– ஓஷோ
உண்மையைத் தேட வழியில்லை. ஏனெனில் உண்மை தொலைவில் இல்லை. உண்மை “அங்கே” எங்கோ இல்லை. எனவே அதனிடம் நீங்கள் போக வேண்டியதில்லை. அதை நீங்கள் அடைய வேண்டியதில்லை. உண்மையை நீங்கள் தேட வேண்டியதில்லை. ஏனெனில் தேடுபவரின் சொந்த ஜீவனே அது. தேடுபவரை எப்படி நீங்கள் தேட முடியும்? அறிகிறவரை எப்படி நீங்கள் அறிய முடியும்? அது சாத்தியமில்லை. உங்களை நீங்களே தேட முடியாது. நீங்களே உண்மையாக இருக்கிறீர்கள்.
எனவே எல்லா தேடலும் வீண். ஆனால் இதையும் தேடலின் மூலமாக மட்டுமே கற்றுக் கொள்கிறோம். எல்லா தேடலும் பயனற்றது என்னும் மகத்தான முக்கியமுள்ள உண்மையைக் கூட, தேடுவதன் மூலமாக மட்டுமே நாம் கற்கிறோம். இதை கற்க வேறு வழியும் இல்லை. தேடி தோற்கிறீர்கள். மறுபடியும் தேடி தோற்கிறீர்கள். தேடுவதுதான் கண்டடையாததன் காரணம் என்பது மெது மெதுவாக உங்களுக்கே தெளிவாகிறது. பின் தேடல் தானே கழண்டு விடுகிறது. அப்படி தேடல் நின்றதும், ஏக்கம், ஆசை போனதும், நீங்கள் முழு அமைதியாய் ஆனதும், தேடுபவரின் மனம் என்பதே மறைந்ததும்: நீங்கள் இதுவரை தேடிக் கொண்டிருந்தது எப்போதும் உங்களுடனேயே இருந்து வந்துள்ளது என்பதைக் கண்டு ஆச்சரியப்படுகிறீர்கள்.
உண்மையைத் தேடவோ மாயையை விலக்கவோ அவசியமில்லை.
ஏன்?- ஏனென்றால் அதற்காக பார்ப்பதே தவறான திசையில் தொடங்குவதாகும். அவ்வாறே மாயையை விலக்குவதும் மதியினமாகும். ஏனெனில் மாயை என்றாலே இல்லாத ஒன்று என்றே பொருள். இல்லாததை எவ்வாறு தவிர்க்க முடியும்? இருக்கிறதை எவ்வாறு தேட முடியும்? உள்ளது உள்ளது. இல்லது இல்லை. இருத்தலை உதறித்தள்ளாதீர்கள். மாயையான ஏதோ ஏக்கத்தால் சாதாரண உயிர் வாழ்க்கையை உதறித் தள்ளாதீர்கள். அந்த வேலையை மூடர்களுக்கு விட்டு விடுங்கள். விவேகியமான மனிதர் வெறுமனே கணத்துக்குக் கணம் வாழ்கிறார். எதையும் தேடும் ஆசையோ எதையும் கண்டுபிடிக்கும் எதிர்பார்ப்போ இல்லாமல் வாழ்கிறார். அந்ததந்த கணத்தில் ஆனந்தமாக வாழ்கிறார் அவர். அவரது வாழ்வு மிகவும் சாமானியமானது. அசாதரணமாக விளங்கும் ஆசை அவருக்கில்லை புத்தராகும் ஆசை அவருக்கில்லை; அதனாலேயே அவர் அசாதரணமாக இருக்கிறார். ஏனெனில் ஒவ்வொரு சாதாரண மனிதருக்கும் அசாதரணமாக ஆகும் ஆசை இருக்கிறது. அசாதாரண மனிதர்களுக்கும் மட்டுமே அந்த ஆசை இருக்காது.
Leave a Reply