ஏராளமான பலன்களை வாரிக் கொடுக்கும் மரங்களில் முக்கியமான பனங்கற்கண்டு என அதன் பலன்கள் ஏராளம். அவற்றோடு கைவினைக் கலைஞர்களையும் கலைப் பொருட்களின் ஊடே வாழ வைத்துக் கொள்வதிலும் பனை மரத்திற்கு இணை இல்லை!
இத்தகு பனையின் பெருமிதம் குறித்தும், பனை சாகுபடி நுட்பங்கள் குறித்தும் முன்னாள் பனை தொழிலாளியான அன்பையன்(67) என்பவர் கட்டுரைத் தொகுப்பாக எழுதி நூலாக்கியிருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. ‘பனையோடு உறவாடு’ என்னும் அந்தப் புத்தகம் பனை மரத்தை நடுவது, வளர்ப்பது, சாகுபடி நுட்பங்கள், கருப்பட்டி, பனங்கற்கண்டு தயாரிப்பு, சந்தைபடுத்தும் நுட்பங்கள் என முழுமையான வழிகாட்டல்களையும்,புரிதலையும் ஏற்படுத்துகிறது.
இதுகுறித்து சுவாமியார் மடம் அருகில் உள்ள பொற்றவிளை பகுதியைச் சேர்ந்த அன்பையன் கூறுகையில்,”எங்க குடும்பமே பனை தொழில்தான். என்னோட அப்பா சங்கிலி, தாத்தா அந்தோனி ஆகியோரும் பனை ஏற்றத் தொழிலாளிகள் தான். நானும் 14 வயதில் பனை ஏற்றத் தொழிலாளியாகிட்டேன். குறிப்பிட்ட வயதுக்கு மேல் பால் வியாபாரம், விவசாயம் என செய்யத் தொடங்கினேன். இப்போது 67 வயது ஆகிவிட்டதால் குத்தகைக்கு நிலம் எடுத்து, வாழை சாகுபடி செய்து வருகிறேன்.
என்னைப் பொறுத்தவரை பனை பெற்றோருக்கு இணை. தாய்ப்பாலுக்கு அடுத்து அதிக சத்துள்ள பொருள்களை மனித சமூகத்திற்குத் தருவதே பனைமரம் தான். முந்தைய தலைமுறையில் பனை பொருள்களை அதிகளவில் பயன்படுத்தினர். இப்போது பண்பாட்டையும், பனை வளங்களையும் மக்கள் மறந்ததன் வெளிப்பாடுதான் இன்று பெருக்கெடுத்திருக்கும் மருத்துவமனைகள்! பனையில் இருந்து கிடைக்கும் அக்கானி, நொங்கு, பதநீர், பனை வெல்லம், பனங்கற்கண்டு என ஒவ்வொன்றுமே சத்துக்களின் மொத்த உருவம்தான்!”என பனை புகழ் பாடுகிறார்.
அன்பையனுக்கு இந்தத் தலைமுறையினருக்கு பனை குறித்த புரிதல் இல்லாதது பெரும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதிலும் இப்போது பனை தொழிலில் இருப்பவர்கள் அடுத்தத் தலைமுறைக்கு அதை கடத்த வேண்டிய தேவை இருப்பதையும் உணர்ந்துள்ளார். அதன் வெளிப்பாடு தான் அவரது பனையோடு உறவாடு புத்தகம். ஒருவகையில் இது பனைத் தொழில் குறித்த முழுமையான விளக்கக் கையேடாகவும் உள்ளது.
தொடர்ந்து நம்மிடம் பேசிய அன்பையன், “1977 ஆம் ஆண்டு செறுவாரக்கோணம் பகுதியைச் சேர்ந்த டாக்டர் சாமுவேல் அமிர்தம் என்பவர் பனை பொருள்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தைத் தொடங்கினார். அதன் பெயர் இப்போது பால்மா. அதில் பொறுப்பாளராக உள்ளேன். எங்களுக்கு 400 சுய உதவிக்குழுக்களும், 237 பனைத் தொழிலாளர் மன்றங்களும் உள்ளன. பத்தாயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் உறுப்பினராக உள்ளனர். எங்கள் சங்கத்தின் ஆண்டு மலரில் பனை குறித்து, அந்தத் தொழில் செய்த அனுபவத்தில் ஒரு கட்டுரை எழுதினேன். அதைப்படித்த எங்கள் அமைப்பின் செயல் இயக்குனர் ஜேக்கப் ஆப்ரகாம் இதுகுறித்து விரிவாக எழுதினால் அடுத்தத் தலைமுறைக்கு பயன்படும் என்று எழுதத் தூண்டினார். அதன் வெளிப்பாடுதான் பனையோடு உறவாடு நூல். இது பனை தொழிலுக்கு வருவோருக்கு வழிகாட்டியாக இருக்கும். பனையோடு நெருங்கி வாழ்ந்தால், உடல் உறுதியாகவே இருக்கும்!”என ஆத்மார்த்தமாக முடிக்கிறார் பனை தொழிலாளியும், படைப்பாளியுமான அன்பையன்!
Leave a Reply