ஜப்பானில் தியானத்தை ஜா.ஜென் என்பார்கள். ஜா.ஜென் என்றால் உட்கார்ந்து விடுவது என்று பொருள். ஒன்றும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருப்பது. ஒரு ஜென் துறவி ஒரு நாளுக்கு ஆறிலிருந்து எட்டு மணிநேரம் சும்மா உட்கார்ந்திருக்கிறார். ஒன்றும் செய்யாமல் சும்மா அப்படியே உட்கார்ந்திருக்கிறார். அப்படிச் சில நாட்கள், வாரங்கள், மாதங்கள் உட்கார்ந்திருக்கும் போது மனம் தானாக ஓய்ந்து போகிறது. புத்தி பேதலித்தவர்களை ஜென் மடங்களுக்கு அழைத்து வருவார்கள். அங்கே அவர்களுக்கு எந்த சிகிச்சையும் தருவதில்லை. உட்கார்ந்திருக்க உதவுவார்கள். உணவு தருவார்கள். அங்கே அவர்களுக்கு எந்த சிகிட்ச்சையும் தருவதில்லை. அவர்களுக்கு எந்தத் தொல்லையும் தருவதில்லை. அவர்கள் மீது எந்த கட்டுப்பாட்டையும் திணிப்பதில்லை. தூரமாக இருக்கும் குடிசைகளில் அவர்களை விட்டுவிடுகிறார்கள். அவர்களுடைய தேவைகளை கவனித்துக் கொள்கிறார்கள். அப்படியே உட்கார்ந்திருக்கச் சொல்கிறார்கள் அல்லது படுத்துக் கொள்ளலாம் அல்லது நின்று கொண்டே கூட இருக்கலாம். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டியத் தேவையில்லை அவ்வளவுதான். அவர்களுடைய கொந்தழிப்பு அடங்கிப் போகிறது.
இதில் இப்போது மேற்கத்திய உளவியலாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். பல வருடங்கள் முயன்றும் சரிசெய்ய முடியாத பைத்தியங்களுக்கு மின்சார அதிர்ச்சி தருகிறார்கள். இதையும் அதையும் செய்கிறார்கள். விளைவு? மேலும் கொந்தளிப்புதான். அப்படியே அவர்களுடைய சிகிட்சை ஓரளவுக்கு உதவியாக இருந்தாலும் நோயாளிக்கு உணர்வு தப்பிப் போகிறது. பேதலிப்பைக் கட்டுப்படுத்தி விடுகிறார்கள். ஆனால் உணர்வுகள் மரத்து போய் விடுகின்றனவே! மின்சார அதிர்ச்சிக்குப் பின் அவன் அதே ஆளாக இருக்க முடியாது. அந்த அதிர்ச்சி வெகு ஆளாத்துக்குப் போய் விடுவதால் ஓரளவுக்கு அவனுடைய புத்திச்சாலித்தனம் நிரந்தரமாக பாதிக்கப்பட்டு விடுகிறது. பேதலிப்பு போய்விடுகிறது. ஆனால் அடிப்படை குணங்கள் நிரந்தரமாக பாதிக்கப்படுகின்றன. இதில் எந்த லாபமும் இருப்பதில்லை. சாதாரணமானவனாக்கி விடலாம். ஓரளவுக்குப் புத்தி மழுங்கிப் போய் மந்தமானவனாகிப் போகிறான்.
ஜென் மடங்களில் எதுவும் செய்வதில்லை. அவர்களுக்கு லாவோத்சூவின் மிகப்பெரிய ரகசியம் ஒன்று தெரிந்திருக்கிறது. ஒன்றும் செய்யாதே. சும்மா உட்கார்ந்திரு… கவனி… எண்ணமும் தானாக அடங்கிப் போகும்… ஏன்? கொந்தளிப்பில் இருப்பது இயல்பானதல்ல. எப்படி எது ஒன்றும் கொந்தளித்துக் கொண்டே இருக்க முடியும்? கோபமாக இருக்கிறதா? சும்மா அப்படியே உட்கார்ந்து உன் கோபத்தை வேடிக்கை பார். கண்களை மூடிக்கொண்டு வேடிக்கை பார். எத்தனை நேரம் கோபத்தோடு இருக்க முடியும் என்கிறாய்? முயன்று பாரேன்! சில நிமிடங்களுக்குப் பின் திடீரென கோபம் இனியும் உன்னிடம் இல்லை என்பதை தெரிந்து கொள்வாய். அதனுடைய வேகம் தணிந்து விட்டது அல்லது அடுத்த அரைமணி நேரம் கழித்து நீ கோபப்பட்டாலும் அந்த கோபம் உன்னிடம் இருந்ததும் கூட மறந்து போகிறது. வேறு எதைப்பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறாய். அப்படி அந்த கோபம் இருந்து கொண்டே இருந்திருந்தால் யாரையாவது கொன்று போட்டிருப்பாய் அல்லது ஓர் உறவைத் தொலைத்திருப்பாய் அல்லது ஒரு காதலை கொன்றிருப்பாய். காதலைக் கொல்வது காதலியைக் கொல்வதை விட ஆபத்தானது. அழகான எதையாவது அல்லது மென்மையான எதையாவது சிதைத்திருப்பாய். ஆனால் சும்மா உட்கார்ந்திருந்தால் கோபம் தானாக அடங்கிப் போகிறது. அப்படி அடங்கிப் போவதற்குக் காரணம் ஆழத்தில் ஒரு விதி இயங்கிக் கொண்டிருக்கிறது. கொந்தளிப்பு நிரந்தரமாக இருப்பதற்கு வாழ்க்கை விடுவதில்லை. நிரந்தரமாக இருக்க முடியாது. நிச்சலம் தான் நிரந்தரம். எல்லாமும் அடங்கி போய் விடுகிறது. அதற்கு வேண்டிய நேரத்தைத் தர வேண்டும். அவ்வளவு தான். அதற்குச் சற்றே நேரம் தேவைப்படுகிறது.
– ஓஷோ
Leave a Reply