யானையொன்றை விழுங்குவதுபோல்
நான் கண்ட கனவு
விடிகாலையின் பாயில் சுருட்ட முடியாமலிருந்தது.
யானையாகக் கண்டது
எனது காலத்தையா
கற்பனையையா
என்னையா
நானொரு கோயில் யானையிடம்
நாலைந்து நாள் பேசிப்பார்த்தேன்
யானை என்னிடம் பேசிய மொழி
தமிழைப்போல் எனக்குப் புரிந்தது
சாலையோரத்தில்
வாகனங்களின் சக்கரங்கள் காறித்துப்பும் மழை வெளியில்
எனது முகம் போய் அலைகிறது.
யானை போல் ஊர்திகள்
சாலையை நிரப்புகின்றன
எதுவும் சொல்வதற்கில்லை
அனாதைக் கனவாய்
திசைகளில் அடித்துச் செல்லப்படுகிறது பெருஞ்செவிகள்.
ஒருமுறை
வானவில்லில் எனது நிறத்தையும்
சேர்க்கலாமென்று யானை சொன்னது
நானப்போது ஒரு நல்லமிளகின்
அளவிலிருந்தேன்.
ராஜன் ஆத்தியப்பன்
Leave a Reply