சுற்றுச்சூழல் அக்கறையோடு

சுற்றுச்சூழல் அக்கறையோடு

  • By Magazine
  • |

பண்டிகைகளைக் கொண்டாடுவோம்

பண்டிகைகள் என்றாலே கொண்டாட்டங்களுக்கு குறைவிருக்காது. உறவுகள் கூடி கொண்டாடுவதற்கானவைதான் பண்டிகைகளும் திருவிழாக்களும். ஆனால் இந்த அவசரகால தொழில்நுட்ப வாழ்வில் தொலைவுகளில் வாழும் நாம் இப்பண்டிகைக் காலங்களில் உறவுகளை சந்தித்து கூடி மகிழ்ந்திருப்பதற்கான முக்கியத்துவத்தைக் குறைத்துக் கொண்டு நுகர்வுசார்ந்த கொண்டாட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம்.

சொந்தங்களைச் சந்தி¢த்தல் என்பது சுமூகமான கூட்டுக்குடும்பங்களில் நடைபெறும் நிகழ்வாகும். தற்போதைய வாழ்விற்கான பொருளாதாரத் தேடலில் எங்கெங்கோ படிப்பு, பணி என பிரிந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் உறவு ரீதியாக தொலைவிலிருந்தாலும் கூட்டுக்குடும்ப மனநிலையில் குடும்ப உறுப்பினத்தன்மையோடு வாழ்ந்து வந்தார்கள் எனில் அங்கு நேரடிச் சந்திப்புகள் அடிக்கடி நடைபெறவில்லையெனிலும் மனம் நெருங்கியிருக்கும் உறவுகளுக்கிடையேயான பங்கிடுதல், விட்டுகொடுத்தல், கொடுக்கல் வாங்கல், சண்டை, சமாதானம் போன்ற பிணைப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

கூட்டுக்குடும்பங்கள் அல்லது மனிதநேய உறவுகளில் ஏற்பட்டிருக்கும் சிக்கல்களைப் போலத்தான் தற்போதையச் சுற்றுச்சூழல் சிக்கல்களும்.

நமது இயற்கை எண்ணற்ற வழிகளில் மாசடைந்து வருகின்றது. இது நம் அனைவருக்கும் கட்டாயமாக தெரிந்த உண்மைதான். ஆனால் நாம் அதற்காக என்ன செய்கின்றோம் என்பதுதான் இங்கே கேள்வி. எங்கு பார்த்தாலும் நமது இயற்கையை காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தை அனைவரும் பேசிக் கொண்டேதான் இருக்கின்றோம். ஆனால் செயல் அளவில் என்ன செய்திருக்கின்றோம். இதுதொடர்பான சமீபத்திய முக்கியமான விவாதங்களுள் ஒன்று பசுமைக் கொண்டாட்டங்களை ஊக்குவித்தல் என்பது.  சமீபத்தில் தீபாவளிப் பண்டிகையை புகையற்ற பண்டிகையாகக் கொண்டாடுவோம் என டெல்லியில் உள்ள பள்ளிக்குழந்தைகள் உறுதிமொழி எடுத்திருக்கின்றார்கள். தமிழ்நாட்டிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன.  பாராட்டத்தகுந்தது- இதுசம்பந்தமாக சுற்றுச்சூழல் போராளியும் குடியரசுத்தலைவர் விருதுபெற்ற வருமான கோவையைச் சார்ந்த மரம் யோகநாதன் அவர்கள் மிகமுக்கியமான விழிப்புணர்வு இயக்கத்தை பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றார்.

ஒரு கொண்டாட்ட நாள் புத்தாடை வாங்குதல், தின்பண்டங்கள் செய்தல் மற்றும் வாங்குதல், சடங்குகள், பயணங்கள், மகிழ்ச்சி, பணத்தேவை, உறவுகள் சங்கமம், பரிசளித்தல், பரிசுபெறுதல் போன்ற இத்தனையாலும் பின்னப்பட்டிருக்கின்றது.  மேலும் மிக இன்றியமையாத உற்பத்தி, வியாபாரம்,  பொருளாதாரம் என்பதும் இதன் பின்னால் வியாபித்திருக்கின்றது. அதுபோலவே அந்த கொண்டாட்டம் எதனை வழிமொழிகின்றது அதாவது மீண்டும் மீண்டும் நிலைநிறுத்துகின்றது என்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது கலாச்சாரத்திலும் பொது சமூக அறிவுநிலையிலும் ஏற்படுத்துகின்ற விளைவு என்ன என்பதும், சமூகத்தை முன்னோக்கி நகர்த்துகின்றதா? அல்லவா? என்பதும் கூட இ¢ங்கே முக்கியத்துவம் வாய்ந்தது தான்.

ஒரு கொண்டாட்டம் அல்லது விழா காலந்தோறும் மாற்றங்களை சந்தித்தே வந்து கொண்டிருக்கின்றது. இந்த மாற்றம் எவ்வாறெல்லாம் நிகழும் எனில், மனித சமூகம் அடைந்திருக்கும் பொருளாதார மேம்பாடு, அறிவுநிலை மேம்பாடு போன்றவற்றின் காரணங்களால் கட்டாய அல்லது காலபோக்கு மாற்றங்களை ஏற்றுக் கொண்டிருக்கும். மேலதிகமாக ஆளும் அதிகாரமும் முதலாளித்துவமும் கூட தங்கள் எதிர்காலத் தேவைகளுக்கான மாற்றங்களை உள்புகுத்தும்.

இவ்வாறு பலமாற்றங்களைக் கண்டு கொண்டிருக்கின்ற பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைகிக்காதிருத்தல் எனும் நல்ல நோக்கத்திற்காக மாற்றங்களை பெறுதல் என்பது வரவேற்கத்தகுந்த ஒரு நல்ல செயல்பாடு ஆகும்.

இந்த உலகம் குப்பைகளாலும், மாசுகளாலும் மாளும் முன்பே அதனைக் காக்க வேண்டியது மனித சமுதாயத்தின் பிறப்புக் கடன் ஆகும்.

நாம் நமது கொண்டாட்டங்களை திட்டமிட்டு சூழல் அக்கறையோடு கொண்டாடுவோம். நமது குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுப்போம். முக்கியமாக ஒரு பண்டிகைக்காக நாம் வாங்கும் பொருட்களின் வழியாக எண்ணற்ற பிளாஸ்டிக் பை மற்றும் பொருட்களை வீடுகளில் குப்பையாக அல்லது ஒருமுறை பயன்பாட்டிற்காக சேர்த்திருப்போம்.  அதனை எவ்வாறு தவிர்ப்பது என்பதைப் பற்றி நாம் திட்டமிட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

அதுபோலவே குப்பைகளைத் தனித் தனியாகப் பிரித்து மறுபயன்பாட்டுக்கு ஏற்ற வகை செய்வதும் மிகவும் இன்றியமையாத செயல்பாடு ஆகும். இவ்விரண்டும் நமது நேரத்தையும் சற்று கூடுதல் உழைப்பையும் வேண்டுவதாகும். ஆனால் இதற்கு தயங்குதல் கூடாது.

தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளிலும், திருமணம், தலைவர்களின் பிறந்தநாள் போன்ற நிகழ்வுகளிலும் வெடி வெடித்தல் என்பதை கட்டாயச் சடங்காக செய்வதைத் தவிர்த்தல் வேண்டும்.

இடையில் வந்த இப்பழக்கத்தை நாம் விட்டுவிட்டு நமக்கு தெரிந்த பயனுள்ள வேறுவழிகளைக் கையாள வேண்டும். இவ்வாறு செய்வது நாம் பண்டிகைளின் முக்கியத்துவத்தை குறைத்து விடுகின்றோம் என்று பொருள் ஆகாது. மாறாக பண்டிகைகாலச் செயல்பாடுகள் பொருள் பொதிந்ததாக மாறுவதற்கான நடவடிக்கைகளாகத் தான் இருக்கும். இந்த மாற்றங்கள் எதிர்காலத்தில் நாம் பெருமைபடும் விடயமாக மாறும். எனவே திருவிழாக்கள், நிகழ்வுகள், பண்டிகைகள் என எந்த கொண்டாட்டமாக இருந்தாலும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக கொண்டாடுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *