சென்ற மாத இதழில் நாபியின் கீழ் உள்ள வர்மங்களில் ஒன்றான நாங்குகுற்றி வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் வித்துவர்மம் பற்றி அறிவோம்.
வித்துவர்மம், விதைப்பையின் பின்புறம் சார்ந்த பகுதியில் அமைந்துள்ளது. இவ்வர்மம் பெண்களுக்கு அல்லிவர்மம் என்ற பெயரில் அமைந்துள்ளது. அண்ட வர்மம், பீஜக்காலம், பரல் வர்மம், ஆந்திரக்காலம் என்னும் வேறுபெயர்களாலும் இவ்வர்மம் வழங்கப்படுகிறது.
“விதமான வித்துறையில் வித்துவர்மம்
விளக்கமுடன் மங்கையர்க்குஅண்டமென்பார்”.
– வர்ம மடக்குநூல்
மேலும்,
போக்கென்ன தண்டிடையில் நீருகட்டும்
பேதகமாய் நீர்தரித்து துள்ளிபோடும்
ஆற்கென்ன வர்மஏலாதி கஷாயம் போட்டு
அடவாக உள்ளுக்கு கொடுத்திடாயே
தாக்கென்ன கல்லிடையில் சொன்னதாரை
சரியாக மந்திரத்தை சரியாய் செய்யே
போக்கென்ன இந்த வர்மம் சரியாய் சொன்னேன்
புண்ணியனே தவறாமல் பொருந்த செய்யே.
– வர்ம சூத்திரம்-300
“பாரே நீ வர்மம் கொண்டால் பலமாக
குதகுய்யத்தாரை தன்னில் படியாமல்
கூரே நீ குருதியது ஓடும் கண்டாய்
பரதாபம் நடுக்கமுடன் குளிரும் உண்டாம்
ஆரே நீ அடுத்தடுத்து அசதியாகும்
ஆயாசம் கறக்கமுடன் கிறுகிறுத்து
சீரே நீ சிந்தையது தெளியாமல் தான்
சிறப்பாக மயக்கமுமே வந்து தீரும்”.
– வர்ம கால நிதானம்
“பாரான வித்துவர்மம் கொண்டதானால்
படபடத்து வியர்க்குமடா கண்கள் மூடும்
சாரான நினைவழிந்து குழைந்து காணும்
நிறைவான வித்ததுவும் ஒளித்துக்கொள்ளும்
சேரான தலந்தன்னை கண்டறிந்து
செயலாக செய்முறைகள் தவறிவிட்டானால்
வாரான வினைகள் பல வந்து தீரும்
விதவிதமாய் மாத்திரையை அறிந்து தேறே”.
“தேறப்பா மாத்திரைதான் மிஞ்சிட்டானால்
மீளாது உடன் மரணம் கண்டுகொள்ளும்
கூறப்பா குதகுய்யத் தாரைதன்னில் குருதியாகும்
கூறரிய பரதாபம் படபடப்பும் ஆயாசம்
வேறப்பா விதவிதமாய் இக்குறிகள் பலதும் கண்டு
விண்பார்த்து விறைத்துமே நடுநடுங்கி ஜன்னியாகும்
வீறப்பா விதவிதமாய் மருந்து செய்தால்
ஒருவேளை விளக்கமுண்டா மறிந்து கொள்ளே”.
– வர்ம குருச்சூத்திரம்
“வினையறுக்கும்வித்துவர்மம் கொண்டிடிலோ தளர்ச்சை
குளிரும் தேகம் படபடத்து மயக்கமாகி
பனையளவு ஆனாலும் படித்துவிடும் பழந்தூசு
உதகமதில் நனைந்தாற்போலஃது கடினமடா
வினைதீர அண்டைகட்டி பழந்துணியாலாகப் பிடிபிடித்து
அடித்து மூலம் குத்தற இருத்தியுச்சியமர்த்தி
கனைக்கும் மூச்சு கடைந்தாற்போல் கட்டிவிடு
காலக்கணக்கறிந்து நொடிதனிலறிந்து செய்யே”.
– வர்ம குருநூல்
“தீரவே இளக்குதற்கு வகையைக்கேளு
திடமான சற்குருவை மனதில் வைத்து
சேரவே கையணை இருபுறமும் சர்வாங்கம் செய்
செயலாகத் தடவியே அடித்தொடையில்
கீரவே கீர் நரம்பனுக்கியே குதகுய்யத்தாரை
சீர்பெற ஏந்தியே அழுத்தித்தாக்க
தேரவே தேடி வந்த வினையும் தீரும்
திறமான மருந்துடனே தடவல் செய்யே”.
– வர்ம கால நிதானம்
எனவும் குறிப்பிடுகிறது. மேலும்,
தண்டடியில் தொங்குநிலைப்பையுறையினோரம்
வண்டணியும் பூங்குழலுக்கில்லா வன்மமிஃதாம்
பண்டுரைத்த வன்மம் கொண்டவுடன் குழையும்
கண்டமுடன் கடமதுவும் கண்டுணர்ந்து செப்பே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
தண்டினடியில் உள்ள பையுறையின் ஓரத்தில் பெண்களுக்கில்லாத வித்துவர்மம் அமைந்துள்ளது. பழங்காலந்தொட்டே அனைவராலும் அறிந்து உரைக்கப்பட்ட இந்த வர்மத்தில் தாக்கம் கொண்டால் கழுத்தும் உடலும் குழைந்துவிடும் என சொல் என்பதாம்
செப்புதற்கிந்த வர்மம் செய்குணங்கள் மெத்த
அப்பிவிடும் மேலேறி வித்துகல்லடையினுள்ளே
தப்பிவிடும் நினைவதுவும் தளர்ச்சையுடனங்கே
ஒப்பிவிடும் உள்ளொடுங்கிவியர்க்குமிது காணே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
இந்த வர்மம் தாக்கம் கொண்டால் மாத்திரைக்கேற்ப செய்யும் குணங்கள் பல உண்டு. வித்தானது கல்லடைக்காலத்துடன் சென்று ஒட்டிக்கொள்ளும். அப்போது நினைவிழந்து மயக்கமாவதுடன் உடலும் தளர்ந்துவிடும். தொடர்ந்து உடல் உள் ஒடுங்கி வியர்வையும் உண்டாகுமென்பதாம்.
காணே நீ கண்ணடைக்கும் மாத்திரைதான் மிஞ்சிடிலாம்
வீணே நீ அலையாதே விட்டிலைப்போல்தான் துடிக்கில்
பேணே நீ பெருந்தவத்தோருரைத்த பெருங்குறிகண்டால்
நாணேநீ நமன் வருவான் என்றுரைத்து மாறே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
வித்துவர்மம் கொண்டு மாத்திரை மிஞ்சி கண்ணடைத்து உடலது ஜன்னி வந்து விட்டிலைப்போல் துடிக்குமானால் பெருந்தவத்தோர் உரைத்த மரணப்பெருங்குறியிது கண்டால் நமன் வருவான் என உரைத்துப்போடே.
மாறுதற்கு மாத்திரை தான் குன்றில் அங்கே
தேறுதற்குக் கைபாகம் மெத்தவுண்டு மண்ணில்
தாறு கொண்டண்டை மூன்று அளவறிந்து செய்து
வீறு கொண்டண்டை தன்னில் வாரியங்கு குத்தே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
இவ்வர்மம் மாத்திரை குறைவாகக் கொண்டால் அதனைத் தீர்ப்பதற்கு மருந்து, தடவுமுறை போன்ற பல முறைகள் இம்மண்ணில் உண்டு. துணியினைக் கொண்டு மூன்று அண்டைபோல் செய்து பாதிக்கப்பட்டவரை வாரியணைத்து அண்டை மீது வேகமாக தூக்கி குத்திப்போடு என்பதாம்.
குத்தயிலே மெத்தவரும் வித்ததுவும் கீழே
சத்துடனே பழந்தூசி சுற்றையிலே தானே
கத்துகுரல் அத்துடன் நின்றுவிடும் காணே
வித்துவன்மத்திஃததுவே விதியதுதான் பாரே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
வித்துவர்மம் தாக்கம் கொண்டு பரல் ஏறி கல்லடை வன்மத்தினுள் போய் அடைத்துக்கொண்டால் வேகமாக அண்டை கூட்டிய துணியின் மேல் குத்தும்போது வித்தானது தானே இறங்கி நிலைக்குவந்துவிடும். அப்போது பழைய துணியினை நீரால் நனைத்து கட்டிவிட வேண்டும். கட்டிய உடன் வலியினால் கத்தும் குரல் உடனே நின்றுவிடும். இதுவே வித்துவர்மத்துக்கு செய்ய வேண்டிய முதல் விதிமுறையாகும்.
பாரே வித்துவன்மம் கொண்டார் தம்மைப்
பரிவாக உச்சியிலோரடியடித்துபண்புடனே
தேரே நீ மாறல்வகை ஏற்றிறக்கம் செய்து
கூரே நீ குறிப்பறிந்து அடங்கலும் பாரே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
வித்துவர்மம் கொண்டால் உச்சியில் கைமேல் கை பிணைத்துத்தட்டி, கத்தரிக்கோல் மாறல் மற்றும் ஏற்றிறக்கத் தடவல்முறைகளை செய்து இவ்வர்மத்துக்குரிய அடங்கல்களையும் குறிப்பறிந்து செய்துவர தீரும் என்பதாம் என வர்ம யோகச்சூத்திரமும் குறிப்பிடுகிறது.
இவ்வர்மத்தில் தாக்கம் கொண்டால், உடல் குழைந்து, வியர்வை மிஞ்சும். வித்து மேலேறி மறைந்து கொள்வதுடன், மலமூத்திர துளைகள் வழியே இரத்தம் கொட்டும். அதனால் நெஞ்சுக்குள் படபடப்பும், நடுக்கமும் தோன்றி குளிருண்டாகும். அடிக்கடி அசதியாகி, நின்ற இடத்திலே தன்னையறியாமல் தள்ளாடுவது போன்ற ஆயாசம் உண்டாகி தலைச்சுற்று தோன்றி, சிந்தை தெளிவற்று மயக்கமாகும். மாத்திரை மிஞ்சிக்கொண்டால் வாயில் நுரையும், பதையும் தள்ளி, வலி மிஞ்சி, ஜன்னி தோன்றி மரணமாகும் என வர்ம சுவடிகள் குறிப்பிடுகின்றன.
இவ்வர்மத்தை இளக்குவதற்கு அடங்கல்களைத் தூண்டி, உடலை முன்னும் பின்னுமாக தடவியிறக்கி, அடித்தொடையில் பெருநரம்பையும், நடுதொடையில் கீர் நரம்பையும் அழுத்தி தூண்டி, அடங்கல்களை அனுக்கிவிட சுகம் உண்டாகும் என வர்ம நூல்கள் குறிப்பிடுகின்றன.
இவ்வர்மத்தால் பாதிப்படைந்தவர் பின்னாட்களில், மலட்டுத்தன்மை, மூத்திர எரிச்சல், ஆண்மைக்குறைவு, விரக்தி, உடல் நடுக்கம், அடிக்கடி அசதி, கோபம் போன்ற நோய்களால் அவதியுறுவர். இவ்வர்மத்தை தகுந்த தூண்டுமுறை நுட்பங்களைப் பயன்படுத்தி தூண்டிவர, கற்பாசய நோய்கள், ஆண்மைக்குறைவு, அடிவயிறுவலி, செரியாமை, மூளை நோய்கள், கால்வலி போன்ற பல நோய்கள் குணமாகும் என அனுபவமிக்க வர்ம வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
Leave a Reply