ஒரே ஒரு இந்திரன்ஸ்…

ஒரே ஒரு இந்திரன்ஸ்…

  • By Magazine
  • |

நாற்பத்தைந்து வருடங்களாக சினிமாவில் தொடர்ந்துக் கொண்டிருக்கும் இந்திரன்ஸ் சினிமா வாழ்க்கையில் திரையில் மின்னி மறைந்துப் போகும் நகைக்சுவை கதாபாத்திரங்களிலிலிருந்து பெருமைப் பொருந்திய முழு நீள கதாபாத்திரங்களுக்கு தன்னை வளர்த்துக் கொண்டு உயர்ந்து நிற்கிறார். இவரின்  சினிமா வாழ்க்கை என்பவனவற்றை குறித்து 2024 ஜீலை 7-ல்  மலையாள மனோரமா ஞாயிறு இதழில் வெளி வந்த பேட்டி…

மலையாளத்தில் பேட்டி கண்டவர்

டி. பி  லால்,

தமிழில்: கிருஷ்ணகோபால்..

கேள்வி: இந்த சினிமாவில் இந்திரன்ஸ் திடுக்கிட வைக்கிறார் என்பனப் போன்று உங்கள் சினிமா குறித்து சமீபகாலமாக நம்பமுடியாத ஒரு உரையாடல் கேட்டுக் கொண்டிருக்கிறது.அந்த மாற்றம் என்பது ஒரு நடிகனின் ஆழத்தைக் குறித்து மலையாள சினிமாவை உணரச்  செய்திருக்கிறது என நம்பலாமா…?

மேற்கொண்டு  உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கலாம்…?

பதில்:  முழு நீள கதாபாத்திரங்கள் வரும் போது அதை ஏற்றுக் கொள்வதில் மனதில்  ஒரு பெருமையும் பிடிபடாத ஒரு சந்தோசமும்  நிறைந்திருக்கிறது.. அது போலே ஒரு சோர்வும்… முதலில் இதை நான் நம்பவில்லை.. இருப்பிலும்  ஏனோ எனக்கு ஒரு ஆர்வமின்மை. சொல்லத் தெரியவில்லை..

முன்பு நான் செய்த கதாபாத்திரங்களைக் குறித்து ஆலோசிக்கிறேன்.எத்தனை எத்தனையோ காமடி வேடங்கள் செய்திருப்பதைக் குறித்து  இடையிடையே  சிந்திப்பேன்.அந்த காலத்தில் என்னை உருவக் கேலி செய்யும் விதமாக  கொடக்கம்பி (குடைக்கம்பி) போன்று அழைப்பதை நான்  மகிழ்சியாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.. இப்போது இயக்குனர்கள் என்னை கொண்டு அவ்வகையான கதாபாத்திரங்களை சிந்திப்பதில்லையோ என சந்தேகிக்கிறேன்.. அவ்வாறு வந்தால் ஏற்றுக் கொள்வேனா என்ற எனது விருப்பதிலும்  ஒரு குழப்பமுண்டு…. ஆனால் ஒரு நடிகன் என்ற நிலையில் எந்த வேடங்கள் வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.. இதனிடையே  வில்லன் வேடமும் செய்தேன்..நகைச்சுவை நடிகர்களுக்கு ரசிகர்களின் ஆதரவும் பெரும்பான்மை மக்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்…

நாம் ஒன்றைச் செய்யும் போது ஜனங்கள் அதைப் பார்த்து சிரித்தால்  அந்த முயற்சி  வெற்றியடைந்தது என்று நாம் நினைத்துக் கொள்ள வேண்டும்…எனது வயதை ஒட்டிய  கதாபாத்திரங்களே  பொதுவாக  கிடைக்கிறது.. சினிமாவை பெருமையாக நோக்கும் நபர்களிடமிருந்து நல்ல ஆலோசனைகள் கிடைக்கப் பெறுகின்றன. சாதாரண ரசிகர்களின் இடத்துக்கு இறங்கிச் செல்லும் கதாபாத்திரங்களை செய்ய வேண்டுமென்பதே எனது எண்ணம்..

கேள்வி: ஒரே மாதிரியான வேடங்கள் ஏற்பதில்திருப்தி இல்லாமலிருக்கிறதா…?

பதில்:  ஒரு நடிகன் உருவாகி  வருவதென்பது சினிமாவும் அதில் வரும் கதாபாத்திரங்களை மட்டும்  கொண்டல்ல…. நடிகன் என்பவன் சமூகத்தில் உள்ள ஓர் ஆள்.ஒரு நடிகன் அடையாளப்படுவதற்கு பின்னால்   அவன் வாழுகின்ற சமூகம் மற்றும்  சூழ்நிலையின் குறுக்கீடுகள் உண்டு.. என்னுடைய விஷயத்தில் அது முழுவதும் சரியாக வருவதற்குக் காரணம் இளம் பருவத்தில் பல சவால்களை எதிர் கொண்டு வளர்ந்தவன்.. அது குறித்து பலருக்கும் தெரியுமென்பதால் அதை மறுபடியும் சொல்ல வேண்டியதில்லை…. நான் எதிர்கொண்ட விஷயங்கள் அசாத்தியமானதாக இருந்தது. விருப்பப்பட்ட எதுவும் கிடைப்பதில்லை.. வயிறு நிறைந்து விட்டது என சந்தோசத்தோடு தூங்கப்  போன நாட்கள் என்றுக் கிடையாது.. பள்ளிக் கூடம் போக இயலவில்லை.குழந்தை பருவத்தில் அனுபவித்த சிரமங்கள் அதிகம்….ஆனால் இன்று காணும் வாழ்க்கை அவ்வளவு ஏமாற்றமளிப்பதாக இல்லை.. ஆனால் இப்போது சின்னச் சின்ன விருப்பங்கள் கூட கைகூடி வரும் வாய்ப்புகள் அதிகம்..ஆனால் ஒன்றுமே சாத்தியப்படாத அந்த காலத்தை குறித்த விஷயங்களைத் தான் ஞாபகப்படுத்தில் கொண்டு வந்துப் பேசுகிறேன்…  வறுமையோடு போராடுவதுப் போல்  வாழ்க்கையில் கடினம் மற்றும் அழகு நிறைந்த காலம் வேறு  இல்லையென்றே சொல்லலாம்…

நிறம் மங்கிப்போனாலும் அந்த வாழ்க்கையில் நிறைய கனவுகளும் ஆவல்களும் இருந்தன. எதிர்காலத்தில் எல்லாம் சரியாகி வரும் என்ற எதிர்பார்ப்பு என்னை இயங்க வைத்தது..

அந்த வாழ்கையை இன்றைய வாழ்க்கையோடு ஒப்பீடு செய்யும் போது இப்போது நாம் வாழ்வது ஒரு   இயந்திர மயமாகிப் போன வாழ்க்கைதான் என தோன்றுகிறது…திரைப்படத்தில் கதாபாத்திரமாக மாற்றமடைந்து வாழ்க்கை என்னோடு முரண்பட்டு நிற்கும் போது ஏற்படும்  சோர்வு என்பதற்கு பின்னால்  கவலையும் சேர்ந்துக் கொள்ளும்…

கேள்வி: இதையெல்லாம்  தாவிக் கடந்துப் போகவில்லையென்றால் நீங்கள் நடந்து முன்னோக்கிப் போக பல காலம் பிடித்திருக்கும் இல்லையா…?

பதில்: நான் சினிமா வாழ்க்கை வேண்டாமென்றுச் சொல்ல வரவில்லை.. கலை குறித்த விசாரணையில் நான் இப்போது இருக்கிறேன் என்பதை சொல்ல வருகிறேன்.. கலைக்கு முழுமையும் திருப்தியும் தேவைப்படுகிறது. இதுபோன்ற விசாரணையில் என்னை ஈடுப்படுத்திக் கொள்ளும் போதுதான் என்னுடைய நிலையில் மாற்றம் உண்டானது.. சவால்கள் நிறைந்த  திரைப்படங்களின்  வேடங்களைத் தான் நான் விரும்புகிறேன். நடிகர் என்ற நிலையில் ஒரு முழுமைத் தேவை. வாழ்கையை திரும்பி பார்க்கும் போது பட்டினியும் வறுமையும் நிறைந்திருந்த வாழ்க்கை இப்போது முடிவுக்கு வந்து விட்டது என உணர்ந்துக் கொள்ள முடிகிறது. அவ்வாறு மூர்சையாகிப் கடந்துப் போன என்னைத்தான் எனக்கு விருப்பம். நான் இயங்கும்  கலையிலும் அது ஆத்மாவாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்..

கேள்வி: புதிய காலத்து சினிமா, முறை பிறழ்ந்த உறவுச் சிக்கல்களை உரக்க எழுப்புகிறது. உண்மையான உறவுகள் குறைந்து வருவதாக நீங்கள் ஒரு முறை கூறியிருக்கீர்கள் அல்லவா….?

பதில்: உண்மையான உறவுகளுண்டு… அதில்  புதிய தலைமுறை குழந்தைகள் குறித்து சொல்லியிருப்பேன். திரைப்படத் துறையில் பொதுவாக எல்லோரும் நட்புணர்வோடு பழகுபவர்கள்தான்..இப்போது சினிமா துறையில் பழைய காலத்து ஆத்மார்த்த  நெருக்கத்தை   காண முடியுமா என கேட்டால் சந்தேகமே.. சினிமாவில் பல வருடங்களாக நடித்துக் கொண்டிருப்பவர்களோடு புதிதாக வரும் நடிகர்கள்  அவர்களின் அனுபவங்களை கேட்டு அறிந்துக் கொள்வது உண்டு.

ஒரு வழிகாட்டியாக இருக்கும் காரியத்தையும் அவர்கள் ஏற்றுக் கொள்வதுண்டு. படப்பிடிப்பு தளத்தில் சென்றால் நாம் உட்கார்ந்திருக்கட்டும் என நினைத்து அவர்கள் மரியாதையாக எழுந்து  நகர்ந்துப் போய் உட்கார்ந்துக் கொள்வார்கள். பொதுவாகவே பெற்றோர்கள் குழந்தைகளின் பக்கத்தில் வந்தால் அவர்கள் பெற்றோர்களுக்கு இடமளித்து   தள்ளிப் போய் உட்கார்ந்துக் கொள்வார்கள்  அல்லவா…? அப்படிப்பட்ட ஒரு சிந்தனை அது… அதில் குற்றம் சொல்ல என்ன இருக்கிறது.  காலம் நகர்ந்துக் கொண்டிருக்கின்றது அல்லவா..? அவருடைய பார்வையும் கொண்டாட்டங்களும் பழைய தலைமுறையிலிருந்து வித்தியாசமானது…

கேள்வி: மோகன்லால், மம்முட்டி மற்றும் அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றோரோடு நீங்கள் நெருக்கமான உறவை பேணுகிறீர்கள். அம்மா (மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம்) கூட்டத்தில் நீங்கள் மோகன்லாலுக்கு கொடுத்த  ‘முத்தம்’பரவலாகப் பேசப்பட்டது. அதன் பிறகு அவர் உங்கள் காதில் என்ன சொன்னார்…?

பதில்: முத்தம் கொடுத்தப் பின்பு அவர் என் காதில் சொன்ன விஷயம் வெளியேச் சொல்லக்கூடாதது… இருப்பினும் சொல்கிறேன் முத்தம் கொடுக்க எனக்கு யாருமில்லை என்றுச் சொன்னார்.லால் சாரோடு  சினிமாவில் அதிகம் நடித்ததில்லை என்றாலும் நடிப்பு வாழ்க்கையில் என்னை எப்போதும்  உற்சாகப்படுத்திக் கொண்டிருப்பவர்… ஒரு தையற் கலைஞனாக என்னுடைய வாழ்க்கையை  ஆரம்பித்ததிலிருந்து அவரை எனக்குத் தெரியும்.. நகைச்சுவையை தனக்குள் தேக்கி வைத்துக் கொண்டு  அனாயசமாக வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட ஜெகதி அண்ணன் எனது விருப்பத்திற்குரிய மற்றொருவர். அது போல் மம்முட்டி சாரும்.

ஒருமுறை திருவனந்தபுரத்திலிருந்து கொச்சிக்கு பயணம் செய்யும் போது என்னையும்  கூடச் சேர்த்துக் கொண்டார். அவர்தான் வண்டி ஓட்டினார். வாசிப்பு, பயணங்கள், எழுத்தாளர்கள்  என்பனப் போன்று சினிமாவுக்கு வெளியே உள்ள விஷயங்களைக் குறித்து நாங்கள் பேசிக் கொண்டோம். அடூர் சாரோடு எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. யாருமே எட்ட முடியாத உயரத்தில் இருப்பவர் அவர். அவரின் வெளுத்த நீண்ட முடியும்;

கவனிக்கத்தக்க ஜீப்பா என எல்லாம் எனக்கு விருப்பமானது.. சில நிகழ்ச்சிகளில் அவரோடு கலந்துக் கொண்டிருக்கிறேன்.. என்னைப்  போன்ற ஒரு   நடிகனை பொருட்படுத்தி அவர் பேசியிருக்கிறார் எனவும் கேள்விப்பட்டதுண்டு .அதை நான் அதிஷ்டமாகவே கருதுகிறேன்..

கேள்வி:  சமீபகாலத்தில் வெளிவந்த திரைப்படங்களில் தாங்கள் ஏற்றுக் கொண்ட வேடங்களின் வழியே பெண் ரசிகைகளின் அமோக அங்கீகாரம் கிடைத்ததல்லவா..?

பதில்: ஜீவனுள்ள கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்றால் நடிப்பில் எந்த உச்சத்தையும் அடைவேன்….வாழ்க்கையை வெளிப்படுத்தும் திரைப்படங்கள் எவரையும் சோர்வடையச் செய்வதில்லை…எளிய மனிதர்களின் பக்கத்தில் நிற்கும் சினிமாக்கள்தான் குடும்ப படங்களின் அடிநாதம்…நாமும் ஒரு குடும்பத்தினுடைய பாகம் அல்லவா…? அம்மா, மனைவி,தங்கை என எத்தனைப் பேர் ஒரு ஆண்ணின் வாழ்க்கையோடு சேர்ந்து நிற்கிறார்கள். குடும்பத்தின் தோல்வி,அன்பு,மகிழ்சி எல்லாவற்றையும் அறிந்தவன்தான் நான்.சில சினிமாக்கள் செய்யும் போது இது வீட்டில் நடக்கிற விஷயங்கள் அல்லவா என நினைப்பேன். அது பழங்கதைகளை ஞாபத்தில் கொண்டு வரும். இப்படிப்பட்ட சினிமாவின் கதைகளை நான் மனைவியோடு சொல்வதுண்டு அவள் அபிப்ராயம் சொல்வாள்…

கேள்வி: பத்தாம் வகுப்புக்கு நிகரான தேர்வு எழுத இந்திரன்ஸ்  தீர்மானித்திருப்பதென்பது  பொது சமூகத்தில் ஒரு பேசு பொருளாகியிருக்கிறதே….?

பதில்: வீட்டில் குடும்பத்தினர்   எதிர்க் கொள்ளும் கஷ்டப்பாடுகளைப்  பார்த்து படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வேலைக்குச் சென்றவன் நான்..நிகழ்ச்சிகளில் என்னைப் வெளிப்படுத்தும் போது கூட  நெருக்கடிக்குள்ளாகிய சந்தர்ப்பங்களும் உண்டு…சினிமா வாழ்க்கையில் பல அங்கீகாரங்களை பெற்றிருந்தாலும் கூட பேச இயலாத உள்வேதனையோடு வெளி வருவேன்..

படிக்க வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சகாலமாகவே என் மண்டையில் ஓடிக் கொண்டிருக்கிறது.நெருக்கடிகள் இருப்பதால் அது முடியவில்லை.கல்விக் கொடுக்கும் தன்நம்பிக்கை  மிகப் பெரியது. புத்தகங்கள் வாசிப்பதன் வழியே மனிதர்களைக் குறித்தும், சமூகத்தைக் குறித்தும் உலகத்தைப் பற்றியுமான பொதுவான  ஒரு பார்வை  உண்டு.. ஆனால் அது மட்டும் போதுமானதா என்றால் இல்லை…? படப்பிடிப்பு தளத்திற்குப் புத்தகங்கள் எடுத்துச்  செல்வதுண்டு … ஆனால் இப்போது அதிகமும் பாடப் புத்தகங்களை மட்டுமே கொண்டுச் செல்கிறேன்.. கல்விப்  பின்புலம் வழியாக ஏழாம் வகுப்பு தேர்வில் வெற்றியடைந்ததற்குப்  பிறகு எஸ்.எஸ். எல்.சி தேர்வு எழுதுவேன்..படிக்க முடியவில்லையே என்ற கவலை இவ்வாறு உள்ளுக்குள்ளிருந்து கழன்றோடிப் போகும்…

கேள்வி: இனிமேல்  வெளி வர உள்ள உங்கள் திரைப்படங்களைக் குறித்து…?பதில்: சின்ன சின்ன வேடங்களைத்தான் முன்பு செய்திருக்கிறேன். அப்போது ஒடி நடந்த ஆற்றல் கொண்டு திரைப்படங்களில் நடித்தேன்.வருடத்தில் 37 சினிமாக்கள் வரையிலும் செய்த காலமுண்டு..ஆனால் இப்போது தேடி வருகிற கதாபாத்திரங்கள் எல்லாம் மிகவும் பெரியது..காலம் கடந்துப் போகும் போது ஆர்வம் குறைந்துப் போகுமோ எனத் தெரியவில்லை. தேடிவருகிற கதாபாத்திரங்களைப் பார்க்கும் போது சிரிக்கவும் மற்றவர்களை சிரிக்க வைக்கவும் முடியவில்லையே என்ற கவலை உண்டு.. ஆற்றல் குறையும்  முன்பே நான் எதிர்பார்க்கும் அவ்வாறான கதாபாத்திரங்கள் வரும் என கருதுகிறேன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *