நூற்றாண்டுகளுக்குப்பின்
அங்கு செல்ல முடிந்த நான்
அதன்
இறுகித் திரண்டெழுந்து நிற்கும்
கனத்த பெரிய கதவம் காண்கிறேன்
சட்டை களைய வைக்கப்பட்டேன்
வெற்று மார்போடு
எனக்கான தேவதைகளைக் கண்டு
குறைதீர்க்க வேண்டுமென்று
சோதிடம் வழி
உள்ளேறினேன்
கருங்கல் பாவிய
பிரகாரம் முழுதும்
புறக்கணிப்பின் கூக்குரலால்
நிறைந்திருப்பதை
உணரத் தொடங்கியபோது
பதற்றமுற அவசரமானேன்
யாழிகளின் கோரைப் பற்களில்
மனித சதைத் துணுக்குகள்
சிற்பங்களின் அழகில் வடிகிறது
செங்குருதி
எனக்கெதிரே
இன்னொரு மொழியில்
யாரோ தீர்மானஞ்சொல்ல
கலவரமடைந்தேன்
வெளியேறும் திசைகளில்
யானைகளை வளர்க்கிறார்கள்
நந்தனை எரித்த சாம்பலைப்
பூசிக்கொண்ட என்போன்றிகள்
அங்கிருந்த கமண்டலத்தில்
தலைகீழாய் குதித்தபடியிருக்க
சட்டையைக் கையில் நுழைத்தபடி
தலைகிறுங்கித் தப்பிக்க ஓடுகிறேன்
தயங்கியபடி
என்பின்னே ஓடிவருகின்றன சில நூற்றாண்டுகள்.
ராஜன் ஆத்தியப்பன்
Leave a Reply