எப்சம் உப்பு

எப்சம் உப்பு

  • By Magazine
  • |

வீடுகளில் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் உப்பின் வேதியியல் பெயர் சோடியம் குளோரைடு ஆகும். ஆனால் எப்சம் உப்பு என்பது எப்சம் உப்பு மெக்னீசியம் மற்றும் சல்பேட் போன்றவற்றின் கலவையாகும். இதன் வேதியியல் அமைப்பின் காரணமாகவே உப்பு எனப்படுகிறது. இந்த உப்பு மருந்துக் கடைகளில் தான் கிடைக்கும்.  மசாலாக் கடைகளில் கிடைக்காது. இது மெக்னீசியம் குறைபாட்டினை நீக்கும் தன்மை வாய்ந்தது. இது வலிகள், காயங்கள், தசைவலிகள், வீக்கங்கள், சோர்வு, பல்வேறு சரும பிரச்சனைகளை சரிச் செய்ய உதவும். பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கும், நச்சுக்களை அகற்றும் நிவாரணியாகவும் பயன்படுகிறது.

கணுக்கால்வலி, தலைவலி போக்க

வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு எப்சம் உப்பினைக் கலந்து முழங்கால் வரை நீரில் முழ்கும் படி வைக்க வேண்டும். இதனால் கணுக்கால் வலி குறையும். தலைவலி, மன அழுத்தம் போன்றவை மாறும். இவ்வாறு தொடர்ந்து செய்யும் போது உடலில் உள்ள நரம்புகள் புத்துணர்ச்சி பெறும். இதனால் நல்ல தூக்கம் உண்டாகும்.

அனைத்து விதமான பாத சம்பந்த நோய்கள் மற்றும் சோரியாடிக் ஆர்த்ரிடிக்ஸ் போன்ற நோய் உள்ளவர்கள் இதனை பயன்படுத்துவதால் நிவாரணம் பெற முடியும். சிலருக்கு கால்களில் ஆணி வளர்வதுண்டு. தொடர்ந்து சில நாட்கள் இந்த ஆணி வளர்ந்த கால்களை ஒரு பாத்திரத்தில் எப்சம் உப்பு சேர்த்து கலந்து நீரில் ஊற வைத்தால் படிப்படியாகக் கரைந்து விடும்.

மூளையில் செரட்டோனின் (Serotonin) என்ற வேதிப்பொருள் இருக்கிறது. இது நமது மனநிலையை சிறப்பாக வைத்திருக்க உதவும். இதைத் தேவையான அளவு உற்பத்தி செய்ய மக்னீசியம் தேவை. அதிகமான அட்ரனலின் (Adrenaline) சுரப்பு மற்றும் மன அழுத்தத்தால் மக்னீசியம் உடலுக்கு கிடைக்காமல் போய் விடும். சிறிது எப்சம் உப்பைத் தண்ணீரில் கலந்து குளித்தால் இந்த பிரச்சினையின் தீவிரம் குறையும். நமது உடலில் ஏற்படும் விறைப்பு, வலி போன்ற பிரச்சினைகளை குறைக்கவும் உதவுகிறது. மெக்னீசியம் நமது உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும் நச்சுக்களிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது.

வாரம் ஒருமுறை இந்த உப்பை பயன்படுத்தி குளிக்கும் போது அது நமது உடலுக்கும், சருமத்துக்கும் ஆரோக்கியம் தருகிறது.

நமது மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது நமது உடலில் அட்ரினலின் அளவு அதிகரித்து மெக்னீசியத்தின் அளவு குறைகிறது. மெக்னீசியம் நிரம்பி இருப்பதால் தண்ணீரில் கரைத்து இதை நாம் குளிக்க பயன்படுத்தும் போது இந்த சத்து சருமத்தின் வழியாக உடலுக்குள் செல்கிறது. இது செரட்டோனின் என்னும் ரசாயனத்தை உற்பத்தி செய்து நமது உடலில் அமைதி மற்றும் தளர்வுதன்மையை உருவாக்குகிறது. இந்த உப்பு சேர்த்து குளித்து வந்தால் அழகு மற்றும் ஆற்றலையும் பெற உதவுகிறது. உப்பு கலந்த குளியல் மன அமைதியை தருகிறது.

அரை கப் எப்சம் உப்பை இளம் சூடான ஒரு பாத்திரத்தில் நீரில் கலந்து பத்து நிமிடங்கள் காலை முக்கி வைத்தால் அரிப்பு, காலில் ஏற்படும் வெடிப்பு போன்றவை நீங்கும்.

இந்த எப்சம் உப்பில் உடலிலிருந்து வெளிப்படும் நச்சு உயிரணுக்களை வெளியேற்ற உதவும் சல்பேட்டுகள் நிரம்பியுள்ளன. இது போன்ற நச்சுக்களை வெளியேற்றுவதால் தசைவலி போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபட முடியும். இந்த உப்பு கலந்த நீரை பயன்படுத்துவதால் நமது சருமத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறவும் உதவுகிறது.

மேலும் உடலில் ஏற்படும் வேனல் கட்டி, முகப்பரு, உலர்ந்த உதடுகளையும் சரி செய்யும். நம் முகத்தில் ஏற்படும் அழுக்கை அகற்ற எப்சம் உப்பு பயன்படுகிறது. அரைத் தேக்கரண்டி எப்சம் உப்பை  தேங்காய் எண்ணெயில் கலந்து முகத்தில் தேய்க்கவும். பிறகு இதைக் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த உப்பு வீக்கத்துக்கு எதிராக செயல்படும். எனவே 2 தேக்கரண்டி எப்சம் உப்பினை ஒரு கப் நீரில் கலந்து வேனல் கட்டி உள்ள இடங்களில் தெளித்து வரும் போது இதன் பாதிப்பு குறையும்.

முடிகள், உதடுகள் பாதுகாப்புக்கு

ஹேர் கண்டிசனரில் சிறிது எப்சம் உப்பைக் கலந்து சுமார் கால்மணி நேரம் தேய்க்கவும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முடியில் உள்ள அழுக்குகள் வெளியேறும். தலை சுத்தமாகி முடி வளர்ச்சி அதிகமாகும். இதனை பயன்படுத்தி கால்களைக் கழுவுவதால் கால் சுத்தமாகும். மென்மையாகும்.

எப்சம் உப்புக் குளியலை எவ்வாறு மேற்கொள்ளலாம்?

சிறிது நேரம் இந்த உப்பை சூடான தண்ணீரில் ஊற வைத்து கரைந்த உடன் இந்த நீரை நீங்கள் பயன்படுத்தலாம். விருப்பப்பட்டால் 15 முதல் 20 நிமிடங்கள் வரை இந்தக் குளியலை எடுத்துக் கொள்ளலாம். இந்த எப்சம் உப்பை பயன்படுத்தும் போது சோப்பை தவிர்க்கவும்.

இரவு தூங்கும் முன் இந்த குளியலை எடுத்துக் கொள்வது நல்லது. அதன் பின் குறைந்தது 2 மணி நேரம் ஓய்வு எடுக்கவும்.

சோர்வடைந்திருக்கும் நமது பாதங்களை சுறுசுறுப்பாக்குவதற்கும் இந்த எப்சம் உப்பு பயன்படுகிறது. வசதியான நாற்காலியில் அமர்ந்து இந்த முறையினை மேற்கொள்ளவும். இறந்த செல்களை சருமத்தில் இருந்து அகற்ற உங்கள் கால்களை பியூமிஸ் கல்லால் தேய்க்கவும். பின் கால்களை நன்கு துடைத்து உங்கள் சருமத்தில் லோஷன் அல்லது கால்களுக்கு போடப்படும் கிரீம் போட்டு அத்துடன் ஏதேனும் எண்ணெய் கலந்து கால்களை மசாஜ் செய்யலாம். பிறகு முடிந்த அளவு வெளியில் செல்வதையும், நடப்பதையும் தவிர்க்கவும். தினம் குளிக்கவும், தலை துவட்டவும். தலை துவட்டும் துண்டுகளையும் இரவில் சிறிது நேரம் எப்சம் உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் ஊற வைப்பதால் மறுநாள் மென்மையாக மாறி இருக்கும். இந்த உப்பை செடி கொடிகளுக்கும் உரமாக பயன்படுத்தலாம். இதை அறிந்து கொண்டு முறையாக பயன்படுத்துவது நல்லது. ஆரோக்கியமானதும் ஆகும்.

– கஸ்தூரிபா ஜாண்ஸன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *