மத்திகோடு சிவகுமார் ஆசான்
பேட்டி கண்டவர் : ஜி.ஜெயகர்ணன்
ஆசான்கள் என்பவர்கள் ஆழம் காண முடியாத அறிவு பொக்கிஷங்கள் என்றால் மிகையல்ல. ஆம்புலன்ஸ், அதிநவீன மருத்துவமனைகள் ஒன்றுமே இல்லாத காலத்தில் கூட இவர்கள் பாரம்பரியமாக கற்றுக் கொண்ட கல்வியாலும் தங்களது அனுபவ அறிவினாலும் எண்ணிலடங்காத மனித உயிர்களை காப்பாற்றி வந்துள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அத்தகைய அறிவு ஜீவிகளான ஆசான்கள் தமிழகத்தின் தென்கோடியிலும் கேரளா போன்ற மாநிலங்களிலும் அதிகமாக காணப்படுகின்றனர். அப்படிப்பட்ட ஆசான்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உண்டு. அவர்களை அடையாளப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் புதிய தென்றல் சார்பில் தொடங்கப்பட்டு மாதந்தோறும் வெளிவருவது ஆசான்கள் என்ற இந்த பகுதி ஆகும்.
`நள்ளிரவு வரை காத்திருந்து வித்தைகளை கற்றேன் என்று தான் கற்று கொண்ட வீரதீர கலைகளை பற்றி பெருமையுடன் கூறுகிறார். கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே மத்திகோடு என்ற ஊரில் வாழ்ந்து வரும் திரு சிவகுமார் ஆசான்.
புதியதென்றலுக்காக அவரை சந்தித்தோம். அப்போது அவர் கூறியதாவது…
ஐயா தாங்கள் வீரதீர கலைகளை எப்படி எங்கே கற்றுக்கொண்டீர்கள்?
பரம்பரையாக எனது பாட்டன் திரு. பத்பநாபன் பொன்னம்பெருமாள் ஆசான், தாத்தா சின்னபூதத்தான் காலகுட்டி ஆசான், அப்பா குஞ்சுநீலன் ஆசான் ஆகியவர்கள் களரி அடிமுறையில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக திகழ்ந்தனர். எனது முன்னோர்களில் ஒருவரான திரு காலக்குட்டி ஆசான் அவர்கள் மதுரையில் வீசையில் மணிகட்டி ஆசான் அவர்களை போட்டியில் வீழ்த்தி மன்னரிடம் இருந்து பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறு வயதில் எனது அப்பா தவறிய காரணத்தால் எனக்கு களரி அடிமுறையை கற்க முடியாமல் போனது அப்பா சேர்த்து வைத்திருந்த சுவடிகளை படித்து அதன் மீது இளம் வயதில் ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக கருங்கல் அருகே செல்லங்கோணம் பகுதியில் உள்ள தங்கையா ஆசான் என்பவரிடம் அடிமுறையும், தெற்கு தமரக்குளம் பகுதியில் வடலிவிளை திரு செம்புலிங்கம் அவர்கள் வழி கற்று வந்த ஆசானிடம் கிழவி மின்னல் என்னும் சிலம்பம் (நெடும்கம்பு முறை) மற்றும் வாலி வழி நெடுதடி சிரமம் (கட்டைகம்பு முறை) கற்றுக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் எனக்கு கேரளாவில் அரசாங்க வேலை கிடைத்தது. அப்போது விளையாட்டாக ஒரு நண்பருடன் போட்டி போட்டு எனக்குத் தெரிந்த பூட்டு முறையின் மூலம் அவரை செயல் இழக்க செய்தேன்.
ஆனால் அவர் ஒரு புதிய முறையின் மூலம் என்னிடமிருந்து விடுவித்துக் கொண்டார். அந்த முறை மிகவும் வித்தியாசமாகவும், விசித்திரமாகவும் இருந்ததால் அந்த கலையை கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். அப்போதுதான் அந்த கலை வர்மக்கலை என்பதனை தெரிந்து கொண்டேன். பின்னர் அவரது உதவியுடன் அவரது தந்தையின் ஆசானான திரு. உண்ணி ஆசான் (திர்பாபூர் குடும்பத்தின் 108 அனந்திரவன்களில் ஒருவரும், மூத்த திருவடிகள் வழி திரு அனந்தபத்பனாபன் அவர்களின் நெருங்கிய உறவினருமான புன்னைக்காட்டு ஆசானின் பேரன்) என்பவரிடம் சுமார் 15 ஆண்டுகள் வர்மக்கலையும், களரி என்ற கலையையும் கற்றுக் கொண்டேன்.
முதலில் இந்த பயிற்சியில் சுமார் 20 பேர் இருந்தனர். நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கடைசியில் நான் உள்பட மூன்று பேர் மட்டுமே பயிற்சியில் தேறினோம். இப்படி இருக்கும்போது ஒரு நாள் பணியின் நிமித்தமாக கேரளாவில் உள்ள மலையின் கீழ் என்ற பகுதிக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அப்போது அந்தப் பகுதியில் ஒரு துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார் அவரை பார்ப்பதற்கு தினமும் நோயாளிகள் உட்பட பலர் வந்து சென்றனர். அவரது அறையின் வெளியே “சர்வரோக நிவாரணி தட்சனை கொடுத்து வாங்க வேண்டும்”என்று எழுதப்பட்டிருந்தது. தட்சனை என்றால், பணம் என்று பொருள். இவர் ஒரு உண்மையான துறவியாக இருந்தால் இவருக்கு எதற்கு பணம்? பணம் வாங்குபவர் எப்படி உண்மையான துறவியாக இருக்க முடியும் ? என்ற கேள்விகள் எனது மனதில் எழுந்தது. எனவே அவரிடமே இதனை நேரில் கேட்டு விட வேண்டும் என்று துணிந்தேன். அவரது முன் சென்று அமர்ந்திருந்தேன். அவர் என்னிடம் என்ன என்று விசாரித்தார் அப்போது நான் எனது மனதில் தோன்றியவற்றை சொன்னேன்.
நீங்களோ ஒரு துறவி துறவிக்கு ஆசை இருக்கக் கூடாது. ஆனால் நீங்கள் வாசலில் பணம் தர வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறீர்கள் அது ஏன் என்று கேட்டேன்.
அதற்கு அவர் நான் தட்சனை என்று சொல்லி இருப்பதன் அர்த்தம் பணம் அல்ல அதன் உண்மையான அர்த்தம். உங்கள் மனதில் உள்ள அழுக்குகளையும், ஆசாபாசங்களையும் (மூன்று மலங்களாகிய ஆணவம், காமியம், மாயை) எனக்கு தந்து விட்டு என்னிடமிருந்து கலைகளை கற்றுக் கொள்ளுங்கள் என்று அர்த்தம் என்று கூறினார்.
அவரது கருத்தும் நடவடிக்கையும் எனக்கு பிடித்திருந்ததால் அவரிடம் யோகக் கலையை கற்பதற்காக சேர்ந்தேன்.
இப்படி அவரிடம் பயிற்சிக்காக பல ஆண்டுகள் சென்று கொண்டே இருந்தேன். அப்போது பயிற்சியில் என்னுடன் சுமார் 19 பேர் இருந்தனர். திடீரென ஒரு நாள் அனைவரையும் அழைத்த துறவி இன்று நீங்கள் அனைவரும் என்னுடன் சாப்பிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதன்படி அனைவருக்கும் ஆன உணவு ஒரே இலையில் ஒரே கூட்டமாக படைக்கப்பட்டது அந்த ஒரே கூட்டத்திலிருந்து கை போட்டு தான் அனைவரும் சாப்பிட வேண்டும் என்று கட்டளையிட்டார் அந்த துறவி.
அந்தத் துறவியோ குளிப்பதில்லை. எப்போதும் அழுக்கான உடைகளுடன் காணப்படுவார். உடலில் மண் ஒட்டினால் கூட அவற்றை தட்டி விட மாட்டார். அந்த அசிங்கமான தோற்றத்துடன் அவரும் அந்த இலையில் இருந்த உணவை உண்பதற்காக எடுத்துக் கொண்டார்.
இதனால் என்னுடன் இருந்த மாணவர்களில் பலர் முகம் சுளித்தனர். அந்த உணவை சாப்பிடுவதற்கு அவர்கள் தயங்கினர். எனவே அவர்களிடம் உங்களுக்கு இன்னும் மனப்பக்குவம் வரவில்லை. உங்கள் மனதில் இன்னும் ஆசாபாசங்கள் நிறைந்திருக்கிறது. நீங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருங்கள் வேளை வரும்போது உங்களுக்கு நான் கற்றுக் கொடுக்கிறேன் என்று கூறிவிட்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பல மாணவர்கள் பயிற்சிக்கு வரவில்லை. இப்படி பல வடிகட்டல்களுக்கு பின்னர் மீதம் 6 பேர் மட்டுமே இருந்தனர். ஒரு நாள் திடீரென எங்களை அழைத்து இன்று உங்களுக்கு கற்றுத் தருகிறேன் காத்திருங்கள் என்று கூறினார்.
நாங்கள் காத்திருந்தோம் காலையில் வர வேண்டிய துறவி வரவில்லை… மத்தியானமும் வரவில்லை… சாயங்காலமும் வரவில்லை… இரவும் வரவில்லை… ஆனாலும் இரவில் அனைவரும் வெகு நேரம் விழித்திருந்தோம். அப்போதும் வரவில்லை… இதனால் சோர்ந்து போய் பலர் உறங்கச் சென்று விட்டனர். நாங்கள் மூன்று பேர் மட்டும் உறங்காமல் இருந்தோம்.
நள்ளிரவு திடீரென தனது குகையில் வந்து அமர்ந்தார் துறவி விளக்குகளை பற்ற வைத்தார். பின்னர் எங்களை கையை காட்டி கூப்பிட்டார். நாங்கள் அருகில் சென்று எங்களுடன் உள்ளே தூங்கிக் கொண்டிருக்கும் மூன்று பேரை அழைக்க வேண்டுமா என்று கேட்டோம்.
அதற்கு அவர் “உறங்கியவன் செத்தான் உறங்காமல் இருக்கும் நீங்கள் மட்டும் வாருங்கள்” என்று எங்கள் மூன்று பேரை மட்டும் அழைத்து பல வித்தைகளை கற்றுக் கொடுத்தார்.
அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டோம். அவரிடமிருந்து கற்றுக் கொள்வது மிகவும் சிரமமான காரியம் என்றாலும் அவரிடம் உள்ள பல ரகசியங்கள் வேறு பலரிடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கலைகளை கற்றுத் தந்து விட்டு இந்த கலையை மனப்பக்குவம் உள்ளவர்களுக்கு மட்டுமே கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். அந்த துறவி அந்த விதத்தில் எனது உறவினரான முனைவர். ஜேம்ஸ் என்பவருக்கு மட்டுமே என்னால் கற்றுக் கொடுக்க முடிந்தது. மட்டுமல்லாமல் அந்த காலத்தில் புன்னைக்காட்டு ஆசானின் பேரனாகிய திரு. உண்ணி ஆசானிடம் ஒரு வர்மத்தை கற்றுக் கொள்வதற்கு ஒரு பவுன் கொடுத்து கற்றுக் கொண்டிருக்கிறேன். களரியில் உள்ள பாடங்கள், சுவடுகள், ஆயுத முறைகள், பூட்டு பிரிவுகள், ஒளிவு முறைகள் போன்ற பல்வேறு முறைகளை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். முக்கியமாக அடிச்சு குஸ்தி-24 என்ற அடவு முறைகளை திரு. உண்ணி ஆசான் அவர்களிடம் கற்றுக் கொண்டேன்.
அது குஸ்தி போன்றது நம்மை தாக்க வரும் எதிரியை அடிமுறை மூலம் தடுத்து விட்டு குஸ்தி முறையின் மூலம் அவரை தரையில் வீழ்த்தி விடுவது அந்த முறையாகும். இதனை யாரும் யாருக்கும் எளிதில் கற்றுக் கொடுக்க மாட்டார்கள். நான் நிறைய பேருக்கு களரி கற்றுக் கொடுத்திருக்கிறேன். ஆனால் வர்மம் கற்றுக் கொடுக்கும் அளவிற்கு ஒரு சிலர் மட்டுமே தேறி உள்ளனர்.
யாருக்கும் எளிதில் வர்மம் கற்றுக் கொடுக்கக் கூடாது. ஏனென்றால் வர்ம சூத்திரம் என்ற நூல் என்ன சொல்கிறது என்றால்
அப்பனே சீசன் என்று 12 வருடம் காத்தால்
அறிவான புத்தி அவனுக்கு இருந்ததனால்
பொருள் வாங்கி நூல் தான் ஈயே
ஈவதுதான் யாருக்கப்பா சிவயோகிக்கு
சிவயோகிக்கு என்றால் தன் உயிர் போல்
இன்னுயிரை நினைப்பவராக இருக்க வேண்டும்
இகத்தில் உள்ள மனிதருக்கு ஈந்தாயானால்
சாவதுதான் கடை நரகில் விழுவாய் சொன்னேன்.
என்று சித்தர்கள் கூறியிருக்கிறார்கள், எனவே எல்லோருக்கும் மர்மம் கற்றுக் கொடுக்க முடியாது.
களரி அடிமுறை போன்ற விஷயங்களை பொருத்தவரையில் தங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சியாக நீங்கள் கருதுவது எது?
கேரளாவில் ஒரு இடத்தில் வைத்தியம் தொடர்பான கருத்தரங்கம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த ஆங்கில மருத்துவ மாணவன் ஒருவர் வர்மம் என்பது வெறும் பொய் அப்படி எதுவும் கிடையாது. வைத்தியர்கள் பணம் பறிப்பதற்காக வர்மம் என்ற பெயரை பயன்படுத்துகிறார்கள் என்று கூறி வர்மம் இருந்தால் அதை நிரூபித்து காட்டுங்கள் என்று சவால் விட்டார்.
அவரிடம் பலமுறை எடுத்துக் கூறியும் அவர் ஒத்துக் கொள்வதாக இல்லை. அவர் அதனை தன்னிடம் நிரூபிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
எனவே வர்மக்கலை என்ற ஒன்று இருப்பது நிரூபிக்க வேண்டும் என்று நினைத்து அவரது உடலில் ஒரு வர்ம பகுதியை அரை மாத்திரை அளவு பிடித்தேன் உடனே அவர் கத்தி கதறி விட்டார்.
பின்னர் அதனை சரி செய்து அவரிடம் வர்மத்தை பற்றி விளக்கங்களை எடுத்துக் கூறினேன் பின்னர் அவர் ஏற்றுக் கொண்டார்.
மேலும் ஒருமுறை சதுரகிரி என்ற இடத்திற்கு நண்பர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்போது வெளியூரிலிருந்து வந்த ஒருவர் கீழே விழுந்து அடிபட்டு மயக்கம் அடைந்து விட்டார். அவரது நாக்கு வெளியே தொங்கிவிட்டது. அவரை காப்பாற்ற வேண்டுமானால் பல கிலோமீட்டர்கள் மலையில் தூக்கிக்கொண்டு நடக்க வேண்டும். அது அவ்வளவு எளிதான காரியம் இல்லை அதற்குள் அவரது உயிர் போய் விடுவதற்கு வாய்ப்பு உள்ளது.
எனவே அவருடன் வந்தவர்களிடம் நான் அவரை மருத்துவம் பார்க்கலாமா என்று கேட்டேன். அதற்கு அவர்கள் சரி என்று சம்மதம் தெரிவித்தனர். உடனே நான் கற்றுக் கொண்ட கலையின் மூலமாக அவரது உடலில் உள்ள ஒரு வர்ம புள்ளியில் பிடித்து அவரை மயக்கத்தில் இருந்து எழுப்பி காப்பாற்றி விட்டேன். இவை எனது வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் ஆகும்.
அந்த காலகட்டத்தில் இருந்த களரி மற்றும் வர்மக்கலைக்கும் இப்போது உள்ள கலைகளுக்கும் வேறுபாடு என்ன என்று உணர்கிறீர்கள்
அந்த காலத்தில் உள்ள களரி மற்றும் வர்ம கலை தான் இப்போதும் எப்போதும் உள்ளது புதிதாக எதையும் ஏற்படுத்த முடியாது. ஆனால் பலர் வர்மக்கலை பற்றி அதிகம் தெரியாமல் தனக்கு தான் எல்லாம் தெரியும் என்று கூறிக்கொண்டு பணம் பறிப்பதற்காக மக்களை ஏமாற்றி வருகின்றனர். அவர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார் அவர். புதிய தென்றல் சார்பில் நூறாண்டுகள் வாழ அவரை வாழ்த்தி விடை பெற்றோம்.
Leave a Reply