சமூகசேவகருக்கு பத்மஸ்ரீ விருது              கிடைக்குமா?

சமூகசேவகருக்கு பத்மஸ்ரீ விருது கிடைக்குமா?

  • By Magazine
  • |

– சந்திப்பு : ஜி. ஜெயகர்ணன்

என் உடலில் பலம் இருக்கும் வரை சமூக பணி தொடரும் என்று தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் சமூக சேவகர் ராஜகோபால். இவர் சுமார் 750 -க்கு மேற்பட்ட அனாதையான இறந்த உடல்களை அடக்கம் செய்தும் விபத்துகளில் சிக்கிய பல உயிர்களை காப்பாற்றியும் உள்ளார் மட்டுமின்றி நூற்றுக்கணக்கான மனநோயாளிகள், ஆதரவற்றவர்கள் ஆகியோர்களை காப்பகங்களிலும் சேர்த்து நிஜ கதாநாயகனாக திகழ்ந்து வருகிறார். இவரை புதிய தென்றலுக்காக மார்த்தாண்டம் கொடுங்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

இனி அவர் கூறுவதை கேட்போம்.

எனது பெயர் ராஜகோபால் (வயது 61) நான் டெம்போ டிரைவராக வேலை செய்து வருகிறேன். எனது இளவயதில் இன்று இருப்பது போன்று அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வசதிகள் எதுவும் இல்லை. இதனால் அந்த காலத்தில் சாலையில் ஆங்காங்கே வாகன விபத்துகளில் அடிபட்டு கிடக்கும் மனிதர்களை தூக்குவதற்கு யாரும் முன் வர மாட்டார்கள். அப்படி யாரும் காப்பாற்றி மருத்துவமனைகளுக்கு உரிய நேரத்தில் கொண்டு செல்லாததால் பலர் உயிரிழந்து உள்ளனர்.  அது போன்று விபத்து ஏற்பட்டு சாலையில் இறந்து கிடக்கும் மனிதர்களையும் யாரும் தூக்குவதற்கு முன்வர மாட்டார்கள். ஒருவர் எவ்வளவு மரியாதைக்குரிய நல்ல மனிதராக இருந்தாலும் சாலையில் அடிபட்டு இறந்து விட்டால் அவரை மீட்பதற்கு யாரும் முன் வராமல் அந்த உடல் சாலையில கிடப்பது மிகவும் பரிதாபமான காட்சி ஆகும்.  

அப்படிப்பட்ட பல சம்பவங்களை நான் நேரில் பார்த்து மனம் நொந்து இருக்கிறேன். 

 விபத்துகளில் அடிபட்டு படுகாயம் அடைந்து குற்றுயிரும் குலை உயிருமாக உயிருக்கு போராடிக் கொண்டு கிடக்கும் நபர்களையும் ஆதரவின்றி கிடக்கும் பிணங்களையும் பார்க்கும் போது எனக்கு மனதில் பரிதாபம் தோன்றியது. இதனால் யாரும் செய்ய முன் வராத நிலையில் விபத்துகளில் அடிபட்டு கிடக்கும் நபர்களை எனது டெம்போவில் ஏற்றி மருத்துவமனைகளில் சேர்ப்பது, விபத்துகளில் அடிபட்டு பிணமாக கிடைப்பவர்களை காவல்துறையின் அனுமதியுடன் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்ப்பது, ஆதரவின்றி திரியும் மனநோயாளிகளை மீட்டு அவர்களை காப்பகங்களில் சேர்ப்பது, போன்ற செயல்களை செய்வதற்கு தொடங்கினேன் சுமார் 43 ஆண்டுகளாக இத்தகைய சேவைகளில் ஈடுபட்டு வருகிறேன்.

ஒருமுறை மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்ற அரசு பேருந்தின் பின்பக்க டயர்கள் கழண்டு போய்க் கொண்டிருப்பதை கண்டேன். அந்த பேருந்தில் நிறைய பயணிகள் பயணம் செய்து கொண்டிருப்பதை கண்டேன்.

எனவே இதனை கண்ட நான் விபத்து ஏற்படுவதற்கு முன் அந்த பேருந்தின் டிரைவருக்கு தகவலை சொல்லி வண்டியை நிறுத்தி பயணிகளின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த வண்டியை பின் தொடர்ந்து போய்க்கொண்டே இருந்தேன்.  நாகர்கோவில் ஜெயசேகரன் மருத்துவமனை அருகே அந்தப் பேருந்தை முந்தி சென்று பேருந்து டிரைவரிடம் தகவலை கூறினேன். உடனே அவர் பேருந்தை நிறுத்தினார். அப்போது வண்டியில் இருந்து ஒரே புகையாக வந்தது. அப்போது கிட்டத்தட்ட அந்த டயர்களை இணைக்கும் பாகங்கள் செயல் இழக்கும் நிலைக்கு வந்து விட்டன. இன்னும் கொஞ்ச நேரம் சென்றிருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும். அந்த பேருந்தில் சுமார் 35 பயணிகள் இருந்தனர். இப்படி 35 பயணிகளின் உயிரை காப்பாற்றியதற்காக எனக்கு மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களால் வீர தீர செயலுக்கான விருது வழங்கப்பட்டது. மட்டுமில்லாமல் மூன்று முறை மாவட்ட ஆட்சி தலைவர்களும் எனக்கு கேடயம் வழங்கி கௌரவித்து உள்ளனர். மேலும் ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப் போன்ற பல்வேறு பொதுநல அமைப்புகளும் என்னை பாராட்டி சிறப்பித்தனர். இது எனது வாழ்வில் நடந்த முக்கியமான ஒரு சம்பவம் ஆகும்.

மேலும் நான் இதுவரை கேட்பாரற்று கிடந்த சுமார் 750 இறந்த நபர்களின் உடல்களை எனது சொந்த செலவில் அடக்கம் செய்துள்ளேன். காவல்துறையினரின் வேண்டுகோளுக்கிணங்க இறந்து பல நாட்கள் ஆகி தொட முடியாத நிலையில் உள்ள அனாதை பிணங்களைக் கூட தூக்கி எனது  வண்டியில் கொண்டு சென்று  நானே அடக்கம் பண்ணி விடுவேன்.

சில சமயங்களில் ரயிலில் அடிபட்டு துண்டு துண்டாக கிடக்கும் உடல்களையும் மீட்டு அடக்கம் செய்துள்ளேன்.

1997- ம் ஆண்டு காவல்துறையால் கைப்பற்றப்பட்ட ஸ்பிரிட் என்ற திரவத்தை அழித்துக் கொண்டிருந்தபோது ஏழு போலீஸ்காரர்கள் மீது தீப்பிடித்தது. இந்த தகவலை அறிந்த நான் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தேன்.

ஒருமுறை மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ஒரு இளைஞர் இறந்து கிடந்தார் அவரை யாரும் உரிமை கொண்டாடாததால் நான் அந்த உடலை அடக்கம் செய்து விட்டேன். பின்னாளில் அந்த வாலிபரின் உறவினர்கள் தகவல் அறிந்து காவல் துறையை தொடர்பு கொண்டு அந்த வாலிபரின் உடலை தோண்டி எடுத்து இறுதி சடங்குகள் செய்வதற்காக கொண்டு சென்றனர்.

இதேபோன்று மார்த்தாண்டத்தில் அனாதையாக கிடந்த ஒரு உடலை அடக்கம் செய்தோம். ஆனால் பின்னர் உறவினர்கள் தகவல் அறிந்து வந்து பார்த்தனர். பின்னர் அந்த உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடத்தில் மாலை மரியாதை அணிவித்து சென்றனர்.

ஒருமுறை ஒருவர் அரசு பேருந்தின் மீது கல்லெறிந்து விட்டார். அவரை போலீஸ் கைது செய்த போது அவர் மன நோயாளி என்று தெரிந்தது. எனவே அவரை என்னிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். நான் அவரை குளிப்பாட்டி புது துணி அணிவித்து மனநல காப்பகத்தில் சேர்த்தேன். அவரிடம் சுமார் 80 ஆயிரம் ரூபாய் இருந்தது. அதனையும் அந்த  மனநல காப்பகத்தில் ஒப்படைத்தேன்.

இது மட்டும் இன்றி கேட்பாரற்ற நிலையில் உள்ள ஆதரவற்ற முதியவர்களை முதியோர் இல்லங்களில் சேர்ப்பது, பராமரிப்பின்றி காணப்படும் மனநோயாளிகளை கண்டால் அவர்களை குளிப்பாட்டி புது துணி அணிவித்து  சமூக சேவை இல்லங்களில் சேர்ப்பது, போன்றவற்றையும் செய்து வருகிறேன்.

ஆரம்ப காலகட்டங்களில் நான் இப்படி அனாதையான உடல்களை அடக்கம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் பலர் கேலி கிண்டல் செய்து வந்தனர். ஆனால் பின்னாட்களில் எனது உண்மையான சேவையை கண்டு அவர்கள் மாறிவிட்டனர்.

 ஆரம்பத்தில் எனது மனைவியும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். பின் நாட்களில் இது ஒரு சமூக சேவை என்பதை கருதி எனக்கு ஆதரவளித்து வருகிறார்.  மட்டுமின்றி அஸ்வின், அபிராமி என்ற எனது இரண்டு பிள்ளைகளும் மற்றும் மனைவி கலாவும் ஆதரவு தெரிவிக்காவிட்டால் என்னால் இவ்வளவு தூரம் இந்த சேவையை செய்திருக்க முடியாது.

தற்போது அரசு 108 ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்தி வருகிறது. மேலும் பல தனியார் நிறுவனங்களும் ஆம்புலன்ஸ் சேவைகளை செயல்படுத்தி வருகின்றன இது மிகவும் பாராட்டுக்குரியது ஆகும். இதனால் தற்போது பழைய நிலை மாறி விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக  மருத்துவமனைகளில் சேர்த்து காப்பாற்ற முடிகிறது இது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.

பொதுவாக கேட்பாரற்ற நிலையில் உள்ள இறந்து கிடக்கும் உடல்களை குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அடக்கம் செய்து வருகிறேன். ஆனால் நகராட்சி அதிகாரிகள் அதற்கு அனுமதி மறுத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிணங்களை புதைக்க கூடாது… எரிக்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கின்றனர். அப்படி என்றால் இப்படி கேட்பாரற்றுக் கிடக்கும் உடல்களை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறேன்.

ஆனால் அதிகாரிகள் குழித்துறை நகராட்சியில் மின் மயானம் வருகிறது எனவே அதில் வைத்து பிணங்களை எரித்து விடலாம்.  அதன் பிறகு இதற்கு உங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் கூறுவது போன்று இறந்த உடல்களை எரிப்பது தீர்வாகாது. அது பின்னாட்களில் பல்வேறு சட்ட சிக்கலை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புகள் உள்ளது. இறந்த நபர்களின் உடல்களை அடக்கம் செய்து பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

ஏனென்றால் பல நபர்களின் உடல்களை தேடி என்றாவது ஒருநாள் அவரது உறவுக்காரர்கள்  வரும்போது நாம் அவர்களுக்கு உடலை அடக்கம் செய்திருக்கும் இடத்தை காண்பிக்க வேண்டும். ஏனென்றால் இறந்தவர்களின் உறவினர்களுக்கு இறுதி சடங்கு செய்வதற்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட நபர் இறந்து விட்டார் என்று நிரூபிப்பதற்காகவோ தேவைப்படலாம். மேலும் காவல்துறை, நீதிமன்றம் போன்ற வழக்கு விசாரணைகளுக்கும் அந்த உடலின் எலும்புகள் மற்றும் சிதைந்த பாகங்கள் தேவைப்படலாம். எனவே இறந்த உடல்களை அடக்கம் செய்வதற்கு நகராட்சி தனியாக இடம் வழங்க வேண்டும். 

நான் செய்து வரும் சமூகசேவை பணிகளுக்கு அரசு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் விருதுகள் வழங்கி உள்ளன. ஆனால் இதற்காகவோ அரசோ அல்லது தனியார் அமைப்புகளிடமிருந்தோ எந்த நிதி உதவியும் இதுவரை பெறவில்லை. ஆனால் தற்போது பத்மஸ்ரீ விருதுக்கு விண்ணப்பித்து உள்ளேன். அரசு பத்மஸ்ரீ விருது வழங்கினால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.  முக்கியமாக எனது சமூக சேவைக்கான பணிகளில் எனக்கு வலதுகரமாக செயல்படுவது   தொழிலதிபரும் சமூக சேவகருமான சிந்து குமார்  ஆவார் . அவர் பல சூழ்நிலைகளில் என்னுடன் களத்தில் நின்று உதவி செய்திருக்கிறார் மட்டுமில்லாமல் இறந்த உடல்களை அடக்குவதற்கான உபகரணங்களை வாங்கி தந்து உதவியுள்ளார்.

அவரது ஆதரவினால் தான் என்னால் இவ்வளவு அதிகமான சேவைகளை செய்ய முடிந்தது என்றால் மிகையல்ல. மட்டுமல்லாமல் அவர் பல்வேறு சமூக சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எனது உடலில் பலம் இருக்கும் வரையும் எனது டெம்போ இருக்கும் வரையும் எனது சமூக பணி தொடரும் என்றார். சுமார் 45 ஆண்டுகளாக யாரும் செய்ய முகம்ச்சுழிக்கும் செயல்களை சேவையாக செய்து நிஜ கதாநாயகனாக திகழ்ந்து வரும் இவருக்கு அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *