது ஏறியிறங்கி, அப்படியே திரும்பி சமையலறைக்குள் நுழைந்து செம்பு அண்டா, பிளாஸ்டிக் குடங்கள் மீதெல்லாம் பயணப்பட்டு, குக்குர் கடந்து, கேஸ் சிலிண்டர் மீதூர்ந்து……..                    ”அடடடா…செத்த நேரம் கம்முனு இருக்கறதில்ல….” பாட்டி செல்லமாய்க் கடிந்துகொள்வாள். பெரும்பாலான நேரங்கள் படுத்தே கிடப்பாள் பாட்டி. முதுமையும் நோய்மையும் கொண்டிருக்கும் பாட்டி ஓவியாவை நெருங்க விடுவதில்லை. ஆனாலும், பாட்டிக்கு ஓவியா ரொம்பவும் செல்லம்.

எங்கோ ஊருக்குப் போன அம்மா டெலஸ்கோப் வாங்கி வந்திருந்தாள். அதை வைத்துக்கொண்டு என்ன விளையாடுவது? ஓரிரு முறை அதன் முனையில் கண்ணைச் சுருக்கி பார்த்ததோடு சரி. அதன் பின் அதைத் தொடுவதே இல்லை ஓவியா.

பீப்பீ என இசையெழுப்பும் செருப்பும் விளையாட்டுப் பொருளாகிவிட்டது இப்போது. நடை பழகும் வயதில் போட்டிருந்தது. இப்போது அதைக் காலில் அணிந்துகொள்ள முடியாது. முன்பைவிட நன்றாகவே வளர்ந்துவிட்டாள். ஷு போட்டுக்கொண்டு பள்ளிக்குப் போகிறாள். ஆனால் அந்த செருப்பைக் கையில் பிடித்து அழுத்தும்போது பீப்பீ சத்தம் வருமே…அந்தச் சத்தம் ஓவியாவுக்கு மிகவும் பிடிக்கும். ஒரு செருப்பு தான் இருக்கிறது. இன்னொன்று எப்படியோ தொலைந்துவிட்டது.

மொக்கு உடைந்த கலர் பென்சில்கள், சில துண்டுக் காகிதங்களில் கலர் கலர் கிறுக்கல்கள், செல்ஃபோன் பொம்மை, உடைந்த டிவி ரிமோட்..என சிதறிக்கிடந்த விளையாட்டுப்பொருள்களை நோட்டமிட்ட ஓவியாவுக்கு பிடித்தமானதாய் எதுவுமே தென்படவில்லை. வெறுமனே எப்படி விளையாடுவது? எதாச்சும் பொருள் தேவையாயிருக்கிறது விளையாடுவதற்கு.

”எல்லாம் விளையாடிட்டோம். பைக்கும் ஓட்டி முடிச்சாச்சு. தாத்தா வேற செத்துப்போய்ட்டாங்க….தாத்தா தான் எப்பவும் எங்கூட வெளையாடுவாரு.. அவரு ஏன் செத்துப்போனாரு? அறிவே இல்ல தாத்தாக்கு… அப்பா வரும்போது இன்னிக்கி என்ன தீனி வாங்கி வருவாரு? அம்மா எப்ப வருவாங்கன்னு தெரியல?  சீக்கிரம் வாங்கம்மா..மோட்டு பத்லு பார்க்கலாம்.” மனசுக்குள் என்னென்னவோ ஓடிக்கொண்டிருந்தது அவளுக்கு.

ஓவியாவின் அம்மா கவிதா காலையிலிருந்து வீட்டில் தான் இருந்தாள்.  அவளது புதுப்பட்டி மாமாவுக்கு உடம்பு சரியில்லை என போன் வந்ததும் கிளம்பிவிட்டாள். ஓவியாவையும் இழுத்துக்கொண்டு போயிருக்கலாம் தான். அவள் என்ன வரமாட்டேன் என்றா அடம்பிடிக்கிறாள்? பஸ்ஸில் போவதென்றால் ஓவியா உடனே ”நான் முந்தி” என வந்து நின்றுவிடுவாளே. நாளை பள்ளிக்கூடம் இருப்பதால் அலைக்கழிக்க வேண்டாமென்றுதான் ஓவியாவை வீட்டிலேயே மாமியார் பொறுப்பில் விட்டுவிட்டு போனாள். இங்கு புதுப்பட்டி இருபது கிலோமீட்டர் தான். மூன்று மணி நேரத்தில் போய்விட்டு என்ன ஏது என விசாரித்துவிட்டு வந்துவிடலாம் என்ற நினைப்பில் கிளம்பிப் போனாள் அவள்.

தனித்த வீடு. தூரத்தில் தெரியும் அந்த ஓட்டு வீட்டைத்தவிர அக்கம்பக்கம் வீடுகள் எதுவுமில்லை. சுற்றிலும் காலி வீட்டு மனைகள். இனிதான் இங்கு வீடுகள் முளைக்க வேண்டும்.

ஓவியாவுக்கு தான் இந்த தனிமை வாட்டியெடுக்கிறது. இந்த விளையாட்டுச் சாமான்கள் மீதும் விருப்பங்கள் குறைந்துகொண்டிருக்கின்றன. கொஞ்ச நேரம் அவற்றோடு மல்லுகட்டி விளையாடுவாள். சற்றைக்கெல்லாம் அப்படியே தளர்ந்துபோய் விடுவாள். இந்த விளையாட்டு பொம்மைகள் உயிரற்றவை என்பதைப் புரிந்துகொள்ளும் பக்குவம் வந்துவிட்டது அவளுக்கு.

ஆனாலும் எதாவது விளையாடிதான் இன்றைய இந்தப் பொழுதைப் போக்கியாக வேண்டும்.

உள்ளே சென்று அறைமுழுதும் நோட்டமிட்டாள். வீட்டு மூலையில் ஒரு லிட்டர் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் ஒன்று காலியாக கிடந்தது. அதை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தாள். வாசலில் ரோஜாச் செடி இரண்டு மொக்குகள் விட்டிருந்தது. மாதுளையின் கிளையில் ஒரு தேன்சிட்டு உட்கார்ந்திருந்தது. பாகல் கொடியில் மஞ்சள் பூக்கள் அங்கங்கே விரிந்திருந்தன. வேலியோரம் கோவைப்பழங்கள் சிவந்திருந்தன. ஓவியாவைவிட கொஞ்சம் உயரமாக வளர்ந்திருந்த கொய்யா மரத்தடியில் இரும்பு வாளியில் தண்ணீர் நிறைந்திருந்தது. ஒரு பழுத்த கொய்யா இலை அந்தத் தண்ணீரில் மிதந்துகொண்டிருந்தது. ஓவியாவும் அவளது அம்மாவும் சேர்ந்துதான் இந்தச் செடிகளுக்குத் தண்ணீர் விடுவார்கள். செடிகள் பச்சை பிடித்திருக்கின்றன.

மறுபடி வீட்டிற்குள் ஓடிப்போய் ஒரு டம்ளரை எடுத்துக்கொண்டு வாளியருகே வந்து அமர்ந்த ஓவியா தண்ணீர் பாட்டிலின் மூடியைக் கழற்றி வாளி நீரில் மிதக்கவிட்டாள். ஒவ்வொரு டம்ளராய் தண்ணீர் மொண்டு பாட்டிலை நிரப்பத்தொடங்கினாள். சிந்தி சிந்தி ஊற்றினாள். பாட்டில் மூடி வாளி நீரின் அலைக்குத் தக்கவாறு மிதந்து மிதந்து அலைந்துகொண்டிருந்தது. அவளது குட்டைப்பாவாடை மெள்ள மெள்ள ஈரமாகிக்கொண்டிருந்தது.

ஏழெட்டு டம்ளருக்குப்பின் அந்த பிளாஸ்டிக் பாட்டில் நிரம்பியிருந்தது. வாளியில் மிதந்துகொண்டிருந்த மூடியை எடுத்து பாட்டிலை இறுக்க மூடினாள். அந்தப் பிஞ்சுவிரல்களின் இறுக்கம் அவ்வளவு இறுக்கமாக இல்லாமல் மிகவும் மென்மையாக இருந்தது.

ஒரு லிட்டர் எடை கொண்ட அந்த பாட்டிலைத் தூக்கி இடுப்பில் பொருத்திக்கொண்டு அறைக்குள் திரும்பினாள். கட்டிலில் பாட்டியின் தலைமாட்டில் கிடந்த துண்டை எடுத்து அந்த பாட்டில் மேல் போர்த்திவிட்டபடியே மீண்டும் வாசற்படிக்கு வந்து உட்கார்ந்துகொள்கிறாள்.

பாட்டிலை மடியில் கிடத்தி “ அழாதடா செல்லம்… பப்பு சாப்புடு…இந்தா” என்றபடி கை விரல்கள் குவித்து அந்த பாட்டிலுக்குச் சோறு ஊட்டிவிட்டாள். முகம் துடைத்துவிட்டு “ குளிக்கிறியா செல்லம்….” என்றபடி அதை வாஞ்சையோடு அணைத்தபடி வாளியருகே வருகிறாள். ஒரு டம்ளர் நீர் மொண்டு குளிப்பாட்டுகிறாள். ஓவியாவின் வாஞ்சை பாட்டிலின் தலையிலிருந்து கால்வரை நனைந்து வழிகிறது. சோப்பு போடுவதுபோல் பாட்டிலைத் தடவித் தடவி விடுகிறாள். அடுத்த டம்ளர் நீரில் பாட்டில் குளித்து முடிக்கிறது.

மீண்டும் வாசற்படிக்கு வந்தமர்ந்துகொண்டு, பாட்டிலை மடியில் கிடத்தி மிக மிருதுவாக  துவட்டிவிடுகிறாள். தூரத்தில் ஹாரன் சத்தம் கேட்கிறது.

“ ஐ…அப்பா வந்தாச்சு…” என்றபடி அந்த பாட்டிலை எடுத்துப்போய் அறை மூலையில் நிற்கவைத்து துண்டு போர்த்திவிட்டு “ தூங்கு செல்லம்….” என்று கூறிவிட்டு வாசல் கடந்து அப்பாவின் வண்டி நோக்கி ஓடுகிறாள்.

“சவிதா.. இது யாரு”

“ எந்தம்பி”

“ உன் சொந்த தம்பியா”

“ ஆமா…நானும் இவனும் எங்கம்மா வயித்தில இருந்துதான் வந்தோம். எனக்கப்பறமா இவன் வந்தான்”

“ உந்தம்பி பேரு என்ன?”

“கௌதம்”

“நானும் அவன தம்பின்னு கூப்டட்டுமா?”

“ம்ஹீம்….இவன் எனக்கு மட்டுந்தான் தம்பி”

அந்தப் பள்ளிக்கூடத்தின் மதிய உணவுப்பொழுதின் களேபரச் சத்தங்களுக்கு நடுவில் ஓவியாவின் பதிலற்ற அமைதிக்குள் பேரிரைச்சலுக்கான முதல் அலை வீசித் தொடங்கியது.

டிபன் பாக்ஸிலிருந்து பிடி சோற்றை வாயில் திணித்தபடி

“ ஓவியா…உனக்கு தம்பி இல்லையா” என்றாள் சவிதா.

“ ம்….இருக்கான்…”

“ எங்க இருக்கான்….”

“வீட்ல இருக்கான்”

“வீட்ல என்ன பண்றான்”

“வீட்டு மூலைல தூங்கிட்டிருக்கான்”

“அவன் பேரு என்ன”

மென்றுகொண்டிருந்த இட்லி விள்ளலை அதக்கியவாறு வெடுக்கென சொன்னாள் ஓவியா “கோகுல்”

– நாணற்காடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *