கல்லீரல் கொழுப்புத் தேக்கம்

கல்லீரல் கொழுப்புத் தேக்கம்

  • By Magazine
  • |

– கஸ்தூரிபா ஜாண்ஸன்

தற்காலத்தில் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அதிகம் காணப்படுகின்றன. அதே போன்று கல்லீரலில் கொழுப்பு படிவதால் ஏற்படக் கூடிய  என்னும் (Fatty Liver) நோயும் பலருக்கு காணப்படுகிறது. இந்த கொழுப்பு கல்லீரல் நோய் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது நமது ஆரோக்கியத்துக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆரம்பக்கட்டத்தில் இந்த நோயை குணப்படுத்துவதும் எளிது. ஆனால் இது தீவிரமடையும் போது தான் நாம் மருத்துவரை சந்திக்கிறோம். சில சமயங்களில் வேறு ஏதாவது நோய் என்று ஸ்கேன் பண்ணும் போது Fatty Liver என்னும் நோய் இருப்பதாக அறிந்து மனம் வருந்துகிறோம். சுமார் 500-க்கு மேற்பட்ட பணிகளை செய்யும் கல்லீரல் ராஜ உறுப்புகள் எனப்படும் இதயம், மண்ணீரல், சிறுநீரகம் போன்று ஏழு உறுப்புகளில் கல்லீரல் முக்கியமானது ஆகும். எனவே கல்லீரல் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.

கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள்

கல்லீரல் பாதிப்பால் உடலில் ஏற்படும் அறிகுறிகள் பெரும்பாலும் தெரியாது. ஆனால் ஆரம்பத்தில் கண்டுபிடிப்பது கடினம். வலது மேல் வயிற்றுப்பகுதியில் வலி இருந்து கொண்டே இருக்கும். வலது தோள்பட்டையிலும் வலி, கண்ணின் கருவளையம், வாய்துர்நாற்றம், காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை சில அடையாளங்கள் ஆகும்.

பெரும்பாலும் நாற்பது வயதை நெருங்குபவர்களுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்கும் போது தற்செயலாக தென்படும் இந்த நோயின் அறிகுறிகள் இப்போது இருபது வயது முதலே தென்பட ஆரம்பித்திருக்கிறது.

இருவகை கொழுப்பு கல்லீரலில் படிதல்

ஒன்று மதுவால் கல்லீரல் செல்கள் பழுதாகி அதில் குளறுபடி ஏற்பட்டு அதில் கொழுப்பு படியும் நிலை. ஆனால் மது அருந்தாதவர்களுக்கும் சிறுவர்களுக்கும் கூட வர ஆரம்பித்து விட்டது. இதை (Non alcoholic fatty liver) என்கிறோம். 10 வயது சிறுவனும் பாதிக்கப்ட்டிருப்பதாக மருத்துவர்கள் அதிர்ச்சியை வெளியிட்டு இருக்கிறார்கள். கல்லீரலில் கொழுப்பு சேருவது நல்லதல்ல. ஆரம்பத்தில் நோய் எளிதில் குணமடையும். ஆனால் தீவிரமடையும் போது மிகவும் சேதமடைந்து கல்லீரலில் அழற்சி உண்டாகிறது. இந்த நிலை நீடிக்கும் போது கல்லீரல் செயலிழப்பு அல்லது கல்லீரலில் புற்றுநோய் உண்டாகலாம்.

கல்லீரலின் சில பணிகள்

கல்லீரல் 500-க்கும் அதிகமான பணிகளைச் செய்கிறது. முக்கியமாக குளுக்கோஸை கொழுப்பாக மாற்றி உடலில் சேமிப்பது, லைப்போ புரதங்களை உருவாக்குவது, தேவையற்ற அளவு நாம் உண்ணும் கார்போஹைடிரேட் சத்தை (மாவுச்சத்தை) கொழுப்பாக்கி கல்லீரலில் படிய வைப்பது, கொழுப்புகளான முட்டை, மாமிசம், பால் போன்றவற்றையும் அதிக கொழுப்பாக கல்லீரலில் படியும். இதுதான் கல்லீரலில் கொழுப்புத் தேக்கம் (Fatty liver) என்று கூறுவர்.

கல்லீரல் சுருங்குதல்

மதுப்பழக்கத்துக்கு அடுத்ததாக டிரை கிளிசரைட்ஸ் எனப்படும் கொழுப்பு கல்லீரலுக்கு மிகப்பெரிய எதிரி ஆகும். மரபியல் ரீதியாக  ஆசிய மக்களுக்கு கொழுப்பு சார்ந்த நோய் கல்லீரலில் ஏற்பட நிறைய வாய்ப்புள்ளது. இந்திய உணவில் அதிகம் மாவுச்சத்து நிறைந்துள்ளது. மாவுச்சத்து நிறைந்துள்ளது. மாவுச்சத்து அதிகம் உண்பதால் இந்த மாவுச்சத்து கல்லீரலில் அதிகம் தேங்கி அதனை நாசமாக்குகிறது. சாதாரணமாக கல்லீரலில் கொழுப்பு படியாது. கல்லீரலில் ஆங்காங்கே கொழுப்பு படிந்து காணப்படுவது என்பது முதல்நிலை fatty liver ஆகும்.  இது ஆரம்ப நிலை ஆகும். இரண்டாம் நிலை என்பது கல்லீரலில் கொழுப்பு அதிகம் படிவதால் கல்லீரல் சிரை சரியாக தெரியாமல் போகும். இதற்கு அடுத்த கட்டம் மூன்றாம் நிலை ஆகும். இதில் கொழுப்பு அதிகமாக கல்லீரலில் படிவதால் உதரவிதானம் (Diaphragm) சரியாக புலப்படாது இது முற்றிய நிலை.

இவ்வாறு கல்லீரலில் படியும் கொழுப்பானது பின்னாளில் பாதிப்பை ஏற்படுத்தி மது அருந்தாதவருக்கும் கல்லீரலில் கொழுப்பு படியும் நோயாக மாறலாம். மேலும் ஒரு அளவுக்கு மேல் கொழுப்பு சேர்ந்தால் கல்லீரல் விரிந்து, ஒரு நிலைக்கு மேல் சுருங்க ஆரம்பித்து விடும். இது கல்லீரல் அழற்சி ஏற்பட வழிவகை செய்கிறது. இந்த நிலை நீடிக்கும் பொழுது கல்லீரல் செயலிழப்பு அல்லது கல்லீரல் புற்றுநோய் உண்டாகலாம்.

இந்நோய் தடுக்க உண்ண வேண்டிய உணவுகள்

இந்த நோய்க்கு கொழுப்பு உணவுகள், மாவுப் பொருட்களை குறைத்து சிறுதானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவையும் மற்றும் இரவு நேரம் குறைவான அளவு உணவு எடுத்து கொள்ளவும் வேண்டும். அடிக்கடி உடற்பயிற்சி செய்வதும் நல்லது. அப்போது தான் மற்ற உறுப்புகளில் தேங்கி நிற்கும் கொழுப்புகள் குறையும். இரவு நேரங்களில் விரதமும் இருக்கலாம் அல்லது மிகக் குறைவாக உணவு சாப்பிடலாம். புளிப்பு சுவை மிகுந்த எலுமிச்சை, புளி, நெல்லிக்காய் போன்ற வைட்டமின் C நிறைந்த உணவுகள், கொத்தமல்லி இலைகள், விதைகள், இளநீர், அகத்திக்கீரை, மஞ்சள், பூண்டு, இஞ்சி, கரிசலாங்கண்ணிக் கீரை அல்லது கரிசாலை கற்பம் (நாட்டு மருந்துகடை), கீழாநெல்லிக்கீரை, மஞ்சள் பூசணிக்காய், மாதுளம், பழங்கள், மீனின் கல்லீரல் சேர்ந்த எண்ணெய், வைட்டமின் B சத்து நிறைந்த களஞ்சியம், பீட்ரூட், கிரீன் டீ, தர்பூசணி, ஸ்டிராபெரி போன்றவைகள் சாப்பிடலாம். இவை அனைத்தும் கல்லீரலுக்கு பலம் சேர்க்க கூடியவை. கல்லீரல் சீரான இயக்கத்துக்கும் துணை புரிகின்றன.

பூனைமீசை செடியின் இலைகள் போன்றவற்றை காய வைத்த பொடி அல்லது பச்சை இலைகளாகவும் பயன்படுத்தலாம். இவைகளும் கல்லீரல் நோய்களை அகற்றும் தன்மை கொண்டவை. பொரித்த உணவுகள், உப்பு அதிகம் சேர்ந்த பாக்கெட் உணவுகள், வெள்ளை சர்க்கரை சேர்ந்த தேயிலை, காப்பி, வெள்ளை சர்க்கரை பழ ஜீஸ்கள், மைதா, பரோட்டா இவைகள் உடல் பருமனை உண்டாக்கும். பால் ஊற்றாத கடும் காப்பி தான் கல்லீரலுக்கு உகந்தது. வெள்ளை சர்க்கரை வேண்டாம். முட்டை, வெந்தயம், பருப்புகள், பூண்டு, மஞ்சள் அனைத்தும் அதிகம் சேர்க்கலாம்.

இட்லி, தோசை போன்ற மாவுப்பொருட்கள், சாதம் ஆகியவை உண்பதைக் குறையுங்கள். மாவுசத்து கல்லீரலில் கொழுப்பாக மாறி கல்லீரலில் தேங்கும். கல்லீரல் சிறு பாதிப்புகளை கூட தானே சரி செய்யும் திறமை கொண்டது. பாரசிட்டமல் போன்ற மாத்திரைகள் மருத்துவர் அறிவுரையின் படி சாப்பிடவும். ஆல்கஹால் பயன்படுத்த கூடாது. கண் பக்கத்தில் கொழுப்புக்கட்டிகள், பாத வெடிப்பு, அடர் மஞ்சள் நிற சிறுநீர், தோல் மஞ்சள் நிறமாக மாறுதல் அனைத்தும் கல்லீரல் பாதிப்பு காரணமாக இருக்கலாம்.

கல்லீரல் செல்கள் மறுசீரமைப்பு செய்யும் ஆற்றல் உடையவை. சில அசைவ உணவுகள், கொழுப்பு சத்துள்ள உணவுகள், சில வலி மாத்திரைகள், போதைப்பழக்கம் போன்றவை கல்லீரலை நேரடியாகவே பாதிக்கும் தன்மை கொண்டவை. கல்லீரல் பாதிக்கப்படும் போது பித்தநீர் மாற்றம், வைட்டமின் கி குறைபாடு மற்றும் இரவில் பார்வை பாதிப்பு கூட ஏற்படலாம்.

மேற்கூறிய அறிகுறிகளைக் கண்டு ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொண்டால் பயங்கரமான அழற்சி புற்றுநோய் போன்றவற்றிலிருந்து தப்பி உயிரை காத்துக் கொள்ளலாம். எனவே இந்த நோயை விரைவில் கண்டறிந்து பரிசோதனை செய்யவும்.

பெற்றோர் கடமை சிறுவர்களுக்கு பாஸ்ட்புட் சாக்லேட், பேக்கரி உணவுகள், இனிப்பு சுவை நிறைந்த உணவுகள்  ஆகியவற்றை அதிகம் கொடுக்க கூடாது. எடையும் அதிகரிக்க கூடாது. எடை அதிகம் உள்ளவர்களுக்கு இந்நோய் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *