பிரம்மி செடி, தடித்த பசுமையான சிறு இலைகளுடன், தண்டில் சிறு கணுக்களும், கணுக்களில் வேர்களையும் கொண்டு தரையில் படர்ந்து வளரும் செடி ஆகும். இதன் பூ வெண்மை நிறத்தில், ஊதாநிறம் கலந்து காணப்படும்.
இதன் பூர்வீகம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா என்று சொல்லப்படுகிறது. இது தண்ணீர் உள்ள வரப்புகள், ஆற்று ஓரங்கள், குளத்து ஓரங்கள், வயல்வெளிகளில் தானாகவே வளர்ந்து காணப்படும். வீடுகளில் தொட்டிகளில் வைத்தும் வளர்க்கலாம்.
பிரம்மி சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே காக்காய் வலிப்பு, தூக்கமின்மை, மன அழுத்தம் போன்றவற்றிற்கு பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
வல்லாரை செடியையும் பிரம்மி என்று அழைக்கும் வழக்கம் உண்டு. ஆகவே இதனை நீர் பிரம்மி என்று அழைப்பது சிறந்தது.
நீர்பிரம்மியின் சுவை இனிப்பு மற்றும் துவர்ப்பு. இதற்கு நரம்பை பலப்படுத்தும் செய்கையும், குளிர்ச்சி உண்டாக்கும் செய்கையும், சிறுநீர் மற்றும் மலத்தை இளக்கும் செய்கையும் உண்டு.
தாவரவியல் பெயர் :
Bacopa monnieri
வேறுபெயர்கள் :
நீர் பிரம்மி, பிரம்மி,பிரம்மி வழுக்கை, சாம்பிராணி பூண்டு
அடங்கியுள்ளதாவரவேதிப்பொருள்கள் :
ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும். Bacosides A மற்றும் B மற்றும் Herpestine, Betulic acid, Nitric oxide mannitol போன்றவைகள்.
நீர் பிரம்மியின் மருத்துவப்பயன்கள்
1. நரம்பு தளர்ச்சி, மனக்கவலைகள் மாறுவதற்கு
ஒரு கைபிடி அளவு நீர்பிரம்மி இலையை கழுவி, நல்ல மிளகு பத்து எண்ணங்கள் எடுத்து சதைத்து, இவை இரண்டையும் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து, ஆறிய பின் சிறிது தேன் சேர்த்து, இரவு ஆகாரத்திற்கு பின் குடித்து வரவும். இத்துடன் ஒரு டம்ளர் பாலும் அருந்தலாம். இதனால் நரம்புதளர்ச்சி, மனக்கவலைகள் மாறும்.
2. தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் மாறுவதற்கு
நீர் பிரம்மி இலையை உலர வைத்து பொடித்து சலித்துக் கொள்ள வேண்டும். இப்பொடியை ஒரு கிராம் அளவில் எடுத்து தேனில் கலந்து இரவு தூங்குவதற்கு முன் சாப்பிட்டு பசும்பால் குடிக்கவும். இவ்வாறு செய்து வர மன அழுத்தம் மாறும். நல்ல தூக்கம் உண்டாகும். மேலும் இது ஆண்மை குறைபாடு மற்றும் புற்றுநோய் தடுப்பிற்கும் உபயோகிக்கலாம்.
3. ஆட்டிசம் மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்க
6 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நீர் பிரம்மி இலைப்பொடியை கால்முதல் அரை கிராம் வரை நெய்யில் கலந்து தினம் இருவேளை கொடுக்கலாம். மேலும் நீர்பிரம்மி பச்சை இலையை பருப்பு சேர்த்து கீரை போல் சமைத்து சாப்பிட கொடுக்கலாம். சாம்பார், ரசம் இவைகளிலும் சேர்க்கலாம். துவையல் அரைத்து சாப்பிடலாம். சுமார் 6 மாதங்களாவது சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டு வருவது ஆட்டிசம் என்ற நோய்க்கு சிறந்தது. மேலும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியும் அதிகரிக்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.
4. காக்காய் வலிப்பு நோய்க்கு
நீர் பிரம்மி சாறு 200 மில்லி, பசுநெய் 200 மில்லி சேர்த்து காய்த்து நீர் சுண்டியதும் இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்தவும்.
இந்த பிரம்மி நெய்யை 1 கரண்டி வீதம் தினம் இருவேளை வெந்நீர் அல்லது சூடான பாலில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். இது காக்காய் வலிப்பு நோய் மற்றும் மூளை சுருக்க நோய் போன்றவற்றிற்கு சிறந்தது.
5. முடி உதிருவதை தடுப்பதற்கு
நீர்பிரம்மி செடியை அரைத்து சிறிய வடகம் செய்து உலர்த்தி பொடித்து தேங்காய் எண்ணெயிலிட்டு காய்த்து தலைக்கு தேய்த்து குளிக்க முடி உதிர்தல் நீங்கும். நல்ல முடி வளர்ச்சி உண்டாகும். உடல் குளிர்ச்சியடையும். நீர்பிரம்மிக்கு “பிரம்மிவழுக்கை” என்னும் வேறு பெயரும் உண்டு. வழுக்கை தலையிலும் முடி வளரும் என்பதை குறிக்கும் விதமாக இப்பிரம்மிக்கு வழுக்கை பிரம்மி என்ற பெயர் உண்டாயிருக்கிறது. மேலும் பிரம்மி, நெல்லிக்காய், கரிசாலை வகைக்கு சம அளவில் எடுத்து பச்சையாக அரைத்து தலையில் தப்பளமாக வைத்து 15 நிமிடம் கழித்து குளித்து வரவும். இவ்வாறு செய்தால் தலைமுடி உதிர்தல் குறைந்து முடி நன்கு வளரும்.
6. இரத்த அழுத்தநோய்க்கு
நீர்பிரம்மியில் நைட்ரிக் ஆக்சைடு என்ற தாவரவேதிப்பொருள் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. அதிகரித்த இதய துடிப்பை குறைக்கிறது. மேலும் இரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்பையும் குறைக்கிறது.
7. வீக்கங்களுக்கு
நீர் பிரம்மி இலையை ஆமணக்கெண்ணெயில் வதக்கி வீக்கமுள்ள இடத்தில் கட்ட வீக்கம் மாறும்.
8. சளிகட்டுக்கு
நீர்பிரம்மி இலையை அரைத்து கொதிக்க வைத்து நெஞ்சில் பூச சளிகட்டு குறையும்.
9. தொண்டைவலிக்கு
ஒரு கைபிடி அளவு நீர் பிரம்மி இலையை வெண்ணெயில் பொரித்து தொண்டை வலிக்கு தொடர்ந்து 5 நாட்கள் சாப்பிட குணமாகும்.
10. காதுவலிக்கு
பிரம்மி இலைபொடி, வல்லாரை பொடி, சுக்குபொடி வகைக்கு சமமாக எடுத்து தண்ணீர் விட்டு சூடாக்கி, காதை சுற்றி பற்றுப்போட காதுவலி தீரும்.
11. இரத்தக்கட்டு மாறுவதற்கு
பிரம்மி இலைப்பொடி, வல்லாரை பொடி சம அளவு எடுத்து வெந்நீரில் கலந்து இரத்த கட்டுகளில் பூச இரத்தகட்டு மாறும்.
தலையில் அடிபடுவதால் ஏற்படும் இரத்தகட்டு வீக்கம் மற்றும் வலிக்கு மேற்படி பொடியை தேங்காய் எண்ணெய் கலந்து கனமாக பூச வேண்டும்.
12. கவனிக்க வேண்டியவைகள்
நமது மூலிகை மருத்துவர்
Leave a Reply