– இரா. அரிகரசுதன்
வீட்டில் பல்லியைப்
புகைப்படம் எடுத்தான்
மகன்.
நான் அலுவலகத்தில்
புகைப்படம் எடுத்தேன்,
இரண்டு பல்லிகளுமே
குட்டிப் பல்லிகள்.
நான் எடுத்தப் புகைப்படத்தில்
பல்லிக்குட்டியின் உள்ளுறுப்புகள்
வண்ண நிழலாகத் தெரிகின்றது,
அடிவயிற்றோடு
சில உறுப்புகளும் தெரிகின்றன,
குடல், ஈரல், மண்ணீரல் என
அவை இருக்கலாம்.
மகன் ஒருநாள்
முன்னரே அந்தப் புகைப்படத்தை
எடுத்துவிட்டான்.
அடுத்தநாள்
தூக்கத்திற்காக படுக்கையைத்
தட்டும்போதுதான் சொன்னான்.
“அப்பா… அப்பா….
உங்க செல்பேசியில்
ஒரு புகைப்படம் எடுத்தேன்,
பாருங்க..”
“எந்த இடத்தில் எடுத்தேன் தெரியுமா..”
“மேசையில் அடியில் குனிந்துபோய்
எடுத்தேம்பா…”
செய்துகாட்டினான்.
செல்பேசியை விடுங்கள்
நினைவிலிருந்து எடுத்தல்லவா
அந்தக்காட்சியை நெய்கிறான்,
அவன்.
ஏழேழ் பரிமாணங்களும் மிதக்கக்
கண்டேன்.
அதுமுதல் அந்தப் பல்லி
என்னோடு சேர்ந்துகொண்டது,
மற்றையோருக்கு துலங்காது.
எங்குப்போனாலும்
உடன் வருகின்றது,
அலுவலகத்திலும் அப்படித்தான்
தொணதொணவென்று
எதாவது பேசிக்கொண்டே இருக்கின்றது.
“பிழைச்சுக்க ஓடி
சாணியாகிருவப் பாத்துக்க”,
அடிக்கக் கைஓங்கியாச்சு.
கைக்குத் தப்பி
செல்லம் கொஞ்சுவதை
உனக்கு காட்ட வேண்டும் என்றேன்.
என்னை கீழிருந்து மேலாக
உற்றுப் பார்த்தது,
அது அவ்வாறு யோசித்திருக்க வேண்டாம்.
அப்புறம்தான்
வாகாய் வந்து அமர்ந்தது.
ஒரு புகைப்படம் எடுத்தேன் மகனே
Leave a Reply