வரவு எட்டணா செலவு பத்தணா என்றால் அதிகம் இரண்டணா கடனில் போய் தானே முடியும். நம் முன்னோர்களில் பெரும்பான்மையோர் கடன் வாங்குவதை மிகவும் அவமானமாகவே நினைத்து வாழ்ந்தனர். வருவாய்க்கு ஏற்பவே செலவுகளைச் சுருக்கி வருவாய்க்குள் வாழவே முற்பட்டனர். குடும்பத்தில் உள்ள இல்லதரசிகளும் கணவன் உழைத்துப் பொருள் தேடிக்கொண்டு வந்து கொடுப்பதைச் சிக்கனமாகச் செலவிட்டு அதில் சிறு தொகையை (சிறுவாடு) கணவருக்குக் கூட தெரியாமல் சேமித்து வைப்பர். அதனைக் குடும்பத்தின் அவசர அவசியத் தேவைக்குத் தக்க சமயத்தில் கொடுத்துக் கடன் வாங்காமல் குடும்ப கௌரவத்தைக் காத்து வந்தனர்.
இந்தியக் கலாசாரத்தின் மேன்மையே எளிமையான வாழ்க்கை முறைதான். இந்த வாழ்க்கை முறையில் ஆடம்பரமும், பகட்டும், வீண் செலவுகளும் இருந்தது இல்லை. அதனால் கடன் சுமை இன்றி நிறைவு பெற்றனர். குறிப்பாகக் கிராமப் பகுதிகளில் வாழ்ந்த பெரும்பான்மையான விவசாயிகளும் அதனைச் சார்ந்த தொழிலாளர்களும் விளைச்சல் நன்கு வந்த காலங்களில் உணவு தானியங்களையும், அதனை விற்று வந்த பணத்தையும் முடிந்த மட்டும் சேமித்து வைத்துக் கொண்டனர். வருகிற ஆண்டுகளில் மழை இன்றி விளைச்சல் குறைந்தாலும் சேமித்த தானியங்களை உணவுக்காகவும் சம்பாதித்த பணத்தைக் கொண்டே தேவைக்கு ஏற்ப வீடு அமைப்பதையும், பராமரிப்புப் பணிகள் செய்வதையும் உழவுக்குத் தேவையான மாடுகள், உபகரணங்கள் வாங்குவதையும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை பகட்டும், அனாவசிய செலவுகளுமின்றி எளிய முறையில் நடத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
பிறரோடு ஒப்பிட்டுப் பார்த்துத் தாம் அவர்களை விடப் பெரியதாகவோ, ஆடம்பரமாகவோ காட்டிக் கொள்ள அவர்கள் நினைத்தது இல்லை. பிறர் மெச்ச வேண்டுமென்பதற்காக ஆடம்பரப் பொருட்களை கடன் வாங்கியாவது வீட்டில் நிறைத்து விட அவர்கள் விரும்பியதும் இல்லை. தங்கள் சந்ததியினரும் அளவறிந்து சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பெரியவர்கள் வலியுறுத்துவார்கள். உணவுப் பொருட்கள் வீணாவதை அவர்கள் சகித்துக் கொள்வதில்லை. உடை உடுத்துவதிலும் தங்கள் தேவைக்கு மட்டுமே எளிய பருத்தி ஆடைகளை அணிந்தும் நல்ல உடல் உழைப்பு செய்தும் ஆரோக்கியம் பெற்றனர். நம் தேசபிதா மகாத்மா காந்தி தமிழகத்திற்கு வந்த போது இங்குள்ள விவசாயிகள், தொழிலாளர்கள் அணிந்திருந்த வேட்டி, துண்டை பார்த்து விட்டு அதே போல் தன் வாழ்நாள் முழுவதும் எளிய கதர் வேட்டி, துண்டையே அணிந்து மகிழ்ந்தார். அந்த உடையுடன் லண்டன் வட்ட மேஜை மாநாட்டிற்கே சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ராஜாஜி, காமராஜ், ஜீவானந்தம், ஈ.வே.ரா. போன்ற எண்ணற்ற தலைவர்கள் சிக்கனமான, எளிய வாழ்க்கை வாழ்ந்து, மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தனர். சமீபகால வாழ்க்கை முறை சுமார் அரை நூற்றாண்டு காலமாகவே ஆடம்பரமும், பகட்டும், வீண் செலவுகளும், தேவைக்கு மிகுதியாகப் பொருட்களை, உடைகளை வாங்கிக் குவிக்கும் விபரீதப் போக்கையே பரவலாகக் காண முடிகிறது. இன்றைய இளைஞர்கள் தங்கள் பெற்றோர்களின் வருவாயைக் கருத்தில் கொள்ளாமல், வசதி படைத்தவர்கள் போல் தங்களைக் காட்டிக் கொள்ள முயல்வதும், கூடா நண்பர்களுடன் கேளிக்கை என்ற பெயரில் மது, விருந்து என்று வீண் செலவுகளைச் செய்து பெற்றோர்களுக்கு பெரும் சுமையாக ஆகிவிடும் போக்கு அதிகரித்து வருவதைக் காண்கிறோம். இதனால் குடும்பத் தலைவர்கள் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும், அதனை வட்டியோடு சேர்த்துக் கட்ட முடியாத சூழ்நிலையில் தன்னையே மாய்த்துக் கொள்வதும் அன்றாடச் செய்திகளாகி விட்டன. இங்கே அவ்வையின் “நல்வழி” பாடல் ஒன்று நினைவு கூறத்தக்கது.
“ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் போன திசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ் பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு”
ஒருவன் தனக்குரிய வருமானத்தைவிட அதிக அளவில் செலவு செய்தால் மானம் இழப்பான், மதி இழப்பான், திருடன் என்று பழிக்கப்படுவான், நல்லவர்களுக்கும் பொல்லாதவன் ஆகிவிடுவான். ஏழு பிறவியிலும் தீயவனாய் விளங்குவான் என்று தீர்க்கமாய் உரைத்தது. மக்களை நல்வழிப்படுத்துவதற்காகத்தான்.
நம் தேசப்பிதா மகாத்மா காந்தி கடன் வாங்குவதையும், இலவசங்கள் கொடுப்பதையும், அறவே வெறுத்தவர் மட்டுமல்ல வாழ்வில் அதனை முற்றிலும் தவிர்த்தவர் என்று பெருமையுடையவர். ஏழையாக இருந்தாலும் கடன் இன்றி வாழ முற்பட வேண்டும். அதுதான் வறுமையிலும் செம்மை எனப் போற்றப்படுவது. ஓர் அரேபியப் பழமொழியும் இதனை மெய்பிப்பதாகவே உள்ளது. “கடன்படாத ஏழ்மை பெரும் செல்வம் என்கிறது” வங்கிகளில் கடன் வாங்கினாலும், தனியாரிடம் வாங்கினாலும் குறைந்த வட்டியோ, அதிக வட்டியோ கடன் கடன் தானே. வங்கிகளும், தனியார் நிதி நிறுவனங்களும் போட்டியிட்டுக் கொண்டு எத்தனையோ கடன் திட்டங்களை அறிவித்து விடுகிறது. வங்கிகளில் கடன் வாங்கித் திரும்பச் செலுத்த முடியாதவர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர். பெரும் தொகை கடனாகப் பெற்றவர்கள் கடனைத் தீர்க்க முடியாமல் நாட்டை விட்டே சென்று விடுகின்றனர். வங்கிகளின் வாராக் கடன் பாக்கியோ பல லட்சம் கோடி. இதே நிலை நீடித்தால் பெரும்பாலான தேசிய வங்கிகள் திவாலாகி நாட்டில் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிதான் ஏற்படும். அரசோ, வங்கிகளோ மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தை உண்டு பண்ணுவதற்கான திட்டங்களையும், தொழில் சார்ந்த பல திட்டங்களையும் கொண்டு வந்து மக்களுக்கு வேலை வாய்ப்பளித்தாலே ஒரு குடும்பத்தின் பொருளாதாரம் மட்டுமல்ல நாட்டின் பொருளாதாரமே மேன்மை அடையும். வருவாய் குறைவாக இருந்தாலும் கேடில்லை, செலவினங்கள் வருவாயை விட அதிகமாகாமல் பார்த்துக் கொண்டால் போதும் என்ற உயரிய பொருளாதாரச் சிந்தனையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவப் பெருந்தகை
“ஆகாறு அளவிட்டித்தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை” (குறள் – 478) என்றுரைத்தார். மொத்தத்தில் அறநூல்களும், அறிஞர்களும் அறிவுறுத்தும் அறநெறியாதெனில், வருவாய்க்குள் வாழப்பழகு. கடன் வாங்கி கௌரவத்தை இழக்காதே. எளிமையான, இனிமையான, உண்மையான வாழ்க்கை வாழ்ந்திடு என்பது தான். கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ் கருத்தும் இங்கே நினைவு கூறத்தக்கது. “மனநிறைவு என்பது இயற்கையிலே நம்மிடம் உள்ள செல்வம் ஆடம்பரம் என்பது நாம் தேடிக் கொள்ளும் வறுமை” என்கிறார். நல்ல கருத்துக்களைப் படித்தாலும், செவிமடுத்தாலும் விளையும் பயன் சிறிதளவு தான். அதனை வாழ்வில் கடைப்பிடித்தால் மட்டுமே பெரிதும் நற்பண்புகளையும், பலன்களையும் பெற்று செம்மையுற இனிதே வாழ்ந்திட முடியும்.
– இரா. இராஜராம்
Leave a Reply