வளவன் ஒரு வெற்றியாளன் என்ற நாவலை எழுதியுள்ளார் முனைவர். செந்துறை சி.தங்கராசு அவர்கள்.
பொதுவாக மதங்களின் மீதும், ஜாதிகளின் மீதும் உள்ள வெறியில் பல நேரங்களில் சக மனிதர்கள் ஒதுக்கப்படுவதும், புறக்கணிக்கப்படுவதும் நடைபெறுகிறது. மட்டுமின்றி வேறு நாடுகளில் நிறவெறி, இனவெறி ஆகியவற்றின் பேரிலும் சகமனிதர்களை ஆறறிவு நிறைந்த மிருகங்கள் வேட்டையாடுவது நாம் அறிந்ததே.
நம் நாட்டிலும் ஜாதி, மதம் ஆகியவற்றை மீறி திருமணம் செய்பவர்கள் கவுரவக்கொலை என்ற பெயரில் கொலை செய்யப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் ஏழை, பணக்காரன் என்ற அளவுகோலின் அடிப்படையில் ஒரே ஜாதிக்குள் உள்ளவர்களே உயர்ந்தவர்களாகவும், தாழ்ந்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள். அவர்களை பொருளாதாரம் என்ற அளவுகோல் பிரிக்கிறது. ஆனால் பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களுக்குள் அந்த வேறுபாடு கிடையாது. பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் தங்களுக்கு ஏற்ப வசதியானவர்கள் கிடைத்தால் பெரும்பாலும் ஜாதி பார்ப்பது இல்லை. அவர்களை இணைக்கும் பாலமாக பொருளாதாரம் உள்ளது.
பணத்திற்கு முன்னால் தூள் தூளாகும் ஜாதியும், மதமும் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் பெரும் சூறாவளியை ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கி விடுகிறது.
நாவலில் வரும் கதாநாயகன் வளவன் படிப்பிலும், அந்தஸ்திலும் உயர்ந்தவராக இருந்த போது குறுக்கே வராத ஜாதி பிரச்சினை வளவனின் வாழ்க்கை துணையாக மாற வேண்டிய லெட்சுமி டாக்டர் படிப்புக்கு போனதும் விசுவரூபம் எடுக்கிறது.
இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களாக நன்னன், நிலவண்ணன், கபிலன், சக ஊழியர்கள், அழகன், வளவன், இலட்சுமி, நகுலன், கோவிந்தன், சாமிதுரை, சுந்தரியம்மாள், பாஸ்கரன், இராமன், தமிழரிசி, செல்வாம்பாள் ஆகியோர் ஒவ்வொருவரின் கூற்றும் நாம் சமுதாயத்தில் அன்றாடம் காணும் பல்வேறு விதமான நபர்களை போன்றே பல்வேறு கோணங்களில் அவர்கள் கூறும் கருத்துக்கள் உள்ளன. மனிதர்கள் ஜாதியை எப்படி தங்களது சுயலாபங்களுக்காக பயன்படுத்துக்கிறார்கள் என்பதையும், பொருளாதாரத்திலும், கல்வியிலும் குறைந்தவர்களாக இருக்கும் போது ஒருவரின் குணம் எப்படி இருக்கிறது என்பதையும் அதே நபர்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் உயரும் போது சுயநலததுக்காக எப்படி ஜாதியை பயன்படுத்தி தாங்கள் நினைத்த காரியத்தை சாதிக்கிறார்கள் என்பதற்கு இந்த நாவல் ஒரு உதாரணமாக உள்ளது. மட்டுமின்றி இந்த நாவலில் முற்போக்கான கருத்துக்கள் நிறைந்துள்ளன என்பது தனிச்சிறப்பாகும்.
மனித உணர்வுகளின் மாற்றங்கள் சூழ்நிலைக்கேற்ப மாறுபடும் மனித உள்ளங்களின் கருதுகோள்கள்கள் என எல்லா கோணங்களை தன் வாழ்வின் நிகழ்வு போல் சித்தரித்து எழுதப்பட்டிருக்கும் பாங்கு மிகவும் சமூக முக்கியத்துவம் வாழ்வின் பரிணாமங்களாகும். அனைவரும் படித்து பயன்பெற வேண்டிய நூல்.
நூலின் விலை : ரூ.230
வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
7 (ப.எண்:4), தணிகாசலம் சாலை,
தியாகராய நகர், சென்னை- 600 017
Leave a Reply