சிப்பிச்சக்கர வர்மம்
சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான சுளுக்குவர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் சிப்பிச்சக்கர வர்மம் பற்றி அறிவோம்.
புறமுதுகில் சுளுக்குவர்மத்தின் இருவிரல் கீழ் அமைந்ததே சிப்பிச்சக்கர வர்மமாகும். இந்த வர்மத்தை பதித்து அனுக்கிவிட்டால் சுழலி உண்டாகும் என்று வர்ம குருநூல் கூறுகிறது. இவ்வர்மம் சிப்பிக்குழிவர்மம், பூணூல்காலம், இரத்தம் துப்பி வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது.
“சுளுக்கு வர்மத்தின் ரண்டுவிரல் தாழே
பூணூல்காலம்”.
– வர்ம குருநூல்
“முன்னெல்லு ஒட்டையின் கீழ் ஆணிக்காலம்
மூன்று இறையில் பூணூலும் ஒழிந்துபாரு”.
– ஒடிவுமுறிவு நூல்
மேலும்,
தொடருகின்ற பூநூல்காலம் மார்வில்
தொட்டு நிற்கும் கண்ணருகீழ் இறைக்கும்
தாழே ஈடுபட குத்திடிகள் கொண்டதானால்
ஈரலிலே மார்வோடே கொளுத்திக்கொள்ளும்
குறுகுமொரு புறம் கொளுத்தி உடல் வியர்க்கும்
கூறுவேன் ஊசிபோலே குத்தும் மார்வில்
ஏகுமே மிஞ்சி சோரை முறிந்துச்சாடில்
எமனுயிர் கொள்ளுவதும் உண்மை தானே.
–வர்ம தாண்டவம்-500
பாரிடமாய் பூணூல்காலம் கொண்டால்
படுங்குணத்தை பாடுகிறேன் பாரில் மீதை
தாரிடமாய் மயங்கிடுமே மயக்கம் தீரும்
தக்ஷணமாய் வெகுகுற்றம் செய்யும் சொன்னோம்
வாரிடமாய் நாள் சென்றே வண்டு தண்டில்
வம்பிலை விழுந்தார்போல் நரம்புதான் கூடி
பாரிடமாய் வலுத்த புயம் விழும் சன்னி
வரும் கைகால் கோச்சிடும் பின் சரீரம் போமே.
–வர்ம கருவிநூல்-500
தானான பூணூல்காலம் கொண்டால்
தப்பாது செய்குணத்தை சாற்றக்கேளு
கோனான அழலுடனே இருமலுண்டாம்
தப்பாது மயங்கியுடன் மாறும் பாரு
மானான மண்டையிலே விதனமுண்டாம்
மாறியே உள் விறைத்து மயங்குமப்பா
கோனான குறிகளை நீ யறிந்துகொண்டு
கூறியே செய்துவிடு குணமுண்டாமே”.
– வர்ம அகஸ்திய சாரி
“பூணுலுக்குற்ற சுழல் மாற்றுதற்கு பூண்டமணிப்புறசர்வாங்கம்
வாணாளை வாங்கு சூத்திரநரம்பறி சென்னி செவிக்குற்றி
போனாளுக்குறவாகும் புண்ணியமாம் உள்சர்வாங்கம்
போற்றி மகோதண்டவில்லடங்கல் புகளும் மண்ணையோடு
ஆனாளுக்களந்துறவாக்கிவுடல் வசைத்துதறித்
தடவிநால்வசமும் நல்லனுக்குச்செய்திடவே
கோனாளுக்கிங்கு குதற்கமில்லைக் குறிப்பறிந்து
குறுந்தட்டி சேர் நீரருந்த நிலைப்படுமாமே”.
– வர்ம குருநூல்
எனவும் குறிப்பிடுகிறது. மேலும்,
சீரான சிப்பிச்சக்கரம் ஆடைநல் நடுக்குழியென்பார்மேலோர்
மாரான மார்பின் பின்னுற்றும் இஃததனை பூநூலும் என்பார்
வாரான வழியறிந்தால் வகையான பூநூல்தான் மூன்றதாகும்
பூரணமாய் அறிந்துணர்ந்தாலிது கடினம் என்னலானே.
–வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்:
சீராக விளங்குகின்ற சிப்பிச்சக்கர வர்மமானது ஆடையெல் எனப்படும் புய எலும்பின் நடுக்குழியில் உள்ளதாகும். மார்பின் பின் அமைந்த இந்த வர்மத்தை பூநூல்காலம் என்றும் சொல்வார்கள். வழிவழியாக கற்றுத்தேறிய வல்லுநர்கள் வாயிலாக அறியும்போது பூநூல்காலம் உடலில் மூன்று உள்ளது என்பார்கள். முழுமையாக இவ்வர்மத்தினை புரிந்துகொண்டால் இது மிகவும் கடினமான வர்மங்களில் ஒன்றாகும்.
என்னுறும் இவ்வன்மம் புறமுதுகில் சுளுக்கியின் கீழாம்
கன்னுற கொண்டிடிலோ மூச்சுபேச்சயரும் முடக்கமாகும்
முன்னுறும் மார்போடே கொழுத்தும் குத்தும் குதற்கமாகும்
வன்னுறவாம் வியர்வையுடன் விளிகேளாது தென்னலானே.
-வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்:
சிப்பிச்சக்கரம் என குறிப்பிடும் வர்மம் முதுகில் சுளுக்கு வர்மத்தின் கீழ் அமைந்துள்ளது. இந்த வர்மத்தில் தாக்கம் கொண்டால் மூச்சு முட்டும், பேச்சு வராது முடக்கமாகும். மார்பினுள் கொழுத்தும் குத்தலும் உண்டாகும். பல்வேறு துன்பங்களை விளைவிக்கும். மேலும் யார் அழைத்தாலும் பதில் சொல்ல முடியாவண்ணம் காதும் கேட்காமல் ஆகிவிடும் என்பதாம்.
விளியதுவும் கேளாது மயக்கமாகும் விதிமுடிந்தான் போல்
வழியதுவும் தேடியது பரபரக்கும் படபடத்து பதறும் மேனி
துளியதுவும் பொய்யாது தொடரும் பிணி பலதும் கூடி
களியதுவும் இல்லையடா கடமதுவும் கனக்குந்தானே.
-வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
சிப்பிச்சக்கர வர்மம் மாத்திரை மிஞ்சி கொள்ளும்போது விளிகேளாது மயக்கமுண்டாகும். சிலவேளை உயிர் விடப்போகும் கடைசி நிமிடம் போல் பரபரப்பு தோன்றி, இதயம் படபடத்து மனதில் ஒரு பதற்றம் தோன்றும். எப்படியாயினும் இவ்வர்மம் கொண்டவர்களுக்கு துளியளவும் தவறாது பல பிணிகள் தொடர்ந்துகொள்ளும். இது வேடிக்கையாக உரைப்பதில்லை. உடலதும் கனத்துக்காணும் என்பதாம்.
தானான வன்மமது பலதும் செய்யும் பழிகேடாய் அடக்கிவிடும்
கோனான மூச்சினுக்குப் பேதமாகிமுடக்கிவிடும் சடலம்வற்றிறும்
வானான வழியறியாது பிணிகள் பலபற்றியங்கே வதை வதைக்கும்
மானான மானிடர்க்கு பழிகள் செய்யும் சிப்பிச்சக்கரமென்னே.
-வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்:
சிப்பிச்சக்கரவர்மம் பல பல துன்பங்களை உண்டுபண்ணும். எவ்வளவு பலசாலி ஆனாலும் ஆணவங்கள் அடங்கிப்போகும். மூச்சுமுட்டு உண்டாகி முடக்கிவிடும். உடலில் நீர்வறண்டு வறட்சையுண்டாகும். என்ன காரணம் என்றறியாமலே பலபல பிணிகள் உண்டாகி வதை வதைக்கும். இப்படி மனிதர் தமக்கு பல பல நோய்பிணிகளை உண்டாக்கி பழிசெய்துவிடும் சிப்பிச்சக்கரவர்மந்தானும்.
சிப்பிச்சக்கரம் உழற்றுமடா சக்கரம் போல் வலியும் மிஞ்சி
அப்பியங்கு பிடித்தாற்போல் கொளுத்துடனே குத்துமாகும்
குப்பியங்கே உடைந்துடையும் சருகொலிபோல் சலசலத்து
தப்பிக்க வழியின்றி தடித்துழையும் அடிக்கடி என்னே.
-வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
சிப்பிக்சக்கர வர்மம் கொண்டால் சக்கரத்தின் சுழற்சி போன்று வலியுண்டாகும். ஏதோ பற்றிப்பிடித்தார்போல் கொழுத்தும் குத்துமாகி அடிக்கடி உள்நோக்கி சருகுகள் உடைந்த ஒலிபோல் தொடர்ச்சியான வலியாகி விடாது நின்று தப்பிக்க வழியின்றி (தீராது நின்று) அந்த இடம் தடித்து உழையும் தன்மையைப் பெறும் என்பதாகும்.
தொட்டுறத் தூண்டில் வன்மம் சிப்பிச்சக்கரம் குணமாம்
மட்டுறும் நடுக்கமுடன் மயக்கம் விக்கல் மனக்குமுறல்
விட்டுறும் குளப்பம் கூச்சம் கூடுறும் மயக்கமுமா மஃது
அட்டுறும் அதிவேர்வை அசதியும் தீர்க்குமென்னலானே.
-வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
இந்த வர்மத்தைத் தொட்டு இதமாகத் தூண்டிக்கொடுக்கும் போது நடுக்கம், மயக்கம், விக்கல், மனதில் ஏக்கம், குளப்பம், வெட்கம், இனம் புரியாத மனமயக்கம், அதிவேர்வை, அசதியும் தீர்ந்துவிடும் என்பதாம் என வர்ம யோகச்சூத்திரமும் குறிப்பிடுகிறது.
இவ்வர்மத்தில் தாக்கம் கொண்டால், சிப்பிக்குழியருகில் சத்தி நரம்புப்பகுதியில் (Dorso scapular nerve) ஓணானும், வண்டும் ஊர்ந்து செல்வது போன்ற குணங்களைக் காட்டும். இருமல் வரும், பரபரப்புடன் கோச்சலுண்டாகி மயக்கத்தை உண்டுபண்ணும். அவ்விடத்தில் உள்குத்தல் உண்டாகி, தசை வறண்டு, புயம் செயலிழந்துவிடும். இவ்வர்மம் இருபுறமும் ஒத்து பாதிக்கப்படுமானால் சன்னி, வலியுடன் கபம் மிஞ்சி உயிருக்கே ஆபத்தாகும். மேலும் தலைவலியுடன் அடிக்கடி மயக்கம், ஞாபகமறதி, அதிவியர்வை, இரத்தவாந்தி ஏற்படும். மீண்டும் உடலின் உட்பகுதியில் நடுக்கம் உண்டாகி மயக்கமடையும் என வர்ம சுவடிகள் குறிப்பிடுகின்றன.
இவ்வர்மத்தை இளக்குவதற்கு பாதிக்கப்பட்டவரை தூக்கி இருத்தி, அனுபவ முறைப்படி முன்னும் பின்னும் மாறலாக தடவி, அடங்கல்களை அனுக்கி, உடலைப் பிடித்து இருபுறமும் அசைத்துவிட்டு, நல்ல மருந்துகளும் செய்துவர நலம் உண்டாகும் என வர்ம நூல்கள் குறிப்பிடுகின்றன.
இவ்வர்மத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு பின்னாட்களில் அடிக்கடி மயக்கம், சிப்பித்தசை வறண்டு போதல், தலைவலி, நினைவிழப்பு, புயம் ஒடுங்கி செயலிழப்பு போன்ற பின்விளைவுகளில் ஏதேனும் ஒன்றோ பலவோ உண்டாகும் என வர்ம சுவடிகள் குறிப்பிடுகின்றன. இவ்வர்மத்தை தகுந்த தூண்டுமுறை நுட்பங்களைப் பயன்படுத்தி தூண்டிவர, இருமல், நடுக்கம், மயக்கம், நரம்புநோய்கள், அனைத்துவித வலிகள் குணமாகும் என அனுபவமிக்க வர்ம வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
– முனைவர் முல்லைத்தமிழ்
Leave a Reply