உறவுகளே இல்லாத உலகமாக
உருமாறும் நாள்களையே காண்கின்றோமே;
பிறந்திட்ட பிள்ளையெலாம் வளர்ந்த பின்னர்
பெற்றோரை தள்ளிடுவர் படுகுழிக்குள்;
சிறந்திட்ட கல்விதனில் தேர்ந்த பின்னர்
செல்கின்றார் எங்கெங்கோ செல்வம் சேர்க்க;
உறவுசுற்றம் யாவினையும் நீக்கி வைத்தே
ஒரு வட்டத்துள்ளெங்கோ சுழலுகின்றார் !
பறக்கின்ற வரையிங்கே பாதுகாக்கும்
பறவைகளின் வாழ்வையின்று மாந்தர் கொண்டார்;
சிறகிங்கே முளைத்தவுடன் பிரிந்து செல்லும்
செல்வமக்கள் உறவறுக்கும் நிலையைக் காண்பார்;
நறவென்று நினைத்திங்கே வளர்த்ததெல்லாம்
நச்சாக ஆனதென வருந்துகின்றார்;
விறகடுக்கில் வேகின்ற நேரத்தும்தம்
வித்தான மக்களையே காணா தானார் !
உறவென்னும் உயர்பந்தம் இற்றுப் போயின்
உயரொழுக்க நிலையுலகில் மறைந்து போகும்;
அறமுலகில் அழியாது நிலைப்பதற்கிங்(கு)
அரும்பாச உணர்வுறவு தழைத்தல் வேண்டும்;
துறவியைப் போல் யாவருமே உறவறுத்தால்
தொலைந்தழியும் ஞாலத்தில் மனிதநேயம்;
உறவே தான் மானுடத்தின் ஞானப் பாலம்
உயிர்போலப் போற்றாயின் அழியும் ஞாலம் !
– கே.பி.பத்மநாபன்
Leave a Reply