நம்மிடையே பாயும்
நதிக்கு பெயரில்லை
அப்படியே ஏதோவொரு பெயர் வைத்து அழைத்தாலும்
அதற்கு பொருந்தவில்லை
இதுவரையான வாழ்வின் அத்தனை இன்ப துன்பங்களையும்
யாதொரு புகார்களும் இன்றி ஏற்றுக் கொண்டு
ஆத்தோடு அதன் போக்கில் போகும் குணம் நமது
விட்ட குறை தொட்ட குறையாக
விடுபட்ட
ஏதோவொரு கணக்கை
சமன் செய்ய வந்திருக்கிறாய்
திணை திரிந்து தரிசாய்க் கிடந்த நிலத்தில்
ஏரோட்டி பிரதி பலன் பாராது விதைக்கிறாய்
அன்பெனும் பெரு வித்தை
வளர்ந்து பல்கிப் பெருகி
நிற்கும் அதன் அறுவடையை
அடுத்த பிறவியில் எடுத்துக் கொள்ளலாம்
வந்தது
போனது
அடுத்ததெல்லாம் வேண்டாம்
இப்போதைக்கு வா
வந்து முத்தமிட்டு கட்டிக் கொள்
எனச் சொல்லும் போது
பாலையெங்கும் பசும்புற்கள் தழைத்து நிற்க
ஆநிரைகள் மேய்கின்றன
ஊழ் வினையை..
– கடங்கனேரியான் அரிகரசுதன்
Leave a Reply