சிரிப்புகள் ஒன்றை ஒன்று
முட்டிப் திரியும் வகுப்பறைக்குள்ளே
ஆசிரியை சொல்லிக்கொண்டிருந்தார்
“குழந்தைகளே
உங்களை யாராவது
விரும்பத் தகாத வழியில்
தொட அனுமதிக்கக் கூடாது”
உடலின் குறிப்பிட்டப் பாகங்களை
சுட்டிக் காட்டினார்.
கிச்சுகிச்சு மூட்டிய உணர்வோடான
சிரிப்பில் குழந்தை முகங்கள்
“அவ்வாறானசூழலில் என்ன செய்வீர்?”
ஆசிரியையின் கேள்வியில்
வகுப்பறை அமைதியாயிற்று.
கிணற்றுள் கல்லெறியும் தொனியில்
ஒரு குழந்தை
“அவங்களுக்கு டிஸ்யும் டிஸ்யும்தான்
ஒரு பஞ்ச் ஒரு கிக் அவ்வளவுதான்
அப்படியே காலி பண்ணிருவேன்”
குழந்தையின் அடவுகளில்
கராத்தேவின் மஞ்சள் பட்டை மின்னியது
வகுப்பில் சிரிப்பு அலைகள்
ஊடாகவே
பாதுகாப்பாய் நகவர்வது
உதவிக்கரங்களைத் தேடுவது
ஆற்றுபடுத்துதல் என்றெல்லாம்
வகுப்பை திறமையாக நகர்த்திய ஆசிரியை
மீண்டும்
நினைவுபடுத்த தொகுத்துக்கூறினார்
தன்உடலின் பாகங்களைத் தானே தொட்டு
“இங்கத் தொட்டால் தப்பு
இங்கத்தொட்டாலும் தப்பு
இதோ இங்கேத் தொடுவதும் தப்பு
ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும்
மறக்ககூடாது… சரியா!” என்றார்.
தயங்கி எழுந்தொரு குழந்தை
“ஏன் மிஸ்
ஜீரோ மார்க் போட்டுருவீங்களா”
என்று கேட்டதும்..
பறந்துக்கொண்டிருந்தப்
பட்டாம்பூச்சிகளின்
சிறகுகள் கனமாய் கனத்தன…
இரா. அரிகரசுதன்
Leave a Reply