– கே.பி. பத்மநாபன்
மனிதர் இடையே கருத்தெல்லாம்
மாறுபடும் தான், தவறன்று;
தனி என் கருத்தே உயர்வென்று
தலையுள் வெறியைக் கொள்ளாமல்
கனிவாய் மாற்றார் மொழிகேட்டுக்
கலந்தே அன்பால் உறவாடி
இனிய முடிவை எட்டிட்டால்
இம்மண் அமைதி பூண்டிடுமே!
கணவன் மனைவி இருவருமே
கலந்தே பேசி முடிவெடுத்தால்
மணமே நிறைந்த இல்லறத்தை
மகிழ்வாய் வாழ்ந்து விடலாமே;
இணக்கமாக இருநாடும்
இணைந்தே பேச முயன்றிட்டால்
பிணங்கள் வீழும் போரின்றிப்
பெருமை யோடே ஒன்றிடலாம்!
நெஞ்சுக்குள்ளே அன்பிருந்தால்
நிலத்தை அமைதி ஆண்டிடுமே;
வஞ்சம் சூழ்ச்சி பகையாவும்
வற்றிக் கணத்துள் மாய்ந்திடுமே;
வெஞ்சினத்தை விட்டிட்டால்
விடியும் அமைதிப் பூவுலகம்;
நஞ்சேயான பகை நீக்கி
நாளும் அமைதி காத்திடுவோம்!
Leave a Reply