தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், தரிசு நிலங்களிலும், புதர் காடுகளிலும், சாலை ஓரங்களிலும் இயல்பாகவே வளர்ந்து காணப்படும் ஒரு மூலிகை தான் கண்டங்கத்திரி. தாவரவியலில் சொலானம் ஸானக்தோ கார்ப்பம் (Solanum xantho carpum) என்னும் இம்மூலிகை சொலானேசியே (Solanaceae) என்னும் குடும்பத்தை சேர்ந்தது. தரையுடன் படரும் முட்கள் அடர்ந்த ஒரு செடி. இதன் வேர், பூ, இலைகள், காய்கள், பழங்கள் அனைத்தும் மருத்துவத்துக்கு பயன்படும்.
அனைத்து விதமான நிலங்களிலும் நன்கு வளரும் தன்மை கொண்டது. முட்களுடன் மாற்றடுக்கில் அமைந்த இலைகளும், நீல நிற மலர்களும், சிறு சிறு கத்தரிக்காய் வடிவிலான உருண்டையான காய்களும் இந்த செடியில் காணப்படும் மஞ்சள் நிறமான பழங்களும் இத்தாவரத்தை அடையாளம் காட்டுகின்றன. தரையிலும், மாடித் தோட்டத்தின் தொட்டிகளிலும் இதனை வளர்க்கலாம்.
இத்தாவரத்தில் அடங்கியுள்ள வேதிப்பொருட்களாவன
டயோஸ்ஜெனின், சொலசோடைன், சோலனோ கார்பைன், ஒலியிக், பால்மிடிக் அமிலங்கள் போன்றவை.
இதன் மருத்துவ பயன்கள்
இத்தாவரம் முழுதும் முட்கள் நிறைந்து நீல நிற மலர்கள் கொத்தாக காணப்படும். இதன் இலைகளின் சாறு மிளகுடன் சேர்த்து அரைத்துப் போட மூட்டுவலிகளுக்கு சிறந்த மருந்தாகிறது. சித்த மருத்துவம் இம்மூலிகை பற்றி கூறுகிறது. இதில் தசமூலம் என்ற மருந்து சிறப்பு பெற்றது. இந்த மருந்தை செய்ய பயன்படும் 10 வகையான மூலிகைகளில் கண்டங்கத்தரியும் ஒன்றாகும். வணிக ரீதியாகவும் இம்மூலிகையை ஆங்காங்கே வளர்க்கிறார்கள். இதன் இலைச்சாற்றுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்த்து உடலில் தேய்த்து வர வேர்வை நாற்றம் அகலும்.
அரைத்து வடித்த கண்டங்கத்திரி இலைச்சாற்றுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து காய்ச்சி வடிகட்டி பூசி வர வெடிப்பு மறையும். கை, கால்களில் ஏற்படும் வீக்கம் வற்றும். இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து தலையில் தேய்த்து வரும் போது வாதநோய்கள் குணமாகும். இதன் இலைச்சாறுடன் ஆளிவிதை எண்ணெய் சம அளவு எடுத்துக் காய்த்து பாதங்களில் பூசி வர உஷ்ணத்தால் ஏற்படும் பாதவெடிப்பு மறையும். மேலும் சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் எரிச்சல், கடுப்பு இதன் இலைசாற்றுடன் தேன் ஒரு கரண்டி அருந்திவர அகலும்.
இதன் பழங்களை உணவாக தொடர்ந்து உண்டு வர ரத்த அழுத்தம் நீங்கும். மண் பாத்திரத்தில் கண்டங்கத்திரி பழங்கள் வேக வைத்து குழம்பு பதமாக இருக்கும் போது ஒரு பங்கு நல்லெண்ணெய் ஊற்றி மெழுகு பதத்தில் காய்த்து வடித்துக் கொள்ளவும். இக்கலவையை வெண்குஷ்டத்துக்கு தடவி வர குணம் கிடைக்கும் என சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இதன் கனிகளின் சாறு தொண்டை வலி தீர்க்கும். குழந்தைகளின் தொடர் இருமலுக்கும் இத்தாவரத்தின் உலர்ந்த பொடி தேன் கலந்து அருந்தலாம்.
கண்டங்கத்திரி வேரின் பயன்கள்
இது ஆஸ்துமா எதிர்ப்பு குணம் கொண்டது. சிறுநீர் போக்கினைத் தூண்டி, மார்புவலி, இருமல் மற்றும் காய்ச்சலுக்கு நல்ல மருந்து. வாந்தியை நிறுத்தக் கூடியது. இந்த வேருடன் ஆடாதோடை வேர், சுக்கு, திப்பிலி, ஒமம் ஆகியவற்றை இடித்து நீர் ஊற்றி நன்கு காய்த்து காலை மாலை அருந்திவர கபம் சம்பந்தமான நோய்கள் குணமாகும். இதன் வேர் 30 கிராம், சுக்கு 5 கிராம், சீரகம் 5 கிராம், கொத்தமல்லி ஒரு பிடி சேர்த்து காய்த்து லு லிட்டராக்கி 4 முதல் 6 தடவை சுமார் 100 மில்லி வீதம் குடிக்க சீதளக் காய்ச்சல், வறட்டு இருமல், சளி, காய்ச்சல், நுரையீரல் சம்பந்தமான அனைத்து விதமான காய்ச்சல்களும் குணமாகும்.
இந்த வேருடன் நிலவேம்பு சமஅளவு எடுத்து சிறு துண்டு சுக்கு சேர்த்து காய்த்து வடிகட்டி அருந்தி வர மலேரியாக் காய்ச்சல் கட்டுப்படும்.
குடல் வாயுவை அகற்றவும், சிறுநீர்க் கற்களை கரைக்கவும் சித்தமருத்துவத்தில் கண்டங்கத்திரி மூலிகை பெரும் பங்கு வகிக்கிறது. முழு தாவரத்தையும் முள் நீக்கி உலர வைக்க வேண்டும். நன்கு காய்ந்ததும் தூளாக்கி ½ தேக்கரண்டி தேன் சேர்த்து குழைத்து உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா, சுவாச நோய்கள், சளித்தொல்லை குணமாகும்.
மேலும் இதன் காயை கீறி உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் வற்றல் கலந்து மோரில் போட்டு வற்றலாக்கி எண்ணெயில் பொரித்து அல்லது குழம்பில் போட்டு சாப்பிட்டு வர நெஞ்சு சளி, காசநோய், சுரம், இருமல், வாதநோய்கள் போன்றவை குணமாகும்.
இதன் வேர் கசாயத்துடன் தேன், திப்பிலி சூரணம் சேர்த்துச் சாப்பிட இருமல், சளி, மூக்கில் நீர் வடிதல் போன்றவை மாறும்.
கண்டங்கத்திரி சமூலம், ஆடாதோடை வகைக்கு முப்பது கிராம், பற்பாடகம், விஷ்ணு கிரந்தி வகைக்கு 15 கிராமும், சீரகம், சுக்கு வகைக்கு 10 கிராமும் எடுத்து இடித்துக் கொள்ளவும். நீரிலிட்டு நன்கு காய்த்து குடித்து வர திடீரென ஏற்படும் தொற்றுநோய், வைரஸ் காய்ச்சல் கட்டுப்படும்.
கண்டங்கத்திரி வேர் நன்கு காய்த்து 50 மில்லியாக வற்றியதும் வடிகட்டி கொள்ளவும். அத்துடன் கற்கண்டு சேர்த்து குடித்து வர உடலில் ஏற்படும் வாய்வு பிடிப்பு நீங்கும். இந்த மூலிகையின் விதைகளை எரித்த புகை, ஆஸ்துமா நோயினால் ஏற்படும் சளியை அகற்ற உதவுகிறது. பல்வலியை போக்குகிறது.
முழுத்தாவரமும் மருத்துவ பயன் தரக்கூடியது, மூச்சுக்குழல் அழற்சி நுரையீரல் சம்பந்தமான அனைத்து நோய்களையும் தீர்க்க உதவுகிறது. இதன் கசாயம் பால்வினை நோய்க்கு மருந்தாகிறது. கருத்தரிக்கவும் ஊக்குவிக்கிறது. எனவே இத்தாவரத்தை அழியாமல் காப்பது நமது கடமை. இல்லங்களிலும், தோட்டங்களிலும் வளர்க்க வேண்டும்.
– கஸ்தூரிபா ஜாண்ஸன்
Leave a Reply