மலையாளம் – விபிதா
தமிழ் – ராஜன் ஆத்தியப்பன்
உம்மிணிக்கு ஆறு வயது.
அவளுக்கென்று
மூக்குக் கண்ணாடி ஒன்றுண்டு.
பூனையை அவள் பார்ப்பது
நான் பார்ப்பதுபோல் அல்ல.
அவளது பூனைக்கு சிறகுகளுண்டு.
மனிதரைப்போல அது பேசும்
ஒரு கையால் சோறு பிசைந்து தின்னும்.
நாய்குட்டியை அவள் பார்ப்பது
நான் பார்ப்பதுபோல் அல்ல.
ஆகாயம் தொடுமளவிற்கு
பறக்கும் சக்தியுடையது
அவளது நாய்குட்டி.
பாட்டு பாடும்
படம் வரையும்
முத்தம் கொடுக்கும்.
எறும்புகளை அவள் பார்ப்பது
நான் பார்ப்பதுபோல் அல்ல
அந்த எறும்புகளுக்கு
லிப்ஸ்டிக் உதடுகளுண்டு
சாக்ஸ் அணிந்த கால்களுண்டு.
அதிவேகமாய் அரிசிமணிகளை
அவற்றால் கடத்த முடியும்.
காக்கைகளை அவள் பார்ப்பது
நான் பார்ப்பதுபோல் அல்ல
காக்கைகளின் கருத்த உடையில்
புள்ளிகளிருக்கும்
கூ கூ என்று அவளை காலையில் எழுப்பும்
குயில் கூட்டில் சென்று
முட்டையும் போடும்
அவள் என்னைப் பார்ப்பது
அலாதியானது.
எனக்குப் பனிரெண்டு கைகள்.
ஆட்கள்
அடுப்படி
பாத்திரங்கள்
விளக்குமாறு
துவைக்கவேண்டிய துணிகள்
தொட்டிச் செடி
ஆடு கட்டும் கயிறு
மிச்சமிருக்கும் கையில் அவள்.
கண்களின் கருவளையத்தை
தடவிப்பார்க்கிறாள்
அதில் மை பூசி
அம்மா சாமியாகிவிட்டாய்
என்கிறாள்.
கருப்பை
தெய்வமென்று
அவளுக்கு யாரோ சொல்லியிருக்கிறார்கள்.
அந்த சின்ன மூக்குக் கண்ணாடியை அகற்றிவிட்டு
அவள் விழிகளை ஊடுருவுகிறேன்.
பட்டாம்பூச்சியாகிறாள்.
என்னால் பிடிக்க முடியாத
சந்தோச வெளியில் அவள் பறக்கிறாள்.
பன்னிரண்டு கரங்களில் ஒன்று
வெறுமையாயிருக்கிறது.
Leave a Reply