– குமரி எழிலன்
மயினியோ, ஆத்தடிமாடங்கோயில்ல? ஒரு அதிசயத்தைக் கேட்டேளா?
சொல்லுவுளே, சொன்னாத்தானே தெரியும்.
அதயேங் கேக்கயோ ஆத்தடிமாடன் சொள்ளமாடனுக்கு கண்ணு மூடிமூடித் தொறக்காம….கேக்கயில புல்லரிச்சுற்று..படபடப்புடன் சொல்லி முடிக்குமுன் தெவுங்கிவிட்டாள் தெக்கூட்டு விசியா .
எவ சொன்னாவுளே நீ நேருல பாத்தியா? நம்பமறுத்த தொனியில் கேட்டாள் கவுசல்யா.
நேருல பாத்தியா தேருல பாத்தியான்னு விண்ணாணம்லாம் பேசாதிங்யொ இப்பதான் கோரசேரி மயினி சொன்னா.
பாத்துக்கிடுங்கோ.
அவளுக்கும் வேலையில்ல உனக்கும் சோலியில்ல.
உடுத்த சீலைய நம்பமாட்டேளா? நீங்யொ
இருந்திருந்து வொங்கள்ட்டவந்து சொன்னம் பாருங்கோ நான் ஒரு லூசு.
அலுத்துக்கொண்டே நூறுநாள் வேலைக்குப் போனாள் விசியா..
பாத்திரங்களையும் இட்லி குட்டுவத்தையும் தேச்சுக்கழுவி முடிக்கவும் எதுத்த வீட்டு ரமணி வீட்டுக்குள்வரவும் சொல்லிவச்சா மாதிரி நடந்தது.
இன்னக்கி பேப்பர்ல சுசீந்திரம் அக்கரையில?? என்னமோ? சாமி கண்ண உருட்டி உருட்டி முளிக்கின்னு போட்ருக்கானாமே பார்த்தேளா?
ரமணி கேட்டாள்.
பேப்பரும் கீப்பரும் பாக்காம தான் இருக்கே நா…இப்பந்தா விசியாவும் பொரிஞ்சிட்டுப் போறா…அலுத்துக் கொண்டாள் கவுசல்யா.
படுப்பினியில் கிடந்த பேப்பரை வாசித்தாள் ரமணி.
சுசீந்திரம் அக்கரை ஆத்தடிமாடன்கோயிலில் மாலை ஆறரை மணியிலிருந்து ஒன்பது மணிவரை சாமியின் கண்கள் இடம் வலமாக அசைகின்றன இந்த அதிசயத்தைக்காண பக்த கோடிகள் சாரை சாரையாக படையெடுக்கின்றனர்.குங்குமம் ஊதுவத்தி சூடன் வெற்றிலை பாக்கு தேங்காய் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
வளையல் பலூன் பாத்திரக்கடைகளும் திடீர் பிள்ளையார் போல் முளைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று படையெடுக்கக் கூடும் என நம்பப்படுகிறது. மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியருடனும் தாசில்தாரிடமும் இன்று இதுகுறித்து ஆலோசனை நடத்துகிறார்…..
நெசந்தாம் போலுருக்கு? நா? விசியாட்ட அலட்டுனே …சாமி? கண்ணடிக்காரு நாக்க துறுத்துகாருன்னு கதவுடாதன்னு….
சாயந்தரம் போய்ட்டு வருவமா?
கவுசல்யா சாமிக்குத்தம் வந்திருமோங்கிற கொஞ்சம் பயங்கலந்த ஆவலோடு கேட்டாள்.
பிள்ளையாரு பாலு குடுச்ச கதை மாரி ஆயிரப்பிடாது..தடியை வெட்டிப் போட்ட ரமணி..சாயந்தரம் பொய்த்தான் பாப்பமே என்றாள்.
கடைகண்ணிகள் பெருத்தன.
ஆட்டுக்கிடாய் நேர்ச்சை சேவலறுத்துப் பொங்கல் விட பெண்கள் நேர்ந்து கொண்டார்கள். சீண்டுவாரத்துக்கிடந்த, வருசத்துக்கு ஒருமுறை தண்ணி கண்ட மாடன் தினம் தினம் இளநீர், பால், தயிர்,தேன்,சந்தனம்,களபம் என அபிஷேகப் பிரியராய் ஆக்கப்பட்டார்.
யாராவது ஐயப்பன் பயணம் பண்ணிய புலியின் பேரிலுள்ள டைகர்பாம் தந்தால் தேவலாம் போல் உணர்ந்தார் மாடன். கொடை விழாக்காலங்களில் சாமியாடும்போது மூக்கில் நகக்கண்ணளவு புனுகு தடவுவது ஓர்மைக்கு வந்தது. ஆளுயர (சாரி) சிலை உயர மாலைகள் சுமந்து அலுப்பாயிருந்தது சாமிக்கி அப்போதெல்லாம் தொலைக்காட்சி கைபேசி போன்ற சமாச்சாரங்கள் வரவில்லை.
ஒரு பத்திரிகைக்காரன் இரவு ஒன்பது மணி வாக்கில் வந்து? நடுச்சாமம் வரை ஆலமரத்துத் திண்டில் தூங்குவது போலக்கிடந்தான்.
மறுநாள் தந்தி பேப்பரில்? செய்தி வந்தது…
இரவு ஒன்பது மணிக்கு மேல் ஏன் மாடனின் கண்கள் அசையவில்லை என்று…. ஆராய்ந்த நிருபர் முருகேசன் கொடுத்த கட்டுரையில்…….
ஆற்றின் கரையில் மாடன் இருப்பதால் எப்போதெல்லாம் ஆற்றின் கரையிலுள்ள சாலையில் வண்டிகள் செல்லுமோ அப்போது ஹெட்லைட் வெளிச்சம் ஆற்றுத்தண்ணீரில் பட்டு பிரதிபலித்து எண்ணெய் பளபளப்புள்ள வெள்ளிக் கண்களில் பட்டு கண்கள் அசைவது போல் தோன்றுகிறது……
வண்டிகள் மேற்கிலிருந்து கிழக்கில் போகும்போது கண்கள் இடமிருந்து வலமாகவும் கிழக்கிலிருந்து மேற்கே போகும்போது வலமிருந்து இடமாகவும் கண்கள் அசைவது போல் தோற்றமயக்கம் இருக்கிறது.. வாகனவிளக்குகள் டிம்ப்லைட் கொடுக்கும்போது கண்கள் மேலும் கீழும் அசைவது போலிருந்தது……
ஒன்பது மணிக்கு மேல் வாகன ஓட்டம் குறைவதால் எப்போதாவது வாகனங்கள் சாலையில் ஓடும் போது மட்டும் கண்களில் அந்த தோற்றம் தெரிகிறது.
கட்டுரை வந்த நாளிலிருந்து கூட்டம் குறைந்தது…கடைகள் காணாமல் போயின… வயல் அறுவடை முடிந்த பின் நடக்கப்போகும் கொடைவிழாவுக்காய் காத்து கிடந்தார் ஆத்தடிமாடன்.
– ஓவியம் ஜீவா
Leave a Reply