பிறரை வென்று வாழ்வதற்காய்ப்
பித்தலாட்டம் செய்வதுவும்
உறவை எல்லாம் மிதிப்பதுவும்
உண்மை தன்னை மறைப்பதுவும்
திறமையாக ஏய்ப்பதுவும்
திருடிப் பொருளைச் சேர்ப்பதுவும்
புறமே கூறி நடப்பதுவும்
புகழைத் தருமென்(று) எண்ணாதே!
அறமே இல்லாச் செய்கைகளால்
ஆதிநாளில் கிடைப்பதெலாம்
இறவாப் புகழென்றாகாதே;
ஈசல் வாழ்வே அதற்குண்டு:
மறந்தும் கேடு செய்யாமல்
மனிதநேயத் தொண்டுடனே
சிறந்த செயலைச் செய்வோர்க்கே
சீரும் பேரும் நிலைத்திருக்கும்!
நிறமும் இனமும் மதமுமெலாம்
நேர்மையற்ற பேதங்கள்;
பிறரையும் தன் உடன்பிறப்பாய்ப்
பேணி அணைத்தல் வாழ்நீதி;
நறவாம் இந்நல் வாழ்வினையே
நரகல் ஆக்கல் கீழ்ச்செயலே;
அறத்தோ டென்றும் வாழ்தல் தான்
அழியாப் புகழை உனக்கீயும்!
– கே. பி. பத்மநாபன்
Leave a Reply