எத்தனை நாளைக்குத்தான் தொண்டனாகவே இருக்கிறது. கொடி பிடிக்கிறதும் சுவரொட்டி ஒட்டுறதுமாகவே போய்ட்டுருந்துச்சுண்ணா நமக்கு என்ன மதிப்பு…
திருமூர்த்தி தீவிரமாய் யோசித்தான். நாமளும் கவுன்சிரலாகணும். அப்புறம் எம்.எல்.ஏ அமைச்சர்னு போய்ட்டே இருக்கணும்.
சீட்டு கிடைக்கணும், மக்களையும் நம்ம பக்கம் திருப்பணும். சட்டென்று ஒரு திட்டம் மனதில் பட்டது.
அன்று மாலையே நண்பர்களை சந்தித்தான். திங்கள்கிழமை கலெக்டர் ஆபீஸ்க்கு மனு கொடுக்க போவணும்டா…
என்ன மனு… எப்படி மனு… சும்மா மொட்டையா மனு கொடுக்க போகணும்னு சொன்னா எப்படி…
நண்பர்கள் புரியாமல் அவனை பார்த்தார்கள். அதான் நம்ம பஜார்ல இருக்கிற டாஸ்மாக் கடையை எடுக்குறதுக்கு…
என்ன திடீர்னு…
திடீர்னெல்லாம் இல்ல… ரொம்ப நாளா உறுத்திட்டிருந்த விசயம் தான். மக்கள் நெருக்கடி அதிகமா உள்ள இடத்துல அந்த கடை இருக்கு. வேலைக்கு போற பெண்கள், படிக்கிற பிள்ளைங்க எல்லாம் அந்த வழியாக தான் போறாங்க… குடிச்சுட்டு ரோட்டுலேயே விழுந்து கிடக்கிறாங்க… நம்ம ஊர்லேயே பாத்தல்ல. எத்தனை குடும்பங்கள் நாசமாயிட்டு இருக்குதுன்னு.
“சரி… இந்த கடையை எடுத்தா குடிக்க மாட்டாங்களா… பக்கத்து ஊர்ல போய் வாங்கிட்டு வரப் போறாங்க…”
பக்கத்துல இருக்குறதுனால தானே கண்ட கண்ட நேரத்துல குடிச்சு நாசமாக போறாங்க… அதோட கடை அந்த இடத்துல இருக்குறது தான் நமக்கு பிரச்சினை…
“சரி… ஒரு முடிவெடுத்துட்ட… போயிடலாம். மனு கொடுத்துட்டா உடனே நடவடிக்கை எடுத்துருவாங்ககளா”
“அதெல்லாம் லேசுப்பட்ட காரியமில்ல… முதல்ல மனு கொடுப்போம் அடுத்து அப்புறமாக யோசிக்கலாம்.”
நண்பர்கள் கலைந்தார்கள்.
திருமூர்த்தி இன்னும் சில நண்பர்களுக்கு கைபேசியில் தகவல் தெரிவித்து விட்டு முகநூல் போன்ற எல்லாவற்றிலும் செய்தியை பகிர்ந்தான்.
கிட்டத்தட்ட ஞாயிற்றுக்கிழமை இந்த செய்தி பலரை சென்றடைந்திருந்தது.
திங்கள்கிழமை…
திருமூர்த்தியே எதிர்பாரத விதத்தில் இருபது பேர் அவனோடு மனு கொடுப்பதற்காக வந்திருந்தார்கள்.
மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து விட்டு வந்தார்கள். ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே பத்திரிகை பேட்டியும் கொடுத்தான். நிகழ்வுகளை உடனுக்குடன் கைபேசியில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் ஏற்றினான்.
அடுத்த செயல்பாடுக்கான திட்டத்தையும் வகுக்க ஆரம்பித்தான். எப்படியும் இந்த மனுவுக்கு தீர்வு கிடைக்க போவதில்லை. பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்பாட்டம் நடத்தி விட வேண்டும்.
கட்சியின் ஒன்றிய மாவட்ட பொறுப்பாளர்களையும் வரவழைத்து விட வேண்டும்.
கட்சி ஆர்ப்பாட்டமாகவும் இருக்க வேண்டும். பொது மக்களையும் உள்ளே கொண்டு வந்து விட வேண்டும்.
திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தான். ‘ மதுக்கடை கண்டன ஆர்ப்பாட்டம்’ நகரமெங்கும் சுவரொட்டி பரபரப்பை உருவாக்கியிருந்தது.
வீடுகளிலும் கடை வீதிகளிலும் துண்டறிக்கை கொடுத்தான். பேருந்து நிலையம் அருகிலேயே கண்டன கூட்டம் அனுமதி வாங்கி விட்டான்.
கட்சி சார்பாக நடத்தினாலும் சில பொது அமைப்புகளும் கலந்து கொள்ள சம்மதித்திருந்தன. வணிகர் சங்கமும் சேர்ந்து கொண்டது. மாற்று கட்சியினரும் கூட ஆதரவு அளித்தார்கள்.
சனிக்கிழமை மாலை ஐந்து மணிக்கெல்லாம் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது. ஒருவர் மதுக்கொடுமைகளை பற்றி பேசினார். இன்னொருவர் சாராய தொழிற்சாலை வைத்திருக்கும் அரசியல்வாதிகளை பற்றி பேசினார்.
டாஸ்மாக் கடை இருக்கும் தெருவில் உள்ள நபர் பேசும் போது ஆவேசமாகி விட்டர்.
“ என் பொண்ணு பகலிலேயே தனியா வெளிய போய் வர முடியல. அச்சப்படுறா… அந்த அளவுக்கு டாஸ்மாக் கடை இருக்குற பகுதி சீரழிஞ்சு கிடக்கு. உடனடியாக அந்த கடையை எடுக்கணும், எங்கேயாவது காட்டுல வையுங்க…இல்லேன்ன சுடுகாட்டுல வையுங்க… அடிச்சுட்டு அங்கேயே படுத்து கிடக்கட்டும்.”
பேசிக்கொண்டே வந்தவர் திருமூர்த்தியை புகழ்ந்து பேசி விட்டு பேச்சை முடித்தார். அங்கு பேசிய எல்லோருமே திருமூர்த்தியை பாராட்டி விட்டு சென்றார்கள்.
கடைசியாக பத்தாம் வகுப்பு மாணவியை பேச வைத்திருந்தான் திருமூர்த்தி. தன் குடும்பத்தில் நிகழ்ந்த நிகழ்வை பேசினாள்.
தந்தை குடித்தே இறந்ததையும் அண்ணன் போதையில் விபத்தில் பலியானதையும் கண்ணீர் மல்க எடுத்துரைத்தாள். “ எங்கேயிருந்துடா பிடிச்சுட்டு வந்த அந்த பொண்ண…
நண்பர்கள் ஆச்சரியப்பட்டு கேட்டார்கள். தெரிஞ்ச குடும்பம்… என்ன நினைச்சோனோ அது நடந்துக்கிட்டுருக்குது. சமுக வலைத்தளம், பத்திரிக்கையிண்ணு இந்த செய்தி பரபரப்பாக ஓடிக் கொண்டு இருக்கிறது.
ஆனா இதுக்கெல்லாம் அசர மாட்டாங்கடா… இன்னும் நியை வேலை இருக்கு…
“என்னடா சொல்ற…”
“ அமுத சுரபி மாதிரி டாஸ்மாக் ஒரு பண சுரபி… அத அவ்வளவு சீக்கிரம் இழுத்து மூட மாட்டாங்க… இன்னும் இரண்டு வாரம் பார்த்துட்டு அடுத்த கட்ட செயலுல இறங்கிடணும். “
“என்ன பண்ணலாம்ங்கிற”
“முற்றுகை போராட்டம் தான், கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு வந்தவங்க அத்தனை பேரும் வந்தாலே போதும். கொஞ்சம் பொது மக்களையும் திரட்டிரணும்.”
“இதெல்லாம் பண்ணிட்டா மூடிருவாங்களாடா”
“மூட மாட்டாங்க… இன்னும் வேலை இருக்கு. முதல்ல இத பார்ப்போம். அதுக்கப்புறம் அடுத்த கட்ட நடவடிக்கையில இறங்கிருவோம்.”
நம்ம திருமூர்த்தியா இப்படி பேசுவது என்று ஆர்வமாகவும் ஆச்சரியமாகவும் அவன் பேசுவதை கேட்டார்கள் நண்பர்கள்.
முற்றுகை போராட்டத்திற்கு உண்டான வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான்.
கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு வந்தவர்களை நேரில் சந்தித்து பேசினான்.
கட்சியின் மாவட்ட செயலாளரிடமும் பொறுப்பாளர்களிடமும் பேசி கட்சிக்காரர்களை அதிகமாக வரச் செய்து விட வேண்டும் என்று நினைத்தான்.
செயல்பாடுகள் பரபரப்பாக இருந்தது. வலைதளங்களில் பற்றிக் கொண்டது.
சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் எல்லாம் பரபரப்பை கூட்டிக் கொண்டிருக்க மக்களும் ஆவலுடன் அந்த நாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இன்னும் இரண்டு நாட்கள் இருக்கையில் மண்டல பொறுப்பாளர்களிடமிருந்து அழைப்பு வந்தது.
இதைத்தானே எதிர்பார்த்தேன். உள்ளுக்குள் ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்ள ஒரு கெத்து ஏறியிருந்தது.
அதே உற்சாகத்தோடு மண்டல பொறுப்பாளர் லெனின் வீட்டிற்கு சென்றான். போர்டிகோவில் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்த லெனின் திருமூர்த்தியை அங்கிருந்த தகர நாற்காலியில் உட்காரச் சொன்னார்.
“காப்பி, டீ எதாவது குடிக்கிறியா…” “குடிச்சுட்டுதாண்ணே வந்தேன்…” கை காட்டியபடி பேசினான்.
“பரவாயில்ல… பெரிய பரபரப்பையே உருவாக்கியிருக்கிறாய்… இத்தனை நாளா எங்கய்யா இருந்த…
அவர் பேசப் பேச திருமூர்த்தி உள்ளுக்குள் ஒரு குத்தாட்டம் போட்டான்.
“சீட் வேணுமா…” “கட்சி சொன்னா நிக்கிறதுக்கு தயார் தானே”
“அதை நேரடியாகவே கேட்டு இருக்கலாமே… அதுக்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம், கலாட்டா…”
உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருந்த குத்தாட்டம் நின்றது.
“வர்ற் தேர்தல்ல கவுன்சிலர் சீட் உனக்குத்தான். அதுல மாற்று கருத்து இல்ல… இதே மாதிரி செயல்பாட்டிலேயே இரு. இந்த முற்றுகை போராட்டத்தை மட்டும் நிறுத்திரு…”
குத்தாட்டம் போட்ட காலில் பிசகியது போல் உணர்ந்தான்.
“என்னண்ணா சொல்றீங்க… எல்லாம் தயார் பண்ணியாச்சு… திடீர்னு வேண்டாம்னுட்டா நம்ம கட்சிக்கும் சேர்த்து தான் கெட்ட பேரு…”
“ நல்ல கேட்டுக்க… நீ மூடணும்னு சொல்ற கடை நல்ல இலாபத்துல ஓடுற கடை…”
அதனாலதான் எத்தனையோ பிரச்சினைகளுக்கு இடையிலேயும் அத எடுக்காம இருக்காங்க. மனு கொடுக்குறது, கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறதெல்லாம் இது வழக்கமாக நடக்கிறது தானேன்னு விட்டுட்டாங்க… இப்போ கடை முற்றுகையின்னு சொன்னதும் மேலிடத்துல இருந்து அழுத்தம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க…
ஒண்ணு தெரிஞ்சுக்க… போதைக்கு அடிமையாகி கெடக்குற இந்த முட்டாப் பயலுக இருக்கிற வரை தான் நமக்கெல்லாம் அரசியல்…போதையையும், வறுமையையும் ஒழிச்சுட்டா கூட்டம் சேர்க்கவும் முடியாது. தேர்தல்ல பணம் செலவு பண்ணி ஜெயிக்கவும் முடியாது.
சரக்கு வாங்கி கொடுத்தாதான் உனக்கு பின்னாடி நாலு பேரு வருவாங்க… கொடி பிடிக்கவும், போஸ்டர் ஒட்டவும் வருவானுங்க… புரியுதா… திருமூர்த்தி தலையாட்டினான்.
“என்னடா இவ்வளவு ஏற்பாடு பண்ணி வச்சிருக்கிறோமே… என்ன பண்றதுன்னு யோசிக்கிறியா…” ஆமா என்பது போல் தலையாட்டினான்.
“ ஒண்ணும் பிரச்சினை இல்ல… மதுக்கடை முற்றுகை, மது ஒழிப்பு பேரணியா மாத்திருவோம். நானே கலந்துக்கிறேன்… முதல்வர் கிட்ட மனு கொடுப்போம். தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருஷம் இருக்குது. அதுக்குள்ள மது ஒழிப்பு மாநாடு நடத்தி பிரதமர் கிட்ட மனு கொடுப்போம். அடுத்த கட்டமா மது ஒழிப்பு மாரத்தான் நடத்தி ஐ.நா சபைக்கே மனு கொடுப்போம்.
நம்முடைய ஒரே இலக்கு போதையில்லா உலகம். மாரத்தானுக்கு நம்ம தலைவரையே தலைமை தாங்க வச்சிருவோம். என்ன… திருமூர்த்தி தலையாட்டினான். “போயிடுட்டு வா… உற்சாகமா களமாடு… மறுபடியும் சந்திப்போம்” லெனின் விடை கொடுக்க திருமூர்த்தி எழுந்து வர்றேண்ணே என்று வணக்கம் வைத்து விட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தான்.குத்தாட்டத்தை நிறுத்தியிருந்த மனசு மெதுவாக ஆடத் தொடங்கியிருந்தது.
– நாசரேத் விஜய்
Leave a Reply