அணுக்கனிமப் படிமங்கள் அகழ்வு, இரண்டு அடுக்குச் செயல்பாடுகளாக இருக்கும். அணுக்கனிமப் படிமங்கள் நிலத்தின் மேற்பரப்பில் அமைந்துள்ளது. முதலில் நிலமேற்பரப்பில் இருந்து 2.5 முதல் 3 மீட்டர் ஆழம் வரையில் அகழ்வுப்பணிகள் நடத்தப்படும். அடுத்தகட்டமாக அடுத்த அடுக்கு அகழ்விக்கப்படும். 2 ஆவது அகழ்விப்பு முடிக்கும் போது கனிமப்பிரிவு ஆலையில் இருந்து கொண்டு வரப்படும் நிராகரிக்கப்பட்ட அணுக்கனிமங்கள் இல்லாத மண்ணைக் கொண்டு பள்ளங்கள் நிரப்பப்படும். அகழ்விப்பு சராசரி 6 மீட்டர் வரையிலும் அதிகபட்சம் 9 மீட்டர் ஆழம் வரையிலும் இருக்கும். நிலத்தடி நீர்மட்டம் நிலமட்டத்திற்கு 10 முதல் 15 மீட்டர் ஆழத்தில் உள்ளதால் அகழ்விப்புப்பணிகள் நிலத்தடி நீர்மட்டத்தில் குறுக்கிடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை வளங்கள் மீதுதொடர் தாக்குதல்
நாட்டின் உள்நாட்டு உற்பத்தியிலும் பொருளாதாரத்திலும் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. உள்நாட்டு உற்பத்தியில் நாட்டில் 3-ஆவது பெரியமாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. ஆனால், தொழில் வளர்ச்சியை மேலும் அதிகரிக்க ஒன்றியஅரசு தமிழ்நாட்டுக்கு எந்த உதவியும் வழங்கவில்லை. நம் நாட்டிற்கு வரும் வெளிநாட்டுத் தொழிற்சாலைகளை ஒன்றிய அரசு, தான் ஆளும் மாநிலத்துக்குக் கொண்டு செல்கிறது. இதனால் தொழில்வளம் முடங்கியதோடு வேலைவாய்ப்புகளும் இல்லாமல் போகிறது. அதே நேரத்தில் ஒன்றிய அரசுக்கு அதிக சி.எஸ்.டி கொடுக்கும் மாநிலமும் தமிழ்நாடு தான். தொழில், பொருளாதாரம், உற்பத்தி என அனைத்திலும் முன்னிலையில் நடைபோட்டுக் கொண்டிருக்கும் மாநிலத்தைச் சிதைக்கும் வகையில் இங்குள்ள இயற்கை வளங்களை அழித்து நாசகரத் திட்டத்தை ஒவ்வொன்றாக ஒன்றியஅரசு கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் ஏற்கெனவே மீத்தேன், ஐட்ரோகார்பன் திட்டங்களை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு முன் வந்த போது, கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழ்நாட்டின் நெற் களஞ்சியமான காவிரி டெல்டாப் பகுதிகளைப் பாலைநிலமாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்துக்கு கடும் எதிர்ப்புகளும் போராட்டங்களும் நடந்தன. அதன் பின்னர் இத்திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட்டது. இதேபோல் தேனி மாவட்டத்தை மையமாக வைத்து நியூட்ரினோ திட்டமும் கொண்டு வர முடிவு செய்தது. தேனி மாவட்டத்தில் மலையைக் குடைந்து அமைக்க திட்டமிடப்பட்ட நியூட்ரினோ ஆராய்ச்சித் திட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையையே அழிக்கும் வகையில் அமைந்தது எனக் கூறிப் போராட்டங்கள் நடந்தன.
தொடர்ந்து நடந்த போராட்டம் காரணமாக இத்திட்டத்தைக் கைவிட வேண்டிய நிலை வந்தது. கடல் வளங்களையும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் வகையில் சாகர்மாலா திட்டத்தைக் கொண்டு வர ஒன்றிய அரசு முயன்றது. இதற்கும் எதிர்ப்பு கிளம்பியதால் இத்திட்டத்தைக் கிடப்பில் போட்டுள்ளது ஒன்றியஅரசு. தற்போது ஏற்கெனவே கனிமங்கள் எடுப்பதனால் கடற்கரைக் கிராமங்களில் மக்கள் புற்றுநோயால் பாதிப்பு, கடல்சீற்றம் எனப் புகார்கள் கூறப்படும் நிலையில் மேலும், 1,144 எக்டேரில் கனிமங்கள் தோண்டி எடுக்க முடிவு செய்திருப்பது பேரதிர்ச்சியாக உள்ளது. தமிழ்நாட்டின் இயற்கை வளத்தைக் குறிவைத்துத் தொடர்ந்து இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்படுவதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் கடலோர மக்கள் புற்றுநோயினால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். புற்றுநோயின் தாக்கம் அதிகமாக இருப்பதால், சராசரி இறப்புவிகிதமும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. பல ஆண்டுகாலமாகக் குமரிமாவட்ட மீனவ சமவெளிமக்கள் இதனால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே கதிர்வீச்சு அதிகமாக உற்பத்தி செய்யக்கூடிய மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
_ பூ.வ. தமிழ்க்கனல்
Leave a Reply