வண்டியில அடிபட்டு செத்துகிடக்குது பாருங்கப்பா,
பாவம் அந்த பூனை.
சாம்பல்கரிய நிறத்தில்
உப்பிப்போய் கிடந்த அந்தப் பூனையின்
உடலில் வண்டியின் தடயங்களைக்
கண்டறிய இயலவில்லை.
இதோட அப்பா பூனை எங்கப்பா
இருக்கும்?… தேடிவரும்ல.
நெஞ்சுக்கு முன்னிருந்தது
அவனின் குரல்…
அப்பாவை எவ்வளவு பெரிய
உருவமாக எழுப்பிவிட்டான்!
கடுகுக்குள்ளிருந்து
எகிறும் குரலை
குறுகத் தறித்தால்
எங்கு கொண்டு பொத்தி வைப்பது.
அது பெரிய பூனைதான்
என்பதையும்
தனித்தலையும் திறன் கொண்டது என்பதையும்
நான் சொல்லவில்லை.
அவ்வாறே அது
கைவிடப்பட்டதாகவோ
அல்லது கைவிட்டப்பூனையாகவோக்கூட
இருக்கலாம்.
வரவேண்டியவர்கள் வராமல்,
பார்க்க வேண்டியவர்கள் பார்க்காமல்
உடலை எப்படி எடுப்பது?
கால்களில் தயக்கத்தைப்
பூட்டிவிட்டான்.
இந்தப் பூனையை
என்ன செய்வது?
அப்பா…
கார்ட்டூனில் வருவதுபோல்
எரிக்க வேண்டுமா ?
இல்லை,
மண்பறித்து அடக்கம் செய்ய வேண்டுமா?
பின்னாலிருந்தொரு
பள்ளி வாகனம்
தனது ஒலிப்பானைக் கொண்டு
ஓங்கி அறைந்தது முதுகில்,
அத்து மீறிய அவசரம்.
வண்டிக்குள்ளிருந்து
சீருடைக்குழந்தைகள் எட்டிப்பார்த்து
தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
பக்கக் கண்ணாடி வழியே
முறைத்துக்கொண்டிருந்தார்
ஓட்டுனர்.
எவ்வளவு இலாவகமாக
வளைத்து ஓட்டிச் செல்கிறார் வண்டியை,
ஆள் திறமைதான்.
வண்டிகள் சென்று கொண்டிருந்தன.
அப்பா…
நாம திரும்ப வரும்போது
இந்தப் பூனைக்கு என்ன நடந்திருக்கும்!
மகனே….
இதுவே, நமது ஆழ்ந்த இரங்கலை
தெரிவித்துக்கொள்ள வேண்டிய
நேரம்.
துக்க வீட்டில்
சொல்லி செல்லக்கூடாது,
எனவே வா…
காத்திருக்கும் அந்தப்
பயணத்தின் மீது ஏறுவோம்.
– இரா. அரிகரசுதன்
Leave a Reply