ஒரு விடுமுறை நாள்.
மதனை சுதன் விருந்துக்கு கூப்பிட்டிருந்தான்.
பூவரச மரமும், புன்னை மரமும் நின்றிருந்த சுதனின் வீட்டிற்கு வந்த மதனை வரவேற்று உபசரித்தார்கள் சுதனின் அம்மா.
சுதனின் அம்மாவை மதனும் அம்மா என்றே அழைப்பான். மதனின் அம்மாவை சுதனும் அம்மா என்றே அழைப்பான்.
மத்தியானச் சாப்பாட்டிற்கு நல்ல சாளை மீன் அவியல், சூரத்துண்டு பொரியல், மஞ்சத் தண்ணீ மீன்குழம்பு என வித விதமா பரிமாறி வயிறு நிறைய உண்ண வச்சாங்க அம்மா.
சாப்பிட்டப் பிறகு, அதற்கு மேல பாச்சோறு, கருப்புக்கட்டி அல்வா, மாவுருண்டை என்று கடல்கரைக்கே உரித்தான சிறப்பு இனிப்பு பண்டங்களும் உண்ணக் கொடுத்தார்கள்.
அதுக்க மேலயும் வீட்ல இருந்தா அம்மா இன்னும் ஏதாவது சாப்பிடத் தந்திருவாங்க என்று இரண்டு பேரும் அம்மாவிடம் சொல்லிவிட்டு கடல்கரைக்கு ஓடினார்கள்.
கடலில் அலைகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டே இருந்தன. முகத்தில் கச்சம் அடித்தது இன்பமாக இருந்தது.
சுதனும் மதனும் அலை நுரையை அள்ளி எறிந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அலைநுரையை அள்ள அவர்கள் குனிந்தபோது மண்ணில் ஒடலும் நண்டுகளும் ஓடிக் கொண்டிருந்ததைக் கண்டனர்.
சுதன் ஒடலப் பிடித்து மதனின் உள்ளங்கையில் விட்டான். அது குடு குடுவென்று ஓடும் போது, மதனுக்கு கூச்சமாக இருந்தது. சிரித்துக் கொண்டே அதை கீழே போட்டு விட்டான்.
அந்த ஒடல் குடுகுடுவென்று ஈர மணலைத் துளைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டது.
அதை ஆச்சரியத்தோடுப் பார்த்துக் கொண்டிருந்த மதனை மேலும் ஆச்சரியப்பட வைத்தது கடல். திடீரென்று கடல் தண்ணீர் குறைந்து கடல் உள்வாங்கியது.
அலை அடித்துக் கொண்டிருந்த இடத்தில் தண்ணீர் வற்றிப்போய் பாறையும் மணலும் தெரிய ஆரம்பித்தது. அங்கங்கே மீன்களும் துள்ளி மினுங்கிக் கொண்டிருந்தன.
அதைப் பார்த்த மதன், ஐய்யா.. மீனு என்ற சத்தமிட்டவாறே மீன்களைப் பிடிக்க ஓடினான்.
ஆனால் சுதனோ மதனை தடுத்து நிறுத்தி விட்டான். அவனை மீன் பிடிக்க விடவில்லை. உள்ளே போகாதே ஆபத்து என்று எச்சரித்தான்.
“2004 -ஆம் வருடம் கன்னியாகுமரியில் சுனாமி வரும்போது இப்படித்தான், முதலில் கடல் உள்வாங்கியிருக்கின்றது. அதைப் பார்த்த நிறைய பேர் மகிழ்ச்சியில் ஒன்றும் தெரியாமல் சிப்பி, சங்கு பொறுக்கவும் துள்ளிக் கொண்டிருந்த மீன்களைப் பிடிக்கவும் உள்ளேப் போயிருக்காங்க.
அந்த சமயம் பார்த்து சுனாமி வந்து நிறைய பேரை கடல் இழுத்து சென்றுவிட்டது. எங்க அம்மா எனக்கு இத கதையா நிறையத் தடவை சொல்லித் தந்திருக்காங்க. ஓடிவா, உடனே அம்மாக்கிட்ட சொல்லிவிடுவோம்.” என்று மதனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு ஓடினான் சுதன்.
இரண்டு பேரும் மூச்சு வாங்கிக் கொண்டே போட்டி போட்டு சொன்னதைக் கேட்ட அம்மா, உடனடியாக தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கினார்கள்.
எல்லா நிலையங்களும் சுனாமி எச்சரிக்கைச் செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. கடல்கரை கிராமங்களில் வசிப்பவர்களை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட சொல்லி தொலைக்காட்சியில் அறிவிப்பு வந்து கொண்டே இருந்தது.
வெளியே வந்த அம்மா பக்கத்து வீட்டில் உள்ளவர்களோடு பேசினார்கள். அவர்களும் பரபரப்பாக இருந்தார்கள். பதட்டத்துடனே பேசினார்கள். ஊர் முழுக்க அதற்குள்ளாக அனைவருக்கும் தகவல் தெரிந்துவிட்டது.
மீனவர்கள் வள்ளங்களையும், கட்டுமரங்களையும், மோட்டார் படகுகளையும் கரையிலிருந்து கிளப்பி கடலுக்குள் கொண்டு நிறுத்திக் கொண்டிருந்தார்கள்.
வருத்தம் தோய்ந்த முகத்தோடு வீட்டிற்குள் நுழைந்த அம்மாவை மதனும் சுதனும் பாவம்போலப் பார்த்தார்கள்.
மதன்… சுதனையும் அம்மாவையும் அவன் வீட்டிற்கு வந்துவிடுமாறு அழைத்தான்.
பதில் பேசாமல் நின்ற அம்மாவின் கையைப் பிடித்து இழுத்து கட்டாயப்படுத்தி ஒத்துக்கொள்ளச் செய்தான்.
முக்கியமான சான்றிதழ்கள், நியாயவிலைக்கடை அட்டை, அடையாள அட்டைகள், நிலப் பத்திரங்கள், நகைகள் போன்றவற்றையும் ஒரே ஒரு மாற்றுத் துணியை சுதனுக்கும் சேர்த்து எடுத்துக் கொண்டு பத்தே நிமிடத்தில் கிளம்பி விட்டார்கள்.
ஊரில் எல்லோரும் பாதுகாப்பான இடத்திற்கு அவர்களைப் போன்றே சென்று கொண்டிருந்தார்கள்.
நாய், ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை அனைவரும் சுதந்திரமாக அவிழ்த்து விட்டிருந்தார்கள்.
அவைகளும் தெருக்களில் அங்கேயும் இங்கேயும் சென்று கொண்டிருந்தன. பாவம் அவைகளும் உயிர் பிழைக்க வேண்டும் அல்லவா.
மதனின் வீட்டில், அன்பாக வரவேற்ற மதனின் அப்பாவும் அம்மாவும் சுதனின் நெற்றியில் முத்தமிட்டார்கள்.
வந்தவர்களுக்கு காய்ச்சிக் கிழங்கு அவித்து தேயிலை போட்டு குடிக்கக் தந்தார்கள் மதனின் அம்மா. கூடவே தனியாக பயறும், காணமும், உளுந்தும் அவித்து வெங்கலத் தட்டில் வைத்து உண்ணக் கொடுத்தார்கள்.
தேங்காய்த் தூவிய உளுந்தும் காணமும் என்றால் மதனுக்கு மிகவும் பிடிக்கும் கைநிறைய அள்ளி உண்பான். சுதனும் விரும்பி உண்பான்.
மதன் சுதனின் வீட்டில் சாப்பிட்ட பாச்சோறைப் பற்றி பேசிக்கொண்டே இருந்தான்.
கடல்கரை என்ன ஆனதோ என்று தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னே பெரியவர்கள் வருத்தத்தோடு உட்கார்ந்திருந்தார்கள்.
நிலையத்தில் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றி சொல்லிக் கொண்டே இருந்தார்கள். கடலையும் தொடர்ந்து காட்டிக் கொண்டே இருந்தார்கள்.
கடலில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. எல்லோரும் கவனமாகப் பார்க்க ஆரம்பித்தார்கள்.
அதுவரை கவனிக்காம இருந்த சுதனும் மதனும்கூட மெதுவாக சுதனின் அம்மாவின் இருபக்கங்களிலும் ஆளுக்கு ஒருவராக ஒடிக் கொண்டு இருந்தார்கள்.
சுனாமி எதுக்கு வருது? என்று மதன் கேட்டான். மதனின் அப்பா பதில் சொல்ல ஆரம்பித்தார்.
கடலுக்குள் நில அதிர்ச்சி வரும். அப்போது நிலம் இரண்டாய் பிளக்கும். பிளவின் உள்ளே கடல் நீர் வேகமாக இறங்கும் பின் முன்னிலும் வேகமாய் வெளியே வரும்.
அப்படி வேகமாக வெளிவருகிற நீர் அலையாகக் கிளம்பும் அது கரைக்கு வர வர மிக உயரமான அலையாக உருமாறி ஊருக்குள் புகுந்து விடும்.
கடல்கரை ஓரங்களில் அலையாத்திக் காடுகளும் மணல் திட்டுகளும் முன்பு அதிகமாக இருந்தன அவை சுனாமி அலைகளின் வேகத்தை தடுத்து மக்களைக் காப்பாற்றி வந்தன.
ஆனால் தற்போது அவைகளை பணத்திற்காகவும் வேறு காரணங்களுக்காகவும் நாம் அழித்து விட்டோம். அது அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது.
சுனாமியை முன்னரே கண்டறிந்து இப்படி எச்சரிக்கை விடுவதன் மூலம் தற்போது மக்களை காக்க முடிகிறது. ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி எல்லோருக்கும் சரியாக தெரியாததால், அதிக உடைமைகள் சேதம் அடைவதோடு சேர்ந்து உயிர்ச் சேதமும் அதிகமாகி விடுகின்றது.
மதனின் அப்பா சொல்லிக் கொண்டிருக்கும் போதே. பனைமரம் உயரத்திற்கு பெரிய அலை ஒன்று வந்து கொண்டிருந்தது கடலில்.
அதற்கு அடுத்த அலையோ இரண்டு பனை மரம் உயரத்தையும் தாண்டி எழும்பி வந்து கொண்டிருந்தது.
கரையைத் தாண்டி ஊருக்குள் நுழைந்த அலை, வீடுகளை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தது. நின்று கொண்டிருந்த வண்டிகளையும் புரட்டி தள்ளிக்கொண்டும் கடலுக்குள் சுருட்டி இழுத்துச் சென்று கொண்டுமிருந்தது அலை.
அதைப் பார்த்து பயந்துபோன சுதனையும் மதனையும் இழுத்து அணைத்த சுதனின் அம்மா, மதனின் நெற்றியில் அன்பாக முத்தமிட்டார். கண்களில் கண்ணீர் கட்டி நின்றிருந்தது.
இரா. அரிகரசுதன்
Leave a Reply