அழியும் நிலையில் பாறு கழுகுகள்

அழியும் நிலையில் பாறு கழுகுகள்

  • By Magazine
  • |

ஐயுசிஎன் எச்சரிக்கை

                பாறு கழுகுகள் விழிப்புணர்வு நாள் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?

                ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் முதலாம் சனிக்கிழமை ‘பாறு கழுகுகள்’ விழிப்புணர்வு நாளாகப் பல நாடுகளிலும்  கடைபிடிக்கப்படுகிறது.

பாறு’  என்றால் என்ன?

’பாறு’ என்பது கழுகு வகையைச் சேர்ந்த உருவில் மயில் அளவுள்ள பறவை இனமாகும். சத்தியமங்கலம், முதுமலை வாழ் இருளர் பழங்குடிகளால் இவை ‘பாறு’ என  அழைக்கப்படுகின்றன. சங்க இலக்கியமும் இதன் ஒரு வகையைப் ‘பாறு’ என்று அழைக்கிறது. ‘பாறு’ என்றால் உலர்ந்த என்று பொருள். இதன் கழுத்தில் முடிகளற்று உலர்ந்து இருப்பதாலோ பாறையில் தங்கி வாழ்வதாலோ உயரத்தில் பறப்பதாலோ இப்பெயர் பெற்றிருக்கலாம்.

இதன் வேறு பெயர்கள் என்ன?

                இறந்ததை உண்டு வாழும் இயல்புடைய இக்கழுகினத்தைச் சமவெளி மக்கள் பிணந்தின்னிக் கழுகு என அழைக்கின்றனர். ‘ஆங்கிலத்தில்’ ‘வல்சர்’ “Vulture’  எனவும் சோளகா மொழியிலும் படுக மொழியிலும் ‘ரண ஹத்து’ எனவும் ‘குருபா’ மொழியில் ‘பத்தி’ எனவும் ‘பணியா’ மொழியில் ‘தொண்டே’ எனவும் ‘ஊராளி’ மொழியில் ‘கூமெ பாறு’ எனவும் ‘தோடர்’ மொழியில் ‘பத்’ Paot  எனவும் அழைக்கப்படுகின்றன.

பாறு’ கழுகினத்தால் என்ன பயன்?

                இறந்துபோன மற்றும் அழுகிய உடலங்களை உண்பதற்கேற்பத் தகவமைப்புப் பெற்றுள்ள இவை அவற்றை உண்டு நோய்நொடி அணுகாமல் நம்மையும் ஏனையக் காட்டுயிரினங்களையும் காக்கும் அரும்பணியை ஆற்றுகின்றன. இவற்றைத் தூய்மைக் காவலன் என்றும் அழைக்கலாம்.

                 இதன் வயிற்றில் சுரக்கும் அமிலமானது மனிதர்களின் உடலில் சுரக்கும் அமிலத்தை விட 100 மடங்கு வீரியமானது. எனவே இவற்றின் வயிற்றுக்குள் எவ்வித தொற்று உயிரிகள் நுழைந்தாலும் முற்றாக அழிந்துவிடும். அதனால் நோய்கள் பரவாமல் தடுக்கப்படுகிறது. 

பாறு கழுகுகள் இல்லாமல் போனால் என்ன ஆகும்?

                ஒரு உயிரினத்தால் நேரடியாக நமக்குப் பயன் இல்லாவிட்டாலும் அவையும் வாழ வேண்டும் என நினைப்பது தான் நல்லறச் சிந்தை ஆகும்.

                ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. ஆனால் அந்த எதிர்வினை நம்மால் உடனே உணர இயலாது. ஆயினும் பின் வருவனவற்றை ஊகிக்கலாம்.

                இவை இல்லாது போனால் அந்த இடத்தை நாய்களும் எலிகளும் எடுத்துக்கொள்ளும். இதன் மூலம் வெறிநோய் உள்ளிட்டத் தொற்று நோய்களுக்கு மனித இனம் ஆட்படக்கூடும். உலகெங்கும் வெறிநோய்க்கடிக்கு ஆட்படுபவர்களில் 36 விழுக்காட்டினர் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. பாறு கழுகுகள் இல்லாது போனதால் ஆண்டொன்றுக்கு சுமார் ஒரு இலட்சம் மக்கள் இறப்பதற்கு நேரிடுகிறது என அண்மையில் வெளியிடப்பட்ட அசைக்க முடியாத ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதன் தனித்துவம் மற்றும் வாழ்வியல் பற்றி?

                செத்துப்போன உடல் கிடந்தால் எங்கிருந்து வருமோ தெரியாது. உடனே வந்து விடும். இதைப் பார்த்துத் தான், ‘கழுகுக்கு மூக்கு வியர்த்தால் போல் வந்துவிட்டார்’ எனச் சரியான நேரத்திற்கு வந்துவிட்டவரைப் பார்த்துச் சொல்வதுண்டு.

                இவை பார்வைத்திறனை வைத்தே இவை உடலைக் கண்டுபிடிக்கிறது மோப்ப சக்தியால் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. 6 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து ஒரு ஆட்டுக்குட்டி அளவுள்ள இரையைக் கூடப்பார்க்க இயலும். பறவை இனத்தில் அதிக உயரத்தில் பறக்கும் பறவை இதுவேயாகும். மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் உடையது.

கூட்டமாகப் பறந்தபடி இரை தேடும் இறந்த விலங்குகளை மட்டுமே உண்ணும் & இவை வேட்டையாடி உண்பவை அல்ல

                இவை ஆண்டுக்கு ஒரு முட்டை மட்டுமே இடும் , அடைக்காக்கும் காலம் சுமார் 60 நாட்கள் ஆகும் & ஆண், பெண் பறவைகள் இரண்டுமே மாறி மாறி அடை காக்கும். பெரும்பாலும் இணை சேர்ந்த சோடிகள் பிரிவதில்லை.

                இதன் ஆயட்காலம் சுமார் 50 ஆண்டுகள் ஆகும். உயரமான மரங்கள், செங்குத்தான பாறை முகடுகளைக் கூடு அமைக்கத் தேர்ந்தெடுக்கும். அதில் சுள்ளிகளையும் குச்சிகளையும் கொண்டு கூடு அமைக்கும்.

                இறைச்சி மீது ஊன்றிப் பிடித்து உண்பதற்கு ஏதுவாக இவற்றுக்கு வலுவான கால்கள் உள்ளன. இவை இருபது நாட்கள் வரை இரை உண்ணாமல் இருக்க முடியும்.

இதில் எத்துணை வகை உண்டு?

                இவ்வினத்தில் உலகில் 23 வகைகள் உள்ளன. இவை ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா தவிர மற்ற எல்லாக் கண்டங்களிலும் காணப்படுகின்றன. தென் அமெரிக்காலும் வட அமெரிக்காவிலும் காணப்படும் ‘பாறு” புத்துலகப் பாறுகள் (New world vultures) எனப்படுகின்றன. இதில் 7 சிறப்பினங்கள் உள்ளன. ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் காணப்படுபவை தொல்லுலகப் பாறுகள் (Old world Vultures) என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 16 பாறு சிறப்பினங்கள் அடங்கும். இதில் 9 சிறப்பினங்கள் இந்தியாவில் உள்ளன. அதில் தமிழ்நாட்டில் நான்கு வகைகள் காணப்படுகின்றன.

தமிழ்நாட்டில் காணப்படுபவை எவை?

வெண்முதுகு பாறு

கருங்கழுத்து பாறு

மஞ்சள் முக பாறு (திருக்கழுக்குன்றக் கழுகு, கோடாங்கிக் கழுகு, தோட்டிக் கழுகு)

செம்முக பாறு ( இலக்கியத்தில் எருவை எனக் குறிப்பிடப்படுகிறது). இவை தவிர ஊதா முகப்பாறு, இமாலயப் பாறு, யுரேசியப் பாறுவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இவற்றைப் பார்க்க முடிந்தது?

                பாறு கழுகினத்தை 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பரவலாகக் காண முடிந்தது. இவை கோபுரங்களிலும், உயரமானக் கட்டடங்களிலும்,  தென்னை மரத்திலும் ஆற்றோரத்தில் இருந்த பெரிய மரங்களிலும் தமிழ்நாடெங்கும் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்து வந்ததாகச் செவி வழிச் செய்தியும் குறிப்புகளும் வரலாற்றுப் பதிவுகளும் காணப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான இடங்களில் முற்றாக அழிந்துவிட்டன. சென்னைக்கு அருகிலுள்ள திருக்கழுக்குன்றத்தில் மஞ்சள் முகப்பாறு சோடியானது 700 ஆண்டுகளாகத் தங்கி இனப்பெருக்கம் செய்துவந்ததாகப் பதிவுகள் உள்ளன.

தற்போது இவற்றின் நிலை என்ன?

                இந்தியாவிலுள்ள 9 வகை பாறு இனத்தில் 4 வகை அற்றுப்போகும் நிலையிலுள்ளன என ஐயுசிஎன் அமைப்பு எச்சரிக்கிறது. இதில் மூன்று வகைத் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலைக்கும் ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்திற்கும் இடையே உள்ள மாயாறு சமவெளியில் அடைக்கலம் ஆகியுள்ளது.  கோயமுத்தூரில் சிறுமுகை, மேட்டுப்பாளையம், குஞ்சப்பனைப் பகுதியிலும் இவற்றைக் காணலாம்.

ஏன் இவற்றைத் தற்போது பார்க்க முடிவதில்லை?

                காரணம் பல… அதில் முதன்மைக் காரணம் மாடுகளுக்குப் போடப்பட்ட டைக்குளோபினாக் உள்ளிட்ட வலிபோக்கி மருந்துகளாகும். இறந்து போன மாட்டின் உடலத்தில் மிஞ்சி இருந்த வலிபோக்கு மருந்தின் தாக்கத்தால் அதன் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுக் கூட்டமாக இறந்துபோயின.

                இரண்டாவதாக விசம் தடவிய உணவை உண்ண நேர்ந்ததாலும் கூட்டமாக மாண்டன.

                மூன்றாவதாக மாடுகள் இயற்கையாக இறப்பதற்கு முன்னரே இறைச்சிக்காக அனுப்பப்பட்டதாலும் இரைத்தட்டுப்பாடு ஏற்பட்டு இதன் எண்ணிக்கை மளமளவெனச் சரிந்தன. இதுமட்டுமின்றி மின்கம்பங்கள், காற்றாலை விசிறிகள், பட்டம் பறக்கவிடும் கயிறு போன்றவற்றில் அடிபட்டும் இறக்கை துண்டாடப்பட்டும் சாவைத் தழுவின. தமிழ்நாடெங்கும் பரவலாகப் பார்க்க முடிந்த இப் பறவை இனத்தைப் பார்ப்பதே அரிதாகி விட்டது.

தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?

                தமிழ்நாடு அரசு முதன்முதலாக கீட்டோபுரோபேன் மருந்தைக் கால்நடை மருந்தகங்களுக்கு வாங்குவதிலிருந்து விலக்கியது. பின்னர் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக புளூநிக்சின் மருந்தையும் பாறு கழுகுகள் வாழும் மண்டலங்களிலிருந்து விலக்கியது.

                தமிழ்நாடு வனத்துறை ‘பாறு கழுகு’ பாதுகாப்புக்காகத் தனிக்குழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.

                கடந்த இரண்டு ஆண்டுகளாக மூன்று மாநிலங்களை ஒருங்கிணைத்து கணக்கெடுப்பையும் நடத்தி வருகிறது.

                பாறு கழுகுகளுக்குப் பாதுகாப்பான மண்டலத்தை உருவாக்குவதிலும் ஆழ்ந்த அக்கறையுடன் வனத்துறை செயல்பட்டு வருகிறது.

இவ்வினத்தைக் காக்க ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?

                பாறு பறவை இனத்தை அழிவிலிருந்து காக்க அடைப்பிடத்தில் வைத்து இனப்பெருக்கம் செய்யும் செயல்பாட்டைத் தொடக்கியுள்ளது.

                பாறு கழுகுகளின் வாழ்வைச் சூறையாடிய டிக்ளோபினாக், அசிக்குளோபினாக், கீட்டோபுரோபேன் ஆகிய மருந்துகளைத் தடை செய்துள்ளது.

                பாறு கழுகுகளை மேம்படுத்துவதற்காக ஐந்தாண்டுத் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. பாறு கழுகினத்தைக் காக்க அருளகம் அமைப்பு கடந்த 13 ஆண்டுகளாகப் பல்வேறு மக்களுடனும் இணைந்து செயலாற்றி வருகிறது.

                30 மிலி குப்பி டைக்குளோபினாக் மருந்துக்கான தடையை உறுதி செய்ய தகுந்த ஆதாரங்களை உயர்நீதிமன்றத்திற்கு வழங்கியது.

                புளூநிக்சின் கீட்டோபுரோபேன் மருந்துகளை கால்நடை மருந்தகங்களுக்கு வாங்காமல் நிறுத்த வேண்டுகோள் விடுத்து அக்கோரிக்கை கால்நடைத்துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

                இதுவரையிலும் தோராயமாக 36000 மக்களை நேரிடையாகச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. பயணம் தொடர்கிறது.

                இரண்டரை இலட்சம் கிலோ மீட்டர் வாகனப் பிரச்சாரம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

                பல்வேறு தரப்பினரையும் இணைத்து மக்கள் பங்கேற்புடன் பாறு கழுகுகளைக் காக்க கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகிறது.

                பாறு கழுகுகளின் வாழ்விடத்தையும் கூடமைத்துள்ள இடங்களையும் வனத்துறை வழிகாட்டுதலுடன் கண்காணித்து வருகிறது.

                கால்நடைகளுக்கு முகாம் நடத்தி மூலிகை மருத்துவ முறைகளை ஊக்குவித்து வருகிறது.

                கால்நடைகளுக்கெனத் தீவன நாற்றங்கால் பண்ணையை உருவாக்கி உள்ளது. இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு பெற வழிகாட்டி வருகிறது.

                கால்நடையிலிருந்து பெறப்படும் பொருட்களுக்கு மதிப்புக்கூட்டுதல் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

– பாரதிதாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *