புதிய சட்டத்திருத்தம்- சில மாற்றங்கள்
பழைய குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி போலீசார் ஒரு வழக்குப்பதிவு செய்தால் அது குறித்த விபரங்கள் வழக்குப்பதிவு செய்தவருக்கோ அல்லது அவர் பக்கம் சாட்சி சொல்ல இருப்பவர்களுக்கோ வழக்கின் விபரம் தெரியாமலிருக்கும். நீதிமன்றத்திற்கு சாட்சி சொல்லச் செல்லும் போதுதான் வழக்கின் விபரத்தைப் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்தவருக்கும் சாட்சிகளுக்கும் தெரிவிப்பர். ஆதலால் சாட்சி சொல்லுபவர்கள் நீதிமன்றத்தில் அத்தனையும் கோட்டை விடுவர். குற்றவாளி எளிதாக வழக்கில் இருந்து தப்பிவிடுவான். நடந்த சம்பவம் ஒன்றாக இருந்திருந்தாலும் வழக்கின் குற்றப்பத்திரிகை சற்று மிகைப்படுத்தப்பட்டிருக்கும்.
அவ்வாறு சற்று மிகைப்படுத்தப் படாமலிருந்தால் ஒரு வழக்கும் நிற்காது. ஆனால் இந்த விஷயம் சாட்சிகளுக்கு தெரியாமலிருக்கும். இதனால் சாட்சிகள் ஒன்றை சொல்லுவார்கள், குற்றப்பத்திரிகை வேறொன்று சொல்லும். இதனால் வழக்கு நிற்காமல் போய்விடும்.
மேற்சொன்ன குறைபாடுகளை சரி செய்யவே தற்போதுள்ள குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்போதுள்ள நடைமுறை படி சம்பவம் நடந்த 90 நாட்களுக்குள் புகார் கொடுத்தவருக்கு வழக்கின் முன்னேற்றங்கள் குறித்து போலீசார் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். இதனால் வழக்கின் கூடுதல், குறைகளை சாட்சிகள் தெரிந்து கொண்டு நீதிமன்றத்தில் எளிதாக சாட்சி சொல்ல முடியும்.
அடுத்தபடியாக குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர் ஆகிய 14 நாட்களுக்குள் அவருக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட வேண்டும். அது மட்டுமல்லாமல் குற்றவாளிக்கு குற்றப்பத்திரிகை வழங்குவது போல் புகார்தாரருக்கும் அந்த குற்றப்பத்திரிகையின் நகல் ஒன்றையும் வழங்க வேண்டும். இதனால் வழக்கின் சாராம்சம் அனைத்தும் புகார்தாரருக்கும், இதர சாட்சிகளுக்கும் தெரிய வரும். இதனால் நீதிமன்றத்தில் நன்றாக சாட்சிச் சொல்லி குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கலாம். முன்பு இந்த நடைமுறை கிடையாது.
அடுத்தபடியாக முன்பெல்லாம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் தனியார் வழக்குகளில் வழக்குகள் பற்றிய விபரம் குற்றவாளிக்கு அழைப்பானை சென்ற பிறகு தான் தெரியவரும். அதாவது முன்பு தனியார் வழக்குகளில் குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர் இல்லாத நிலையில் அவருக்கு எதிராக சாட்சியங்கள் சொல்லப்பட்டு அது சரியென்று கண்டுபிடிக்கப்பட்டால் நீதிமன்றம் குற்றவாளிக்கு சம்மன் அனுப்பி அவரை நீதிமன்றத்திற்கு வரவழைக்கும்.
வழக்கு சரியில்லையென்றால் நீதிமன்றம் அந்த வழக்கை ரத்து செய்துவிடும். இப்போது நிலைமை வேறு. ஒருவருக்கு எதிராக ஒரு தனியார் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட உடனே அது குறித்து நீதிமன்றம் எதிர்தரப்பினருக்கு தெரிவித்துவிடும். இப்போது குற்றவாளியாகக் கருதப்படும் நபர் முன்னிலையில் தான் சாட்சிகள் விசாரணை நடக்கும். ஆதலால் சாட்சியின் அடிப்படையில் குற்றவாளி இது பொய்யான வழக்கு என நீதிமன்றத்தில் முறையிட்டு அந்த வழக்கை உடனே ரத்து பண்ண முடியும். ஆதலால் உண்மை, பொய் என்பதை இருதரப்பு வாதங்களையும் வைத்து தற்போது நீதிமன்றம் ஆரம்ப கட்டத்திலேயே ஒரு தெளிவான முடிவுக்கு வரலாம். முன்போ இது ஒரு தலைபட்ச விசாரணையாக மட்டுமே இருந்தது. இன்னும் நிறைய மாற்றங்கள் புது சட்டத்தில் வந்துள்ளன. பல மாற்றங்கள் ஏற்புடையதாக இருந்தாலும் சில மாற்றங்கள் ஏற்க்கத்தக்கும் வகையில் இல்லை.
வழக்கறிஞர் பி. விஜயகுமார்
Leave a Reply