புதினா நறுமணமிக்கது. இது உணவிற்கு மட்டுமல்லாது, வாய்க்கும் நறுமணத்தை கொடுத்து, உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.
புதினா சத்து நிறைந்தது. இதன் பூர்வீகம் ஐரோப்பிய நாடுகளாக இருப்பினும், எல்லா இடங்களிலும் பயிராகிறது.
தண்டுபகுதி அல்லது வேர்பகுதியை தொட்டியில் உள்ள மண்ணில் ஊன்றி வீட்டு தோட்டங்களில் வளர்க்கலாம். தண்ணீர் தினம் ஊற்ற வேண்டும். இது சுமார் 2 அடி உயரம் வரை வளரக்கூடியது. இலை கடும்பச்சை நிறத்தில் ஓரங்களில் பற்களுடனும், சுருக்கங்கள் நிறைந்தது போன்றும் காணப்படும்.
புதினா, பற்பசை, வாய் கொப்பளிக்கும் திரவம், சோப்புகள், இழுவை மிட்டாய் (Chewing gum) போன்றவைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
புதினாவிலிருந்து மின்ட் எண்ணெய் (mint oil) தயாரிக்கப்படுகிறது. இதுவும் அதிக மருத்துவகுணங்களை கொண்டது.
புதினாவில் மென்தால் என்னும் உப்புசத்து உள்ளது. இது ஜில் என்ற உணர்ச்சியை கொடுக்கிறது. அதிக அளவில் உள்ள Carvone என்னும் தாவரவேதிப்பொருள் மணத்தைக் கொடுக்கிறது.
தாவரவியல் பெயர் :
Mentha spicata
ஆங்கிலப் பெயர் :
Spearmint. garden mint, Lady’s mint, mint
வேறுபெயர்கள் :
ஈயெச்சகீரை, பொதினா, புதியன் மூலி
இதில் அடங்கியுள்ள தாவர வேதிப்பொருள்கள்
Rosmarinic acid, Phenolic acid, menthol, pinene, cineole, Limonene, Carvone
தாதுசத்துக்கள்
பொட்டாசியம், இரும்புசத்து, மாங்கனீசு, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், மாங்கனீசு, நாகசத்து, தாமிரசத்து.
உயிர்சத்துக்கள்
விட்டமின் A, விட்டமின் B சத்துக்கள், விட்டமின் C சத்து
புதினாவின் மருத்துவப்பயன்கள்
1. வயிற்றுபொருமல், அஜீரணத்திற்கு
புதினா இலையை துவையல் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர வயிற்றுபொருமல், அஜீரணம் குணமாகும்.
2. வாயுதொல்லை, வயிற்றுவலிக்கு
புதினா எண்ணெய் நான்கு சொட்டுகள் ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து குடித்துவர வாயு தொல்லை, வயிற்றுவலி குணமாகும். மேலும் மிஙிஷி என்று அழைக்கப்படும் அடிக்கடி மலங்கழிக்கச் செய்யும் நோய்க்கும் சிறந்தது.
3. நாக்கு சுவையின்மைக்கு
புதினா இலையை மென்று சாப்பிட்டு வர நாக்கு சுவையின்மை தீர்ந்து சுவை உணர்ச்சி அதிகரிக்கும்.
4. வாய்குமட்டல், வாந்திக்கு
கர்ப்பிணி பெண்களுக்கு வரும் வாய்குமட்டல், புற்றுநோய் சிகிட்சையில் உள்ளவர்களுக்கு ஏற்படும் வாய்குமட்டல், அறுவைசிகிட்சைக்கு பின் ஏற்படும் வாய்குமட்டல், மஞ்சள் நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் வாய்குமட்டல் இவற்றிற்கு புதினா இலையை பிசைந்து மணத்தை நுகரச் செய்யலாம் அல்லது 20 புதினா இலைகைளை ஒரு டம்ளர் கொதித்த வெந்நீரில் 10 நிமிடங்கள் ஊற வைத்து வடித்து சிறிது தேன் கலந்து குடிக்கச் செய்யலாம்.
5. ஜலதோசம், சளிக்கு
புதினா சாறு 10 மில்லி எடுத்து அத்துடன் தேன் கலந்து குடிக்கலாம் அல்லது புதினா இலையை தண்ணீரில் இட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து வடித்து குடிக்கலாம் அல்லது புதினா எண்ணெய்யை முகரலாம், நெஞ்சில் தடவலாம்.
6. வாய் துர்நாற்றத்திற்கு
புதினாவில் மென்தால் என்னும் தாவர தாது உப்புசத்து நிறைந்து இருப்பதால் இதனை மென்று சாப்பிட வாய்துர்நாற்றம் மாறும். மேலும் புதினா இலையை கசாயமிட்டு வாய் கொப்பளிக்கவும் செய்யலாம்.
7. பெண்களுக்கு தேவையற்ற முடி வளர்தலை தடுக்க
புதினா, பெண்களுக்கு, ஆண் ஹார்மோன் எனப்படும் டெஸ்டோஸ்டீரான் அளவை குறைத்து பெண் ஹார்மோனை (LH, FSH, Estradiol) – ஐ வளப்படுத்துவதால் தேவையற்ற முடிவளர்ச்சி, பூப்பு கோளாறுகள், சினைப்பை கட்டிகள் போன்றவற்றிற்கு சிறந்ததாக கருதப்படுகிறது.
இதற்கு ஒரு கைபிடி புதினா இலையை ஒரு டம்ளர் கொதித்த இளநீரில் 5 நிமிடங்கள் இட்டு மூடிவைத்து வடிகட்டி தினம் இருவேளை தொடர்ந்து மாற்றங்கள் தெரியும் வரை குடிக்க வேண்டும்.
8. முகப்பரு மாற
புதினா இலையை அரைத்து முகப்பருவில் பூசி, பத்து நிமிடங்கள் சென்ற பின் தண்ணீரில் கழுவி விட வேண்டும். இப்படி செய்துவர முகப்பரு அகலும்.
9. முடி ஆரோக்கியத்திற்கு
புதினா இலையை அரைத்து அத்துடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து தலையில் பூசி அரைமணி நேரம் கழித்து குளித்துவர பொடுகு, முடி உதிர்தல் மாறி நல்ல முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
10. கண் கருவளையத்திற்கு
புதினா இலையை, தக்காளி பழச்சாற்றுடன் கலந்து கண்ணை சுற்றி பற்றிட்டு 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வர கண் கருவளையம், கரும்புள்ளிகள் மறையும்.
11. தண்ணீர் தாகம் தணிய மற்றும் உடல் குளிர்ச்சிக்கு
ஒரு கைபிடி புதினா இலையை அரைத்து ஒரு டம்ளர் நீர் சேர்த்து கலந்து வடித்து அத்துடன் நாட்டுசர்க்கரை அரை கரண்டி, எலுமிச்சம் பழச்சாறு அரைகரண்டி, சிறிது ஜீரகபொடி சேர்த்து குடித்து வர தண்ணீர் தாகம் தணியும்.
12. பல் ஈறு பலப்படுவதற்கு
புதினா இலையை உலர்த்தி பொடித்து பல்தேய்த்து வர, பல்ஈறு பலப்படும். வாய் நறுமணம் உண்டாகும்.
13. உளைச்சலால் உண்டாகும் தலைவலி மற்றும் ஞாபக சக்திக்கு
ஒரு கைபிடி புதினா இலையை ஒரு டம்ளர் கொதிக்க தண்ணீரில் இட்டு ஐந்து நிமிடம் மூடி வைத்து பின் வடித்து சிறிது தேன் சேர்த்து புதினா பானமாக அருந்திவர, மன உளைச்சலால் உண்டான தலைவலி மாறும். வயதானவர்களுக்கு ஞாபகசக்தியை அதிகரிக்கும். நல்ல தூக்கத்தையும் உண்டாக்கும்.
14.ஆரோக்கியமான இரத்த சுற்றோட்டத்திற்கு
புதினாவில் இரும்புசத்து, போலேட் சத்து அதிகம் இருப்பதால் இரத்தசோகைக்கு சிறந்தது. மேலும் Carvone என்னும் தாவரவேதிப்பொருள், பொட்டாசியம் சத்து அதிகம் இருப்பதால், அதிக இரத்த அழுத்தம், கெட்ட கொழுப்பு இவற்றை குறைத்து ஆரோக்கியமான இரத்த சுற்றோட்டத்திற்கு உதவுகிறது.
15. நாட்பட்ட நோய் மற்றும் பிற நோய்களுக்கு
புதினாவில் Rosmarinic acid, Pheonlic acid, carvone, vit C, Limonene போன்ற ஆன்டி ஆக்ஸிடன்டுகள் அதிகம் இருப்பதால், புற்றுநோய், நாட்பட்ட நோய்கள் போன்றவற்றிற்கு சிறந்தது. மேலும் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இது நீரிழிவு நோய்களுக்கு சிறந்தது.
16. பாலூட்டும் தாய்மார்களுக்கு உண்டாகும் மார்புவலி மாற
பாலூட்டும் தாய்மார்களுக்கு, மார்பு பகுதியின் நுனியில் (Nipple) ஏற்படும் வெடிப்பு, வலி போன்றவற்றிற்கு புதினா இலையை அரைத்து தடவலாம் அல்லது கடைகளில் கிடைக்கும் புதினா எண்ணெயை (Mint oil) லேசாக தடவி வர அது குணமாகும் .
17. கவனிக்க வேண்டியவைகள்
புதினா சாறு 10 மில்லி, புதினா எண்ணெய் (Mint oil) 1200 மில்லிகிராம் (12 சொட்டு – 4 சொட்டு வீதம் மூன்று வேளை).
அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், அமிர்தமும் நஞ்சாகும் என்பது போல, கேடுகளையும் உண்டாக்கும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவர் ஆலோசனைப்படி மட்டுமே பயன்படுத்தலாம்.
நமது மூலிகை மருத்துவர்
Leave a Reply