‘வர்மம்’ எனும் மர்மக்கலை…!

‘வர்மம்’ எனும் மர்மக்கலை…!

  • By Magazine
  • |

சுளுக்கு வர்மம்

சென்ற மாத இதழில் நாபியின் கீழ் உள்ள வர்மங்களில் ஒன்றான வித்துவர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான சுளுக்கு வர்மம் பற்றி அறிவோம்.

சுளுக்குவர்மம், முதுகில் நான்காவது பின்வாரி எல்லின் நடுவினைச் சார்ந்து சிப்பிக்குழியின் மேல் அமைந்துள்ளது. இவ்வர்மம் சுளுக்கி வர்மம், உடல் சுளுக்கி வர்மம், சிப்பிச்சுழுக்கு வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது.

                “நாமப்பா கைப்பூட்டு எல்லினு நடுவில் தானே

 சேர்ந்ததொரு சுளுக்குவர்மம் என்று சொல்வார்”.

                                                                                                – வர்ம கடிகார நரம்புச்சூத்திரம்

“வாறரிய வாரி நாலில் உள் சுளுக்குவர்மம்”.

                                                                                                – வர்ம கருவிநூல்

மேலும்,

செய்யவே பிங்கலை முண்டேலும்பின் சார்வில்

                                சார்வான வாறெலும்பில் சுளுக்கிக்காலம்

                அடவாக வெட்டடி கொண்டபேர்க்கு

                                அடிவயறூதி வரும் கைகால் கோணும்

                நாடியெடா சுளுக்குமொரு பக்கம் தானும்

                                நாடியுடன் வேர்வை வரும் தளரும் மேனி

                மானே கேள் நரம்பெல்லாம் அயர்ந்துபோகும்

                                மதமான உடல்கோணி இருப்பான் காணே.

                                                                                                                 -வர்ம தாண்டவம்-500

“தானென்ற சுளுக்கு வர்ம குணம் தன்னைக்கேளு

குறிகேடாய் பழிகள் செய்யும் பிராணனுக்கு

வானென்ற வதம் வருத்தும் வன் பிணிகள்

வருத்தமுடன் குத்தல் வாயுவழி தொடரும்

நானென்ற நிலை போக்கி நிலை நில்லாது

நடுவரியில் சுளுக்கி நிற்கும் வழிவிடாது

தானென்ற தானமதில் கொண்டால் பின்னும்

குறிகுணங்கள் பலபலவாய் போகுந்தானே”.

                                                                                                           – வர்ம குருநூல்

“தானிந்த வர்மத்தின் குணங்கள் மெத்த மாறுதற்காய்

                        வாசிநிலை வகையறிந்து இதம்பதமாய் கலையனுக்கி

வானிந்த வாரிகோரி மணிபூரகத்தின் மேல்பிராணன்

                       தேறிமெள்ள பள்ளை தன்னில் வூக்கமுறத்தடவிசென்னி

சீணித்தல் மாற்று சீவாத்ம நிலைகறக்கி நட்டெல்

                       முட்டுகொடுத்து பிடி வளைத்து மேல்மூச்செடுத்தூனமாறும்

காணிந்த கைமேல் பிணைத்துச்சிபதமறிந்து தட்டிப்

                       பத்தோடவுசதங்கள் செய்ய பாழாக தென்றறி நீ”.

                                                                                                                வர்ம குருநூல்

          “தானென்ற வர்மமது தீரத்தானே

வழிமுறையை நன்றாய் கேளுயர்

தானமென்ற முடிச்சஞ்சும் அனுக்கி யேந்தி

கலையைந்தில் உறவாக்கி உன்னச்சொல்லி

வானென்ற வாரிக்கோரி வழிதெரிந்தனுக்கி

வன்னடங்கல் கீழ்சுழி மேலேந்தி துன்னலுன்ன

தூனென்று துடிதுடிக்குமிந்த வர்மம்

தூட்சமென மாத்திரையாய்ந்து மருந்துமீயே”.

                                                                                                 – வர்ம குருசூக்ஷத் திறவுகோல்

எனவும் குறிப்பிடுகிறது.  மேலும்,

சுழுக்கெனும் வன்மம் பலவாம் துண்டத்துள்ளுற

சுழுக்குறும் வகையான் உற்றுறில் சுழுக்குறுமிஃது

வழுக்குறும் வன்மம் கண்டந்தொடை அகம்புறமுற

எழுக்குற இன்னும் உண்டெனச் செப்பே.

                                                                                               -வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்:

சுழுக்கு எனும் வர்மங்கள் உடலில் பலவாகும். தாக்கம் கொள்ளுகின்ற அடிப்படையில் சுழுக்கிக்கொள்வதால் இப்பெயர் உண்டாயிற்று என்பதாம். எளிதில் வழுக்கிடும் இவ்வன்மங்கள் கண்டச்சுழுக்கு, தொடைச்சுழுக்கு, அகச்சுழுக்கு, புறச்சுழுக்கு என்பதுமன்றி இன்னும் உண்டு என்பதாம்.

செப்பிடும் வன்மம் சிப்பியோரடுத்து குழி மேலே

அப்பிடும் வாயு அகம்புகுந்தடங்கியே வுள்ளுறும்

ஒப்பியே வன்மம் வளமுறைக் கொண்டுறில் உள்வழி

தப்பியேக் கொழுத்தும் உழையும் தளர்வுறும் எனலே.

-வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்:

சுழுக்கு எனச் சொல்லும் இவ்வர்மம் சிப்பிக்குழியின் ஓரம் மேலே உள்ள வர்மமாகும். இவ்வர்மத்தில் வாயுவானது அகம் பற்றி எளிதில் வெளியேற முடியாமல் அடங்கிவிடும். இந்த வர்மத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அகங்கொழுத்தி உள்ளுக்குள் உழைந்து உடலில் தளர்ச்சையும் உண்டாகும் என்பதாம்.

என்னுறும் வன்மத்துள்ளுறும் மாத்திரை உற்றிடில்

உன்னுறும் உள்ளுற மூச்சும் முட்டுறும் நெஞ்சில்

கன்னுறும் கனத்தலும் குத்தலும் கடும்பிணி உற்றலும்

போன்னுறும் பல்குறிக் கணக்காய் பழிதரும் விதியே.

-வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்:

இந்த வர்மமானது மாத்திரையாகக் கொண்டால், நெஞ்சில் மூச்சுமுட்டும், கனத்து காணும், குத்துழைச்சலும் கடும்பிணி உள்ளே இருப்பதும் போன்று பலகுறிகுணங்களைக் காட்டும் என்பதுமே இவ்வர்மத்தின் விதியாகும்.

சுழுக்கு வன்மம் அழுக்குறும் மனதினில் அச்சமுறப்

பழுக்கும் பழமெனவாம் சடம்பிருபிருத்துழையுமாம்

தழுக்கும் தளரும் குத்தும் குடையும் மூச்சும் இரையும்

வழுக்கும் நினைவும் வன்மையும் போம் என்னே.

-வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்:

சுழுக்கு வர்மத்தில் காயங்கொண்டால் பின்னாட்களில் மனதில் அச்சமும் உடல் பழுத்த பழம்போல் முதிர்ந்த வயதினர் போல் ஆவதுடன் அந்த இடம் பிருபிருத்து (உணர்வற்றதைப்போல்) உழைச்சல் தோன்றும், உடம்பெல்லாம் வீங்கினார்போல் உணர்வும், தளர்ச்சையும், குத்தும் குடைச்சலும் மூச்சு இரைப்பும் உண்டாகும். நினைவு தடுமாறலும் உடலின் வலிமையும் போகும் என்பதாம்.

என்னவாம் சுழுக்கு இதமுறத் தூண்டுறில்

கன்னலாம் மேனிக்கசடறும் வாயுச்சுழுக்கும்

வன்னலாம் பிணிபல பாரமும் தூரமுமாம்

இன்னலும் பலவகை இல்லாதாகிடும் எனலே.

                                                                                                வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்:

                சுழுக்கு வன்மத்தை இதமாகத் தூண்டிக் கொடுத்தால் உடலானது இனிமையாக மாறும். வாயும், சுழுக்கு போன்றவைகள் கசடற்று போகும். பல வகையான துன்பங்களாக நீண்டநாள் தொடரும் பிணிகளும் தூரம் போய்விடும். வரவிருக்கும் பல துன்பங்கள் கூட வராமல் தடுக்கப்படும் என்பதாம். (நோய் எதிர்ப்புத்தன்மையும் உண்டாகும்) என வர்ம யோகசூத்திரமும் குறிப்பிடுகிறது.

இவ்வர்மத்தில் தாக்கம் கொண்டால், பிராணவாயுவானது சிக்கல்கொண்டு மூச்சுவிட முடியா வண்ணம் சுளுக்கிக் கொள்வதுடன் நெஞ்சுப்பகுதியில் தாங்கமுடியாத குத்தலும், வாயு மேலேறி பிடித்து வைத்திருப்பது போலும் தோன்றும். சிலநேரம் அவ்விடம் பெரிய நோய்கள் உள்ளே இருப்பது போன்று பிருபிருத்து பலபல குறிகுணங்களை மாறி மாறி உண்டாக்கும். அசதி, தளர்ச்சை, க்ஷயம், குன்மம் உண்டாகும். வியர்வையும், விதனமும் மிஞ்சும் என வர்ம சுவடிகள் குறிப்பிடுகின்றன.

இவ்வர்மத்தை இளக்குவதற்கு வர்மாணி தடவுமுறைப்படி தடவி, அடங்கல்களைத் தூண்டி, அனுக்கிவிட சுகம் உண்டாகும் என வர்ம நூல்கள் குறிப்பிடுகின்றன.

இவ்வர்மத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு பின்னாட்களில் கடுகடுப்புடன் உளைச்சல், மூச்சுமுட்டு, பிருபிருப்பு, மன உளைச்சல், வாயு மேலேறி பிடித்திருப்பது போன்ற உணர்வு இவற்றில் ஏதேனும் ஒன்றோ பலவோ பின்விளைவாக ஏற்படக்கூடும். இவ்வர்மத்தை தகுந்த தூண்டுமுறை நுட்பங்களைப் பயன்படுத்தி தூண்டிவர, இரைப்புநோய்கள், மூச்சுமுட்டு, வாயுத்தொல்லைகள், வாதநோய்கள், இருமல், நெஞ்சுபாரம், தோள்வலி மற்றும் அனைத்து விதமான வலிகளும் குணமாகும் என அனுபவமிக்க வர்ம வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *