நவீன அறிவியல் வளர்ச்சியும் அணு ஆயுதப் பெருக்கமும் இன்று உலகம் முழுவதுமுள்ள மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஏற்கெனவே நடந்து முடிந்த முதல் இரண்டு உலகப்போர்களும் பலிவாங்கிய உயிர்கள் எண்ணிலடங்காதவை. இங்கிலாந்து, சீனா, ஜப்பான், இந்தியா, ரஷ்யா, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகள் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களையும் இழந்தன. இன்று உலகம் முழுவதும் சங்கிலித்தொடர் போல் தொடர்புறும் நாடுகளின் போர்ப்பதற்றம் மீண்டும் ஓர் மூன்றாவது உலகப்போருக்கு வழிவகுத்து விடுமோ என அறிஞர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். ரஷ்யா-உக்ரைன் போர்களால் உலகம் முழுவதும் உள்ள பொருளாதாரப் பின்னணிகள் பாதிப்படைந்துள்ள நிலையில், இஸ்ரேல்- பாலஸ்தீன் போர்கள் வளைகுடா நாடுகளையும் தொடர்புபடுத்திவிடும் சூழல் உள்ளது. இது மேலும் பெரும் பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கி வருகிறது. இந்த நெருக்கடிகள் அன்றாட வாழ்வின் அனைத்துப் பகுதிகளையும் பாதித்து வருகிறது. எனினும் எங்கும் போர் பதட்டம் குறைந்தபாடில்லை. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கி வரும் அணு ஆயுதங்களைக் கண்டு அரபுநாடுகள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன. இஸ்ரேல் நடத்திய மருத்துவமனை தாக்குதல் உலகத்தலைவர்கள் பலராலும் கண்டிக்கப்பட்ட ஒன்றாகும். இந்த நிலையில் ஈரான் அதிபர் பயணித்த ஹொலிகாப்டர் விபத்தும் ஈரான் மக்களிடையே இஸ்ரேல் மீதான கொந்தளிப்பை அதிகப்படுத்தி உள்ளது.
மே மாதம் 10-ஆம் தியதி அரபுநாடுகள் கூட்டமைப்பு பாலஸ்தீனத்தை ஐ.நா சபையில் நிரந்தர உறுப்புநாடாக சேர்க்க வேண்டும் எனும் தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது. மட்டுமன்றி, உலகின் பல நாடுகளும் பாலஸ்தீனத்தை ஒரு அந்தஸ்துமிக்க தனிநாடாக அங்கீகரிக்க வேண்டும் எனவும் முடிவெடுத்துள்ளது. இவை அனைத்தும் இஸ்ரேல் தலைவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் “இஸ்ரேல் காட்ஸ்” நார்வே-அயர்லாந்து நாடுகளுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பி உங்களின் முட்டாள்தனம் எங்களை ஒருபோதும் தடுக்காது எனக் குறிப்பிட்டுள்ளார். இஃது அந்நாட்டு தலைவர்களிடம் இஸ்ரேல் மீது ஒருவித காழ்ப்புணர்ச்சியை உருவாக்கி உள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்கறிஞர், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பாதுகாப்புத்துறை அமைச்சர் “யோவ் சேலண்ட்” இவர்களை கைது செய்து ஹமாஸ் போர்க்குற்றங்களை விசாரிக்கும் வண்ணம் வாரண்ட் கேட்டுள்ளது. இது இஸ்ரேல் மற்றும் அவைகளின் ஆதரவு நாடுகளிடையே ஒருவித அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.
சிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டுக் கலவரங்கள் சீனாவுக்கும், தைவானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள எல்லைத்தகராறுகள் என பல நாடுகளுக்கிடையே நடைபெற்று வரும் கலவரங்களும் போர்பதட்டங்களும் சமாதானத்தை விரும்புகிற நாடுகளிடையே ஓர் அதிர்வலையை உருவாக்கியே வருகிறது.
அமெரிக்காவின் தலைமையிலான நேட்டோ அமைப்பும், அதன் ராணுவமும் ஐரோப்பாவின் ஒரு வலிமையான அமைப்பாகும். இது 12 ஐரோப்பிய நாடுகளைக் கொண்ட வடக்கு அட்லாண்டிக் நாடுகளின் கூட்டமைப்பாகும். நேட்டோ நாடுகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நேட்டோ ராணுவம் கூட்டாகவே இறங்கி அந்த நாடுகளுக்கு நேரடியாகவே உதவி செய்யும். இது நேட்டோ நாடுகளின் ஒப்பந்தம். 1990-களில் நடந்த ஒப்பந்தத்தின் படி, கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ நாடுகள் கால் வைக்க மாட்டோம் என்பது வாக்குறுதி. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை, மாறாக 1997-லிருந்து ரஷ்யாவின் அண்டை நாடுகளான எஸ்தோனியா, லாத்வியா, லிதுனியா, போலந்து, செக்குடியரசுகள், ஸ்லோவேகியா, ஹங்கேரி, ஸ்லோவேனியா, குரோஷியா, மான்டிநீக்ரோ, அல்பேனியா, வடக்கு மாசிடோனியா, பல்கேரியா போன்ற நாடுகளையும் தங்களோடு இணைத்துக் கொண்டது. இத்துடன் உக்ரையினும் இணைவதற்கு தயாரானபோது தான் ரஷ்யாவின் கோபம் அதிகரிக்கத் தொடங்கியது.
உக்ரைன் நேட்டோ நாடுகளுடன் இணைந்தால் நேட்டோ படைகள் ரஷ்ய நாட்டு பகுதிகளில் கடற்கரை வழியாகவும், உக்ரைன் நாட்டின் எல்லை வழியும் எளிதில் ரஷ்யாவிற்குள் ஊடுருவ முடியும். இந்த சூழலை கருத்தில் கொண்டே ரஷ்யா உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேராமல் தடுத்து வந்தது… இன்று அதுவே இரு நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய போர் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் அமெரிக்காவும், அதன் கூட்டமைப்பு நாடுகளில் பலவும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் முதல் பல்வேறு பொருளாதார உதவிகளும் செய்துவருகின்றன. ரஷ்யாவின் இறையாண்மைப் பாதிப்படையும் என்பதால் அதுவும் முழுமூச்சாக உக்ரைனை எதிர்த்து வருகிறது.
இப்படி தொடர்ந்து உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் போர் பதட்டங்கள் மாறுபட்ட கோணங்களில் திரும்பி உலகப்போராக வடிவெடுத்து விடக்கூடாது என்பது ஒரு வலுவான கூட்டமைப்பின் கையில் உள்ளது என உலகமே நம்புகின்றது, அதுவே ஐ.நா சபை. ஐ.நா சபை இத்தகைய சூழல்களை நன்கு ஆராய்ந்து கண்டிப்பான சில சட்டதிட்டங்களை உருவாக்கி போர் பதட்டங்களைத் தடுக்க முன் வர வேண்டும் என்பது தான் உலக மக்களின் எதிர்பார்ப்பும் ஆகும்.
Leave a Reply