காத்திருப்பு

காத்திருப்பு

  • By Magazine
  • |

இரண்டு கரைகளும் நிறைந்து வழியும் அளவிற்கு மண்ணியாற்றில் வருகிறது தண்ணீர். வழக்கத்தை விட சற்று அதிகம் தான். அந்த தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பது போல தெரிகிறது மூங்கில் தட்டிப்பாலம். ஆற்றை வேடிக்கைப் பார்த்தபடி அப்பாலத்தில் நின்று கொண்டிருக்கிறான் வீரா. வீரா ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன். தானிபுரம் தான் அவனது ஊர்.அரை கிலோமீட்டர் தொலைவில் இருந்து தினமும் பேருந்துக்கு ஆத்தியூர் வந்து விடுவான் காலை எட்டு மணிக்கு வரும் பேருந்தில் பள்ளிக்கூடம் செல்வதற்காக, ஏழரை மணிக்கெல்லாம் வந்து நின்றபடி வேடிக்கைப் பார்ப்பது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆற்றின் இரண்டு கரைகளிலும் நீண்டு உயர்ந்து, அடர்ந்து இருக்கின்றன தேக்குமரங்கள்.

தட்டிப்பாலத்தை தாங்கி நிற்கும் மூங்கில் தூண்களை சலசலவென  தண்ணீர் வேகமாக உரசிச் செல்லும்போது சுழி விழும்.கரையோரம் இருக்கும் கோரைகளுக்குள்ளிருந்து நீர்ப்பாம்புகள் வளைந்து வளைந்து செல்லும், கொஞ்சம் பயமாக இருந்தாலும் பார்க்க அழகாகவும் இருக்கும். கரையில் இருக்கும் அரச மரத்தின் இதய வடிவ இலைகளில் காற்று மோத வரும் ஒலிகளும் தண்ணீரின் சலசலப்பு ஒலிக்கும் உற்சாக நடனம் ஆடுவது போல வெள்ளிக் கெண்டை மீன் மேலே துள்ளி மீண்டும் தண்ணீரில் விழும். தட்டிப்பாலத்தில் செல்பவர்கள் ஆற்றில் தண்ணீர் நிறைய செல்கிறது பாலத்தில் நிற்காமல் ஓரமாக போய் நிற்க சொல்லி எச்சரித்து சென்றனர்.

அப்போது கீங்,,,,கீங்,,,என்ற ஹாரன் ஒலியோடு வெள்ளை நிற அம்பாசிடர் கார் கப்பி ரோட்டின் மேடு பள்ளங்களில் ஏறி இறங்கி அசைந்து  வந்துகொண்டிருந்தது.அதனுள் பெரிய விழி கொண்ட ஒருவர் கார் ஓட்டிக்கொண்டு வந்தார். தொப்பையும் பெரிதாக இருந்தது. முகத்தில் சிரிப்பு ஏதும் இல்லாமல், கடுகடுவென இருக்கும். பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் பயம் தொற்றி கொள்ளும். நிற்பவர்கள் எல்லாரும் குணிந்து கும்பிட்டு “வணக்கம் ஐயா” என்றனர். உக்கார்ந்திருந்தவர்கள் எழுந்து நின்று “வணக்கம் ஐயா” என்றனர். ஆனால் ,அவர் யாருக்கும் பதில் வணக்கம் சொல்லவில்லை, ஒரு புன்னகையால் கூட பதில் சொல்லாமல் எல்லார் மீதும் ஒரு பார்வையை மட்டும் வீசிச் செல்வார். வீரா வழக்கமாக பார்க்கும் வேடிக்கைகளில் இதுவும் ஒன்று. இன்று டீக்கடைக்கு வந்திருந்த அவனது அப்பாவும் கும்பிட்டு வணக்கம் சொன்னார்.

சுற்றியுள்ள நான்கு கிராமங்களில் உள்ளவர்கள் டீக்கடைக்கும், மளிகைப் பொருட்கள் வாங்கவும் ஆந்தியூர் கிராமத்திற்கு தான் வரவேண்டும். அங்குள்ள டீக்கடைகளின் வெளியில் சில கொட்டாங்குச்சிகள் இருக்கும், அந்த கொட்டாங்குச்சிகளில் சிலர் வெளியே நின்று டீ கேட்க உள்ளேயிருந்து பெரிய கரண்டிபோல் இருக்கும் குவளையில் இருந்து ஊற்ற, அதை நின்று கொண்டு குடிப்பார்கள். உள்ளே இருக்கும் ஓரடியுயர திண்டில் உக்கார்ந்து கண்ணாடி கிளாசில் சிலர் டீக் குடிப்பார்கள்.

     ‘பஸ் வந்துருச்சுப்பா -நான் போயிட்டு வரேன் என்றபடி பேருந்தில் முண்டியடித்து ஏறினான் வீரா. “பாத்துப்போப்பா நல்லாபடி” என்றார் அவனது அப்பா. அனைவரையும் ஏற்றி கொண்ட பேருந்து

புகையைத் தள்ளியபடி உறுமிக்கொண்டு புறப்பட்டது.

அவன் மனசும் அப்படித்தான் இன்றைக்கு உறுமிக் கொண்டிருந்தது. காரணம்,  இன்று அவனது அப்பாவும் காரில் வந்தவரை கும்பிட்டதுதான். உட்காருவதற்கு சன்னலோர இருக்கை கிடைத்தது உட்காந்து கொண்டான். கண்டக்டர்கிட்ட பஸ்பாஸ் காட்டிவிட்டு வெளியே முகத்தை திருப்பிக்கொண்டான். அவனது நண்பன் பிரபு அடுத்த நிறுத்தத்தில் ஏறினான். அவனிடம் கூட எதுவும் பேசவில்லை. காருக்குள்ள இருந்தவர் யார்? அவருக்கு ஏன் எல்லாரும் கும்பிட்டு வணக்கம் சொல்கிறார்கள். பதிலுக்கு வணக்கம் சொல்லவும் இல்லை. அவர் யாரென்று அப்பாவிடம் கேட்டுவிட வேண்டும் என்ற ஒரே யோசனை மட்டும் தான் அவனுக்கு இருந்தது.

“பஸ் ஸ்டாண்ட் வந்துருச்சு எல்லாரும் இறங்குங்க”

    “டேய் வீரா வா வா இறங்குவோம்” என்றான் பிரபு. புத்தகப்பையை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினான்.

” டேய் ஏண்டா உம்முன்னு வர்ர?” “வீட்ல ஏதாச்சும் சண்டையாடா” “இன்னைக்கு கணக்கு டீச்சர் டெஸ்ட் சொன்னாங்களே,படிச்சிட்டியாடா?

எந்த கேள்விக்கும் பதில் சொல்லாம ,தலையை கீழே குனிந்து கொண்டு நடந்தான்.பள்ளியிலும் யாரிடமும் சரியாக பேசவில்லை. வழக்கமாக பள்ளி முடிந்து வீட்டுக்குக் கிளம்பும் போது மறக்காமல் பிரபுவையும் கூட்டிட்டு கிளம்புகிற வீரா, இன்று அவசரமாக தனியே புறப்பட்டு பேருந்து நிலையம் வந்து பேருந்தில் இடம் பிடித்து அமர்ந்து விட்டான். பிரபு பேருந்தில் ஏறியதும் “டேய் உன்னை எங்கெல்லாம் தேடுறேன் ,நீ இங்க வந்து உக்காந்துட்டியா? இந்தா சாப்புடு, என்று வாங்கி வந்த உப்புக்கடலையை வீராவுக்கும் கொஞ்சம் கொடுத்தான். பதில் ஏதுவும் பேசாமல் கொஞ்சம் எடுத்துக் கொண்டான் வீரா.

ஆத்தியூர் வந்தாச்சு எல்லாரும் எறங்குங்க “என்று கண்டக்டர் சொன்னதும், கீழே இறங்கினான். ஆற்றில் கொஞ்சம் தண்ணீர் குறைந்திருந்தது. ஆற்றில் சிலர் மாடுகளை குளிப்பாட்டிக் கொண்டிருந்தனர். சிலர் படித்துறையில் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தனர். பார்த்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தான் வீரா.

திண்ணையில் கட்டியிருந்த ஆட்டுக்குட்டிக்கு முத்தம் கொடுத்து விட்டு, வீட்டுக்குள் புத்தகப்பையை ஆணியில் மாட்டினான்.

” ம்மா… ம்மா… எங்கம்மா இருக்க.” “வாப்பா… வந்துட்டியா  வா, சட்டைய கழட்டிபுட்டு முகம், கை, கால் கழுவிட்டு வா.”

“சோறு வடிச்சுட்டு சுடு கஞ்சிய எடுத்து வச்சிருக்கேன், மிளகு இடிச்சு கலக்கித் தரேன்  கொஞ்சம் குடி களைப்பு போகும்”

    “போம்மா, அதெல்லாம் ஒன்னும் வேணாம் .சரி… சரி… அப்பா எங்கம்மா?” ம்ம்ம்ம்… நானும் அதைத்தான் பாத்துகிட்டு இருக்கேன், உறுமத்துல போனதுதான், இன்னும் காணல.”

    “எப்பவும் மாட்ட வயலுல கட்டிட்டு  பொழுது சாயுறதுக்குள்ள ஒரு கட்டு புல்லு கொண்டாந்துடுவாரு, இன்னைக்கி மாடும் அவுக்கல,புல்லும் இல்ல, இரவுக்கு வெறும் வக்கல தான் உதறி போடணும்”

    “ம்ம்ம் கூம் போம்மா… நான் என்னா கேட்டா நீ என்னா சொல்ற”அப்பா எப்போ வருவாரோ? ” டேய் சின்னவனே,  வீரா, நான் கொல்லைய கூட்டி ஒதுக்கிட்டு வாரேன், குண்டான்ல கஞ்சி தண்ணி வச்சுருக்கேன்ல, அத பாட்டில்ல ஊத்தி, ஊட்டியப்போட்டு ஆட்டுக்குட்டிக்கு கொஞ்சம் ஊட்டுப்பா, பாவம் கத்திகிட்டு கெடக்கு,நீயும் கொஞ்சம் குடீன்னு ,சொல்லிட்டே வரக்… வரக்குன்னு கட்ட வௌக்காமற போட்டு குப்பையைக் கூட்டி ஒதுக்க தொடங்குனா.

“சரி…சரி வாம்மா. எனக்கு வேல வக்கிலன்னா உனக்கு தூக்கம் வராதே.”

“ரொம்ப அலுத்துக்காத, கஞ்சி தண்ணிய ஊட்டிட்டு வந்து, கண்ணாடி பாட்டில் வௌக்குல சீமண்ண ஊத்தி வைடா, இதா வந்துடுறேன்”

சரி,சரி நீ சீக்கிரம் வா”

எல்லாம் முடித்து, புத்தகப்பையை எடுத்து வீட்டுப்பாடங்களும் முடித்தான். அதற்குள் அம்மாவும் எல்லா வேலையும் முடித்து குளித்து, சமையல் வேலையும் முடித்தாள்.

அப்போதும் அப்பா வரவில்லை.அவன் நினைவில், காலையில் நடந்த நிகழ்ச்சியே திரும்ப திரும்ப வந்து வந்து போனது . “அம்மா… அம்மா, அப்பா எங்கம்மா போனாரு”

“இவன் வேற நொய் நொய்ன்னுட்டு,” என்னைக்கும் இல்லாம இன்னக்கி அப்பாவ தேடிட்டு கெடக்குறான். வந்துருவாருப்பா, தோ வர்ர நேரந்தான் என்றவாறு, இரும்பு குழாய் எடுத்து அடுப்ப ஊதுனா.

“எப்பம்மா வருவாரு”

“படிச்சிட்டியாப்பா, வா சாப்புடலாம்”

“ம்ம்ம், படிச்சிட்டேன்,

சாப்பிட்டு முடிச்சதும் வீட்டைப் பெருக்கி அம்மா இரண்டு புறமும் கோரை பிய்ந்து நைந்த பாயை விரித்துப் போட்டாள். வா வந்து படுப்பா காலையில பள்ளிக்கூடம் போகனும்ல என்றாள்.

தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து பாய் கோரையைப் பிய்த்து போட்டுபடி படுத்திருந்தான். வாசலில் அப்பா செறுப்பு கழட்டும் சத்தம் கேட்டது.

அப்பா என்று எழுந்து உக்கார்ந்து கொண்டான். ” வீரா… என்னப்பா இன்னும் தூங்காம இருக்க.? ஏன் தூக்கம் வரலயா? படிச்சியா? சாப்ட்டியா? “ம்ம்ம், படிச்சேன், சாப்ட்டேன் ப்பா” “அவன் சாய்ந்தரம் வந்ததுல இருந்து,  உங்கள தான் தேடுறான். அப்பா எங்க? எப்ப வருவார்ன்னு.” “ம்ம்ம்ம்… அப்புடியா, இந்தாப்பா வருக்கி சாப்பிட்டுருப்பா, தோ வந்துடுறேன் “

“நீங்க கை அலம்பிட்டு வாங்க சாப்புடலாம்” “தா வரன். இந்தா வெத்தல பொட்டலம்” கை அலம்பிட்டு துண்டை உதறி தரையில் உட்கார்ந்தார். அம்மா சாப்பாடு எடுத்து வைத்தாள். “மாட்டுக்கு இன்னக்கி புல்லுகூட பறிக்காம எங்க போனீங்க ? என்ன வேல? “மாட்டுக்கு வக்கல அள்ளி போட்டியா? “ம்ம்ம்ம்…. போட்டாச்சு ,”

சுட்ட கருவாட்டை ஒரு கையில் பிடித்து ஒரு கடி கடித்தபடி சொன்னார் அப்பா. “சேம்பர் வச்சுருக்கார்ல சிவராம பண்ணையார்”

“ஆமாம், அம்பாசிடர் கார்ல போவாரே ,அவருக்கென்ன?

அம்பாசிடர் கார் என்றதும் கடித்த வருக்கியை பாதியோடு நிறுத்தி காதை கூர்மையாக்கிக் கொண்டான் வீரா. ” ஆமா அவருதான் கூப்பிட்டு அனுப்பினாருன்னு நம்ம வேலு இல்ல அவன் வந்து கூட்டிட்டு போனான்”

“ஆமா,வேலு மாமா அவர் பண்ணையில தான் பண்ணையம் செய்றாரு !ஏன் எதாச்சும் பிரச்சனையா என்ன?

“ஆமா பிரச்சனைதான் எல்லா பயலுவலும் அங்கதான் குமிஞ்சி கெடக்குறானுவோ!,” “ஏன், என்னாச்சு, என்னா பிரச்சனை?

   “ஆத்தியூர்ல நம்ம சீனு வாத்தியார் சம்சாரம் மல்லிகா இல்ல” “ம்ம்ம்… ஆமாங்… வாய் துடுக்கா பேசுவாளே !ஏன் அவளுக்கென்ன?. “பெரிய தெருப்பக்கம் டீக்கட இருக்கறதால, அந்தப்பக்கம் யார் போனாலும், செருப்ப கழட்டி தல மேல வச்சுகிட்டுதான் போகனும். மீறி போனா அரச மரத்துல கட்டி புளியஞ் சிம்பாலயே அடிப்பாங்க. இவ மட்டும் நெஞ்சழுத்தமா செருப்பு கழட்டாம தான் போவா, வருவா! புருசங் கூட டிவிஎஸ் 50 வண்டில ஏறி உக்காந்துட்டு தான் போவா. கொஞ்சமும் பயந்தவ இல்ல.”

   “ம்ம்ம்… அப்புடித்தான் ஆகிப்போச்சு இப்போ” “அவகிட்ட என்ன வார்த்தன்னு பெரியதெரு ஆளுகளும் கொஞ்சம் யோசனையாக தான் இருப்பாங்க.”  “யாரா இருந்தாலும் நின்ன நெலயில பொட்டுல அடிச்சதுபோல என்னடான்னு கேக்குறவளாச்சே”

“அதுமட்டுமா,” கொஞ்சம் சோறு வை, “ஊர்ல இருக்குற பொண்டுகள எல்லாரையும் ஒன்னா தெரட்டி , கூட்டமா ஒக்கார வச்சு,கழனி காட்டுல வேலக்கி போனமா வந்தமான்னு இருக்கனும், எவனாச்சும் கட்டுனவன் மாறி பேரு சொல்லி கூப்புட்டா அங்கயே மூஞ்சில அடிக்கனும்னு அறிவுரை சொல்லும்.

     நல்ல திறமையான பொண்ணு.” வீராவின் நினைவுக்கு வந்தாங்க மல்லிகா. “நான் கூட பார்த்திருக்கிறேன் சீனு மாமா கூட வண்டியில் வந்து கடையில் இறங்குவாங்க. வட்டமா பெரிய குங்கும பொட்டு நெற்றியில் வைத்திருப்பாங்க,

வெற்றிலைப்போட்டு வாய் சிவந்திருக்கும்.” பார்க்க அழகாக மகாராணி போல இருப்பாங்க. என்கிட்ட கூட பேசியிருக்காங்க… “கோவிந்தம்மா மகன் தான நீ? “ஆமாங்”,”அதான் சாட  அப்படியே இருக்கு”.” அம்மா நல்லாயிருக்கா?. “ம்ம்ம்… நல்லா இருக்கு”. “எத்தனாவது படிக்கிற?

” ஏழாவது படிக்கிறேன்”

“நல்லா படிச்சிக்கோப்பா, படிப்புதான் நமக்கு சாமி, புரியுதா. படிச்சு பெரிய ஆளா வரணும். இந்த வெத்தல பொட்டலம், இதை நான் குடுத்தன்னு அம்மாட்ட குடு “இந்த பக்கோடா நீ சாப்புடு” ன்னு சொன்னாங்க. வாங்கிட்டு வந்தேன் நன்றாக நினைவில் இருக்கிறது.

“கொஞ்சம் குழம்பு ஊத்து, எதாச்சும் சொன்னா வாய் பாத்துகிட்டு ஒக்காந்துடுவ” “ம்ம்ம்ம் கூம் என்ன நொட்ட சொல்லலன்னா ஒனக்கு சோறு எறங்காது” “சரி சரி கோவிச்சுகாத, பண்ணையார் தோட்டத்துல யாரோட ஆடு, மாடு மேய்ச்சாலும் பண்ணையாளுங்க, ஓட்டிட்டு வந்து தோட்டத்துல கட்டிடுவானுவ. பண்ணையார் ஆடுகள தலைகீழா தொங்க விட்டு அடிப்பாரு. மாடுகளையும் கட்டி வச்சு அடிப்பாரு. ஆட்டுகாரன் மாட்டுக்காரன் யார் போனாலும் கண்டதும் ஏசிப்புட்டு, புளியஞ் சிம்பாலயே அடிப்பாரு.”எத்தனை நாள் ஆனாலும் போய் மன்னிப்பு கேட்டு அடி வாங்கிட்டுத்தான் ஆடு மாட்ட ஓட்டிட்டு வரனும் எல்லாரும் அவ்ளோ நடுங்குவாங்க”

“ஆமா… பழிபாவம் பாக்காத ஆளாச்சே ” என்றாள் அம்மா.

“ஆமாம் இன்னக்கி மல்லிகாவோட மாடு. பண்ணையார் தோட்டத்துல எறங்கி மேஞ்சிடுச்சு. பட்டிக்காவ பாக்குறானே ‘குள்ளவண்டு’

அவன் மாட்ட ஓட்டிட்டு போய் பண்ணையார் தோட்டத்துல கட்டிட்டான்”.

“அச்சச்சோ ம்ம்ம்ம்ம், அப்புறம் என்னாச்சு”

“மல்லிகா பண்ணையார் தோட்டத்துக்கு போயிருக்கு, அந்த நேரம் பத்து பண்ணையார் வெளில போயிருக்காரு.”

“அப்பறம் “

“மல்லிகா , மாட்ட ஓட்டிவந்து கட்டுனவன் யாருடா? என்னோட மாட்ட ஓட்டி வந்து கட்ட அவ்ளோ துணிச்சல் யாருக்குடா வந்தது? என் மாடு உங்க தோட்டத்துல மேய்ஞ்சா என்கிட்ட சொல்லு நான் இனிமே வரமா  பாத்துக்கிறேன். அதவுட்டுட்டு மாட்ட கொண்டு வந்து கட்டி வச்சிருக்க எங்கடா உங்க பண்ணையார்னு  கேட்டு ரகள பண்ணிருக்கு”.

“அவ கட்டுப்படமாட்டா,

“ம்ம்ம்… அது மட்டுமா?, மாட்டையும் ஓட்டிகிட்டு, உங்க பண்ணையாரு என் வீட்டு வாசல் வழியாத்தானே வரனும் வரச்சொல்லு, மாட்டுச்சாணிய கரச்சு ஊத்தி கட்ட வௌக்காமற சாணியில நனச்சு அடிக்கிறன் பாருன்னு காட்டு கத்தலா கத்திட்டு, காளி கணக்கா ஆடிட்டு வந்திருக்கா.

“என்னாதான் கேக்குறது நாயமா இருந்தாலும் வாயில வணக்கம் சனக்கம் வேண்டாமா பொண்ணா பொறந்தவளுக்கு?. அப்புறம் என்னாச்சு?

“அப்புறம் என்ன, பண்ணையார் வந்ததும் நடந்தத சொல்லிருக்கானுவ, அவர் கோபமாகி உடனே அப்படியா சொன்னா பறச் சிறிக்கின்னு கோபத்துல கிளம்பிருக்காரு.

“அப்பறம் அவங்காளுங்க கொஞ்சப்பேரு, ஐயா கொஞ்சம் கோபப்படாதீங்க, சீனு வாத்தியார் பொண்டாட்டி மல்லிகா சொன்னத செய்யுற ஆளு, மானம் போயிட்டா வராது. நீங்க இந்தப்பக்கமா வீடுக்குப் போங்க. அவ புருசன இங்க வரச்சொல்லி கண்டிச்சு அனுப்புவோம்னு சமாதானம் பண்ணி அனுப்பிருக்காங்க”.

” ஐயோ என்னா நடக்கப் போகுதோ? என்று அம்மா கண்ணை துடைத்துக் கொண்டாள். “பெரிய தெரு ஆளுக கூடி பேசிருக்காங்க. நம்ம வேலுதான் சொன்னானாம் தானிபுரம் ‘சிவசாமி’ சொன்னாதான் மல்லிகா கேப்பா, வேற யாரு சொன்னாலும் அடங்க மாட்டான்னு ,அதான் என்ன கூட்டிட்டு வர சொல்லிருக்காரு. வேலுதான் வந்து கூட்டிட்டு போனான்.

“ம்ம்ம்ம்… பண்ணையார் கோவமாத்தான் இருக்காரா? பாவி மவ ஏன் இப்படி பண்ண போனா? “ம்ம்ம்ம்… பண்ணையார் கோவமா தான் இருக்காரு. அவரு என்கிட்ட ஒன்னுமே பேசல. பெரியதெரு நாட்டாமங்க தான் பேசுனாங்க. இந்த பாரு சிவசாமி சண்ட வம்பு வரப்புடாது, அப்புறம் என்னா நடக்கும்ன்னு உங்க எல்லாருக்கும் நல்லா தெரியும். வாத்தியார கூப்பிட்டனுப்பியும் வரல. ஐயா கோவத்துக்கு ஆளாகக்கூடாது, போய் சொல்லிடுன்னு சொன்னாங்க. நானும் சரிங்க என்ன மீறி ஒன்னும் நடக்காது நான் சொல்லிபுடுறன்னு சொல்லிட்டு வந்தேன்.

” ஐய்யய்யோ… அவ கேப்பாளா ? நீ வாக்கு குடுத்துட்டு வந்துருக்கியே. வா அவளப்போய் இப்பவே பாத்துட்டு வந்துருவோம்”.

“நீ கொஞ்சம் பொறுமையா இருடி, நான் மல்லிகா வீட்டுக்குப் போயிட்டுதான் வரேன் .மல்லிகாவும், வாத்தியாரும்  ஊரையே ஒரே எடத்துல தெரட்டி ஒக்காந்துருக்காங்க. மல்லிகாகிட்ட சொல்லிட்டு வந்துருக்கேன் .அவசரபடாதம்மா, கொஞ்சம் அவசரப்பட்டா ஊர்க் கலவரம் ஆகிடும். யோசிச்சு செய்யலாம்ன்னு சொல்லிட்டு வந்துருக்கேன் .இருந்தாலும் இங்கேயும் ஆளுங்கள தெரட்டி வைக்கணும் எல்லாத்துக்கும் தயாரா இருக்கணும், பயந்தே வாழ முடியாதுன்னு சொல்ல” அம்மா வாயில முந்தானயை பொத்தி உறைந்து நின்றாள்.

அவன் அப்படியே தூங்கிப்போனான். காலையில் எழுந்து குளித்து முடித்து பேருந்துக்குப் புறப்பட்டு, வழக்கம்போல் தட்டிப்பாலத்தில் வந்து நின்றான். டீக்கடையில் கூட்டமே இல்லை. ஒரே அமைதி. பேருந்து வரும் நேரமாகியும் கார் இன்னும் வரவில்லை. தினமும் பார்க்கிறான்.  கார் வரவில்லை.  வரவேயில்லை.                                                                                                                                                                                                                                                 சிவ. விஜயபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *