ஒரு நாட்டினுடைய முன்னேற்றம் என்பது பல கோணங்களைச் சார்ந்தது. அதில் அரசின் முதல் நோக்கம் மக்களின் வாழ்வியல் சார்ந்த அக்கரை. உணவு, வாழ்விடம், ஆரோக்கியம், கல்வி, விழிப்புணர்வு போன்றவைகளாகும். அதை சார்ந்து விவசாயம், சுகாதாரம், அறிவியல் கல்வி, நீராதாரம் போன்றவைகள் முதன்மையாக பராமரிக்கப்பட வேண்டியதும் கவனிக்கப்பட வேண்டியதுமாகும். மக்களின் விழிப்புணர்வுக்குள் இத்தகைய அவசிய தேவைகளின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டியது அரசின் கடமையாகும். எங்கு மக்கள் அச்சத்தாலும், பொருளாதார நெருக்கடியாலும் துன்பப்பட்டு வாழ்கிறார்களோ அங்கு மனவளமும், உடல்நலமும் எளிதில் பாதிப்படைய தொடங்குகின்றன. இந்த சூழலில் அவர்களுக்கு ஆறுதலாகவும், தைரியமாகவும், நிழலாகவும் இருப்பதாக தங்களுக்கும் மேற்பட்ட ஆற்றலை முழுமையாக நம்பி, அங்கு பல்வேறு சமூக கலாச்சார வாயிலாக தங்களை சமர்ப்பிக்கத் தொடங்குகின்றனர். இது அம்மக்களுக்கு மனத்துணிச்சலையும், ஓர் இனம்புரியாத மகிழ்வையும் அளிக்கிறது.
கோயில்கள், குளங்கள், நதிகள் என தங்கள் நம்பிக்கைகள் சார்ந்து பல்வேறு சடங்குமுறைகளை அடிப்படை சட்டத்திட்டங்களோடும் சுய கட்டுப்பாடுகளோடும் கடைப்பிடித்தும் வருகின்றனர். இருந்தாலும் பல்வேறு காரணங்களால் இத்தகைய வழிபாட்டு தலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல்கள், தள்ளுமுள்ளுகள், கட்டுப்பாடற்ற நெருக்கடிகள் பல உயிர்களை பல இடங்களில் பலிவாங்கிக் கொண்டிருப்பதும் காலங்காலமாகவே நடந்துகொண்டிருக்கும் ஒன்றாகவே இருந்துள்ளன. இன்றைய கல்வி வளர்ச்சியும், அறிவியல்பார்வையும் இத்தகைய மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் தவறி இருப்பதே கவலைக்கிடமாக உள்ளது.
பீகார் மாநிலம் ஓர் சிறந்த விவசாய முன்னேற்றமிக்க மாநிலம். இங்கு வாழும் பெரும்பான்மையினர் விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர். அவர்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் “ஜீவித் புத்ரிகா” எனும் பண்டிகை மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இஃது ஆண்டுதோறும் நடைபெறுவது என்பது அரசுக்குத் தெரியும். அப்படியென்றால் அரசு, மக்கள் நீராடும் இடங்களை ஆய்வுசெய்து அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுத்திருக்க வேண்டும். பிள்ளைகள் நலனுக்காக விரதமிருந்து தாய்மார்கள் புனித நீராடுவது வழக்கம். இந்த நீராட்டின் போது பீகாரின் பல மாவட்டங்களிலுமிருந்தும் வந்த சுமார் 43 பேர்கள் நீரில் மூழ்கி பலியாகி உள்ளனர். இதில் 37 பேர்கள் குழந்தைகள் எனில், இந்த நீராடலின் நோக்கமே அச்சம் தருவதாக உள்ளது. குழந்தைகள் நலுனுக்காக புனித நீராடலில் குழந்தைகளே அதிகமாக பலியாகி இருக்கும் தகவல் மிகவும் அதிர்ச்சிகரமாகவே உள்ளது.
பழங்காலத்தில், கங்கைநீரில் சங்கமமாகிவிட்டால் ஒரு மனிதன் செய்த பாவம் எல்லாம் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை உண்டு. இந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு நேரடியாக சொர்க்கம் சென்று விட வேண்டும் என்ற நோக்கில் நாடு முழுவதுமிருந்து முதிர்வயது ஆடவர்கள் காசிக்குச் சென்று நீரில் மூழ்கி தங்கள் ஆயுளை கங்கையில் கரைத்து சங்கமாகி விடுவார்கள். இன்று இப்பழக்கம் மிகவும் அருகி விட்டது. மக்கள் அத்தகைய செயல்களில் விழிப்புணர்வு அடைந்து விட்டனர்.
1992-ஆம் ஆண்டு கும்பக்கோணத்தில் நடந்த புனித நீராடும் நிகழ்வில் 60 பேர் பலியானார்கள். இந்த நிகழ்வுக்கு அன்று மக்கள் மத்தியில் பலவிதமான பேச்சுக்கள் எழுந்தன. முக்கியமாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்ட குறைபாடு, அக்கரையின்மை என பலர் பேசிக்கொண்டாலும், அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வருகையே அங்கு அதிக கூட்ட நெரிசலுக்கும், மக்கள் ஒரே இடத்தில் தேங்குவதற்கும் காரணமாயிற்று என்பது அன்றைய மக்களின் குற்றச்சாட்டாக இருந்தது.
முதலமைச்சர் அவர்கள் மகாமக குளத்தில் குளிப்பதை வேடிக்கை பார்க்க குவிந்த பக்தர்களின் கூட்டம் மட்டுமல்லாமல் பொதுமக்களின் கூட்டமும் தான் அங்குள்ள கோயில் சுவர்களின் இடிபாடுகளுக்கும், நீரில் மூழ்கி மக்கள் இறப்பதற்கும் முக்கிய காரணமாயிற்று. இதனை முன்கூட்டியே திட்டமிட்டு அங்குள்ள பாதுகாப்புகளையும், வலிமையையும் ஆய்வு செய்து பராமரித்திருந்தால் அறுபது உயிர்கள் அநியாயமாக பலியாகி இருக்காது என்பது அறிஞர்களின் புலம்பலாக இருந்தது. இதுபோன்று உலகெங்கும் நடைபெறும் கலாச்சார விழாக்களின் அறிவுப்பூர்வமான விழிப்புணர்வு, பண்டைய காசி யாத்திரை போல் நீர்த்து தங்கள் தங்கள் மனவளத்துக்குள் மாறுபடும் வழிபாடாக மாறிவிட்டால் மரணங்கள் குறைந்துவிடும். இந்த நிகழ்வுகள் அனைத்திற்கும் அந்தந்த பகுதி அரசு அதிகாரிகளின் கவனக்குறைவும், அக்கரையின்மையுமே காரணம் எனக் கருத இடமளிப்பதாகவும், முக்கியமாக ஜீவித்புத்ரிகா நீராடலில் குழந்தைகள் அதிகம் இறந்திருப்பது பல கோணங்களிலும் அச்சத்தையும் ஏற்படுத்துவதாக பொதுமக்கள் பேசும் பேச்சுகள் சிந்தனையைத் தூண்டாமலும் இல்லை.
ஆசிரியர்
Leave a Reply