மரணத்தைக் கண்டு பயமல்ல, காலத்தைக் கண்டுதான் பயம். அந்த பயத்தின் ஆழத்தில் என்ன இருக்கிறதென்று பார். வாழ்வை வாழ முடியவில்லையே என்ற ஆதங்கம். வாழ முடியாது போய்விட்ட வாழ்வை பற்றிய கவலை. வாழ்கிறாய் என்றால் பயமில்லையே. வாழ்வில் நிறைவேற்றம் இருக்குமானால் பயமே இருக்காது. வாழ்வை இனுபவித்திருந்தால், வாழ்வின் உச்சத்தில் என்னென்ன கிடைக்குமோ அதையெல்லாம் பெற்றுக் கொண்டிருந்தால், வாழ்வே ஒரு பரவசமாக இருந்திருக்குமானால். ஆழ்ந்த ஒரு கவிதையாக இருந்திருக்குமானால், உனக்குள் துடிக்கும் ஒரு கீதமாக இருந்திருக்குமானால், ஒரு கொண்டாட்டமாக இருந்திருக்குமானால், ஒரு திருவிழாவாக இருந்திருக்குமானால், ஒவ்வொரு கணத்தையும் அதன் முழுமையில் வாழ்ந்திருந்தாய் என்றால் காலத்தைப் பற்றிய பயம் இருக்காது. பயம் மறைந்து போய்விடும்.
இன்று இறப்பு வந்தாலும் வரவேற்கத் தயாராக இருப்பாய். வாழ்வு இன்னதெனத் தெரிந்து கொண்டால் இறப்பை வரவேற்கத்தான் செய்வாய். புதியதொரு சந்தர்ப்பம் கிடைக்கும் போல இருக்கிறதே! புதியதொரு கதவு திறக்கிறது. புதியதோர் அற்புதம் வெளிப்படுகிறது. வாழ்வை வாழ்ந்து விட்டேன், இறப்பு கதவைத் தட்டுகிறது. கதவை திறந்து துள்ளிக் குதித்து போவேன், வா வா! என்பேன். வாழ்வை அறிந்து கொண்டவன் என்பதால் மரணத்தையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
இறக்கும் போது அதுதான் சாக்ரெட்டீஸ்க்கு நடந்தது. அவருடைய மாணவர்கள் அழ ஆரம்பித்து விட்டார்கள். இயற்கை தானே! சாக்ரட்டீஸ் கண்களைத் திறந்து அவர்களைப் பார்த்தார். போதும் நிறுத்துங்கள் என்ன செய்கிறீர்கள்? எதற்கு இந்தக் கூச்சலும் அழுகையும்? நான் என் வாழ்வை வாழ்ந்து விட்டேன். முழுக்க வாழ்ந்து விட்டேன். இப்போது மரணம் வருகிறது. அதைப் பற்றித் தெரிந்து கொள்ள எனக்கு வெகு ஆர்வமாக இருக்கிறது. வெகு காதலோடும், ஏக்கத்தோடும், நம்பிக்கையோடும் காத்துக் கொண்டிருக்கிறேன். புதியதொரு கதவு திறக்கப் போகிறது. வாழ்க்கை இன்னுமொரு அற்புதத்தை காண்பிக்கப் போகிறது.
யாரோ ஒருவர் உங்களுக்கு பலமாக இல்லையா என்று கேட்க சாக்ரட்டீஸ் சொன்னார், மரணத்தை ஏன் பயந்து போக வேண்டும் என்பது எனக்குப் புரியவே இல்லை. முதலாவதாக மரணம் எப்படி இருக்கப் போகிறது என்று எனக்குத் தெரியாது. இரண்டாவதாக இரண்டு சாத்தியங்கள் தான் இருக்கின்றன. ஒன்று மரணத்துக்குப் பின்னும் வாழ்ந்திருப்பேன். அதில் பயப்படுவதற்கு எதுவும் இல்லை அல்லது நான் இல்லாமல் போய்விடுவேன். அதிலும் எந்தச் சிக்கலும் இல்லை. நானே இல்லை என்று ஆனபின் எனக்கென்ன பிரச்சனை இருக்கப் போகிறது.? இங்கே நான் இருப்பதைப் போலத்தான் இருக்க போகிறேன் என்றால் என்னுடைய பிரக்ஞை இருக்கப்போகிறது என்றால் அதிலும் எந்தப் பிரச்சனையும் இல்லை. நான் தான் இருக்கிறேனே.!
மரணத்தை கண்டு பயப்படுவது நேரத்தைக் கண்டு பயப்படுவது தான். வெகு ஆழத்தில் வாழாது விடுத்த கணங்களை கண்டு பயப்படுவது. வாழாத வாழ்வை எண்ணிப் பயப்படுவது.
எனவே என்ன செய்வது? இன்னும் அதிகம் வாழ். தீர்க்கமாக வாழ். ஆபத்தோடு வாழ். உன்னுடைய வாழ்வு இது. உனக்குச் சொல்லித்தரப்பட்டிருக்கும் எந்த முட்டாள்த்தனத்துக்காகவும் இதைத் தியாகம் செய்து விடாதே. இது உன்னுடைய வாழ்க்கை, வாழ்ந்து விடு.
– ஓஷோ
Leave a Reply