– பேரா. மோகனா, பழனி
நண்பர்களே, எல்லா உயிர்களையும் நோய் தாக்குவது இயல்பு.நோய் என்பது வைரஸ் அல்லது பாக்டீரியா அல்லது வளர்சிதை மாற்றங்களால் ஏற்படலாம். இவைகளில் வைரஸ் நோய்கள் அனைத்தும் தொற்றும் நோய்களே. பாக்டீரியாவால் ஏற்படும் நோய்களில் சில தொற்றுபவை; சில தொற்றாநோய்கள். தொற்றாநோய்களில் மூன்று பெரிய நோய்கள்தான் முன்னணியில் நிற்கின்றன 1. சர்க்கரை நோய், 2. இதய நோய் 3. புற்றுநோய்..
புற்றுநோய் எப்படி
புற்றுநோய் என்பது நோய் அல்ல. அது ஒரு வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் குறைபாடு எனலாம். இங்குள்ள செல்கள் அதி வேகமாக கரையான் புற்று போல வளரும் என்பதால் இதனை புற்றுநோய் என்றனர். சில செல்கள் கட்டுபாடின்றி அதி வேகமாக வளர்தல் அல்லது DNA-ல் ஏற்படும் மாற்றம் அல்லது DNA சிதைவது போன்ற காரணங்களால் புற்று நோய் உருவாகிறது. அப்போது சில கட்டுப்பாடுன்றி வளர்ந்து உடலின் மற்ற இடங்களையும் ஆக்கிரமிப்பு செய்கிறது. இதனை புற்றுநோய் செல்கள் என்று அழைக்கின்றனர். மனித உடலில் 37.5 ட்ரில்லியன் (37,500,000,000,000) செல்கள் உள்ளன. இதில் எந்த செல் வேண்டுமானாலும் புற்றுநோய் செல்லாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எங்கு வேண்டுமானாலும் புற்றுநோய் உருவாகலாம். செல் பிரியும் போது தவறு ஏற்பட்டு கட்டுப்பாடு இன்றி டிஎன்ஏ சிதைவால் புற்றுநோய் ஏற்படலாம் சிலருக்கு பாரம்பரியமாக கூட வரலாம்.
கீமோதெரபி –புற்றுநோய் சிகிச்சைக்கு
முன்பு 1940-களில் சுமார் 85 ஆண்டுகளுக்கு முன்பு வரை, புற்றுநோய்க்கு சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. புற்றுநோய் வந்தால் கட்டாயம் மரணம்தான் என்ற எண்ணம் இருந்தது. இப்போது அறிவியல் தொழில்நுட்பத்தின் உதவியால் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. இதற்கான மருந்து கீமோதெரபி (Chemotherapy) என்ற வேதிசிகிச்சைதான். இதனை கூட்டு மருந்தாக உருவாக்கி கண்டுபிடித்தவர் ஜேன் குக் ரைட் (Jane Cooke wright) என்ற ஆப்பிரிக்க அமெரிக்க பெண்மணிதான். புற்றுநோய் கீமோதெரபியை நிர்வகிப்பதற்கான புதிய நுட்பங்களை உருவாக்கினார்
ஜேன் குக் ரைட்
ஜேன் குக் ரைட் ஒரு முன்னோடி புற்றுநோய் ஆராய்ச்சியாளர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். புற்றுநோய் செல்களைக் கொல்ல அல்லது கட்டுப்படுத்த, சாத்தியமான மருந்துகளின் விளைவுகளைச் சோதிக்க ஆய்வக எலிகளைக் காட்டிலும் மனித திசு வளர்ப்பைப் பயன்படுத்தும் நுட்பத்தை உருவாக்கிய பெருமை ஜேன் குக் ரைட்டிற்கு உண்டு. இவர் மார்பகப் புற்றுநோய் மற்றும் தோல் புற்றுநோய் சிகிச்சைக்காக மெத்தோட்ரெக்ஸேட் (Methotrexate) என்ற மருந்தை உருவாக்கி, அதனைப் பயன்படுத்தினார். ஜேன் ரைட் நியூயார்க் மருத்துவ கல்லூரியில் அறுவை சிகிச்சைப் பேராசிரியராகவும், புற்றுநோய் கீமோதெரபி துறையின் தலைவராகவும்,மற்றும் அசோசியேட் டீனாகவும் இருந்தார். இவர் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நிறுவனத்தில் மிக உயர்ந்த தரவரிசைப் பெற்ற ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணியும் கூட. நியூயார்க் புற்றுநோய் சங்கத்தின் தலைவராக முதன் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் டாக்டர் ஜேன் ரைட் ஆவார்.
ஜேன் ரைட்டின் குடும்ப பின்னணி
ரைட்டின் குடும்பமே மருத்துவ சாதனைகளில் வலுவான பின்னணியும், வரலாறும் உடையதாகும்.அவர் நியூயார்க், மன்ஹாட்டனில் 1919ஆம் ஆண்டு நவம்பர், 20- ஆம் நாள் பிறந்தார். அவர் அன்னையின் பெயர் கோரின் குக் (Corinne Cooke,); ஒரு பொதுப் பள்ளி ஆசிரியர் தந்தை லூயிஸ் டி. ரைட். இவர் ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியில் முதன் முதல் படித்த ஆப்பிரிக்க அமெரிக்கர்களில் ஒருவர் லூயிஸ் டி. ரைட்.
நியூயார்க், பொது மருத்துவமனையில் முதல் ஆப்பிரிக்க அமெரிக்க மருத்துவர். ஹார்லெம் மருத்துவமனையில் 30 ஆண்டுகள் பணியாற்றிய போது, ஹார்லெம் மருத்துவமனை புற்றுநோய் ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவி இயக்கினார். லூயிஸ் டி. ரைட்டின் தந்தை, டாக்டர். சியா கெட்சாம் ரைட், அடிமை வம்சவளியில் பிறந்வர.அவரும் மருத்துவப் பட்டம் பெற்று மருத்துவரானார் . ஆனால் லூயிஸ் டி. ரைட்டுக்கு நான்கு வயதாகும் போது, அவரது தந்தை இறந்துவிட்டார். லூயிஸ் டி. ரைட்டின் வளர்ப்பு தந்தை வில்லியம் பிளெட்சர் பென், யேல் மருத்துவக் கல்லூரியின் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க பட்டதாரி. ஜேன் ரைட்டின் மாமா, ஹரோல்ட் டாட்ஃபோர்ட் வெஸ்ட் ஒரு மருத்துவர், அவர் இறுதியில் மெஹரி மருத்துவக் கல்லூரியின் தலைவரானார்.
கல்வி
ஜேன் ரைட் குழந்தைப் பருவத்தில் , ஃபீல்ட்ஸ்டன் பள்ளியில் பயின்றார், பின்னர் “நெறிமுறை கலாச்சாரம்” பள்ளி மற்றும் “ஃபீல்ட்ஸ்டன் பள்ளி ஆகியவற்றில் ரைட் படித்தார். பின் 1938-ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். ஃபீல்ட்ஸ்டன் பள்ளியில் அவர் படித்தபோது படிப்பைத் தாண்டி வெளிச்செயல்களில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் பள்ளியின் “ஆண்டு புத்தக”க் கலை ஆசிரியராகப் பணியாற்றினார் மற்றும் நீச்சல் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஜேன் ரைட்டுக்கு மிகவும் விருப்பமான பாடங்கள் கணிதம் மற்றும் அறிவியல். ஃபீல்ட்ஸ்டன் பள்ளியில் பயின்ற பிறகு, ரைட் ஸ்மித் கல்லூரியில் உதவித் தொகைபெற்று, தனது படிப்பைத் தொடர்ந்தார். ரைட் 1942- இல் ஸ்மித் கல்லூரியில் கலைப் பட்டம் பெற்றார். அவர் பல்கலைக்கழக நீச்சல் குழுவில் முக்கிய நபராக இருந்தார். அவருக்கு கல்லூரியில் ஜெர்மன் மொழியின் மீதான காதலால் ஜெர்மன் மொழியைக் கற்றார். பின் ஜேன் ரைட், நியூயார்க் மருத்துவக் கல்லூரியில் சேர மீண்டும் வேறொரு உவித்தொகையைப் பெற்று படித்தார். அவர் 1945- இல் இங்கேயே படித்து தனது வகுப்பில் உயர்நிலையில் முதல் நிலையில் இருந்தார். அதனால் திட்டத்தின் ஒரு பகுதியாக கௌரவ விருதுடன் பட்டம் பெற்றார்.
ஜேன் ரைட்டின் தொழில்
மருத்துவக்கல்லூரியில் படித்த பின்னர் ரைட், பெல்லூவ் மருத்துவமனையிலும் (1945-46) பின்னர் ஹார்லெம் மருத்துவமனையில் (1947-48) இருந்து பணிபுரிந்தார். அங்கு அவர் தலைமைப் பொறுப்பையும் ஏற்றார். 1949 ஆம் ஆண்டில், அவர் நிறுவிய ஹார்லெம் மருத்துவமனை புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் தனது தந்தையுடன் இணைந்து புற்றுநோய் மருந்து பற்றிய ஆராய்ச்சி செய்தார். அவரது தந்தை 1952ல் இறந்தபோது, அவருக்குப் பின்னர் ரைட் அங்கு இயக்குநராகப் பொறுப்பேற்றார்.
ஆராய்ச்சி நிறுவனத்தில் ஜேன் ரைட் இருந்த காலத்தில், அவரும், அவர் தந்தையும் கீமோதெரபி மருந்து உருவாக்கும் சில பொருட்கள், தாவரங்களில் ஆர்வத்துடன் செயல்பட்டார். புற்று நோய்க்கான கீமோதெரபியை அனைவருக்கும் கொடுக்கக் கூடியதாக, எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவதில் அவர்கள் ஆர்வம் காட்டினர். 1940 களில் கீமோதெரபி மருந்து என்பது ஒரு புதிதாக உருவான துறையாகவே இருந்தது, இது புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்காக நன்கு அறியப்பட்ட அல்லது நன்கு நடைமுறைப்படுத்தப்பட்ட ஆதாரமாக இல்லை. மருந்து வளர்ச்சியின் சோதனை கட்டத்தில் இருந்தது. கீமோதெரபி என்பது “கடைசி முயற்சியாக” கருதப்பட்டது; கிடைக்கும் மருந்துகள் மற்றும் மருந்தளவும் கூட சரியாக வரையறுக்கப்படவில்லை.
புதிய கீமோதெரபி மருந்து
ஜேன் ரைட் மற்றும் அவரது தந்தை இருவரும் இணைந்து கீமோதெரபியை புற்றுநோய் சிகிச்சையின் அணுகக்கூடிய முறையாக மாற்ற விரும்பினர். நைட்ரஜன் மஸ்டர்டு உருவாக்கும் பொருட்கள் (nitrogen mustard agents) மற்றும் ஃபோலிக் அமில புற்றுநோய் கொல்லியை (folic acid antagonists) புற்றுநோய் சிகிச்சையாகப் பயன்படுத்துவதை செய்துபார்த்த முதல் குழுவே இவர்கள்தான். ஃபோலிக் அமில புற்றுநோய் கொல்லியானது, உடலில் ஃபோலிக் அமிலத்தைத் தடுக்கலாம். இது சில வகையான அமினோ அமிலங்களை உற்பத்தி செய்ய செல்களுக்குத் தேவைப்படுகிறது.
ஃபோலிக் அமிலங்களைத் தடுப்பதன் மூலம், செல்கள் DNA/RNA வின் புதிய இழைகளை உருவாக்கவோ அல்லது மைட்டோசிஸை இயக்க புரதங்களை உருவாக்கவோ முடியாது. மனித உடலில் உள்ள மற்ற செல்களுடன் ஒப்பிடும்போது புற்றுநோய் செல்கள் அதிக அளவில் பெருகும் என்பதால், மைட்டோசிஸ்/செல் பிரிவு ஏற்படுவதைத் தடுப்பது முக்கியம். பல வகையான லுகேமியா, ஹாட்ஜ்கின்ஸ் நோய், லிம்போசர்கோமா, மெலனோமா, மார்பக புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் உள்ளிட்ட பல வகையான புற்றுநோய்க் கட்டிகளுக்கு எதிராக போலிக் அமில எதிரிகள் மிகவும் சக்திவாய்ந்தவை என்பதால், சோதனை செய்யப்பட்ட ஃபோலிக் அமில புற்றுநோய் கொல்லிகள் என்பவை மிக முக்கியமான கண்டுபிடிப்பு தான். இதில் மெத்தோட்ரெக்ஸேட் (Methotrexate) என்ற மருந்து, இன்றும் பல வகையான புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் முக்கிய கீமோதெரபி மருந்துகளில் ஒன்றாகும். இதுவே அனைத்து நவீன கீமோதெரபிக்கும் அடிப்படையானது.
ஆய்வுகள்
ரைட்டின் ஆராய்ச்சி என்பது, புற்றுநோய்க் கட்டிகளில் பல்வேறு மருந்துகளைச் செலுத்தி, அவற்றின் விளைவுகளை ஆய்வு செய்வது. 1951- ஆம் ஆண்டில், அவரது குழுவின் உதவியுடன், அடிப்படை கீமோதெரபி மருந்துகளில் ஒன்றான மெத்தோட்ரெக்ஸேட்டை புற்றுநோய் கட்டிகளுக்கு எதிரான ஒரு பயனுள்ள கருவியாக முதலில் ரைட் கண்டறிந்தார். ரைட்டின் துவக்ககாலப் பணி என்பது சிக்கலானது. முதலில் கீமோதெரபி சரியான பரிசோதிக்கப்படாத, சோதனைக்குரிய அனுமான சிகிச்சையாக இருந்தது. இந்த நிலையில் உள்ளதை சோதிக்கப்பட்ட, நிரூபிக்கப்பட்ட பயனுள்ள புற்றுநோய் சிகிச்சைக்குள் கொண்டு வந்தது ரைட்தான். இதனால் உண்மையில் பல மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது.
இந்த வகையான கீமோதெரபியுடன் ஜேன் ரைட் செய்த பணி அற்புதமானது; நோயாளிக்கு உருவாகும் நச்சுத்தன்மையின் காரணமாக, ஜேன் ரைட் இதனை கூட்டு சிகிச்சை மற்றும் தனிப்பட்ட சரிசெய்தலுக்கான படியாக நிரூபித்தார். ரைட் தனது ஆரம்பகால ஆய்வில் ஒவ்வொரு நோயாளியின் புற்றுநோய்க் கட்டியையும் எடுத்துகொண்டு, மதிப்பீடு செய்து, மீண்டும் திசு வளர்ப்பில் வளர்த்தார். கட்டியைப் பிரித்தெடுப்பதற்கு முன்பு நோயாளியின் சிகிச்சையில் பயன்படுத்திய அதே மருந்தை புற்றுநோய் கட்டிகளுக்கு சிகிச்சை அளித்தார். கீமோதெரபி ஏஜன்ட்களின் பணிக்குத் தேவையான மருத்துவ அளவுகோல்களை இவர் உருவாக்கினார்.
மார்பக மற்றும் தோல் புற்றுநோய் மருந்து, – வெற்றி
இதிலிருந்து அந்த புற்றுநோய்க் கட்டிகளை எதிர்த்து போராட மெத்தோட்ரெக்ஸேட் என்ற மருந்தை ரைட்தான் உருவாக்கினார். ரைட்டும் அவரது தந்தையும் முதல் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட மஸ்டர்டு வாயு (Mustard gas) சேர்மங்களைப் போலவே நைட்ரஜன் மஸ்டர்ட் முகவர்களை (வேதிப்பொருள்) அறிமுகப்படுத்தினர். அவை இரத்தப்புற்றுநோய் நோயாளிகளின் புற்றுநோய் செல்களுக்கு சிகிச்சையளிப்பதில் வெற்றி பெற்றன. ரைட் பின்னர் வேதிசிகிச்சையில் கூட்டுப் பணிகளில் முன்னோடியாக இருந்தார். பல மருந்துகளை வழங்குவதில் கவனம் செலுத்தாமல், கீமோதெரபியின் செயல்திறனை அதிகரிக்கவும் பக்கவிளைவுகளைக் குறைக்கவும், வரிசைமுறை மற்றும் மருந்தளவு மாறுபாடுகளில் கவனம் செலுத்தினார். மார்பக புற்றுநோய் மற்றும் தோல் புற்றுநோய்க்கான சிகிச்சைகளை அடையாளம் காண்பதில் அவர் வெற்றி பெற்றார்.
அதற்கான கீமோதெரபி நெறிமுறையை உருவாக்கினார்.இந்த வேதிசிகிச்சை மருந்தால் தோல் புற்றுநோயாளியின் ஆயுட்காலம், பத்து ஆண்டுகள் அதிகரிக்கிறது. கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்ற உடலில் ஆழமாக அமைந்துள்ள புற்றுநோய்க் கட்டிகளுக்கு ஆற்றல்மிக்க மருந்துகளை செலுத்த, வடிகுழாய் அமைப்பைப் பயன்படுத்தி, அறுவை சிகிச்சையற்ற முறையையும் உருவாக்கினார். அவர் தனது வாழ்க்கையில் புற்றுநோய் வேதியியல் சிகிச்சையில் 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட்டார். தேசிய மருத்துவ சங்கத்தின் ஜர்னலின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்.
1955 -ஆம் ஆண்டில், அவர் நியூயார்க் பல்கலைக்கழக பெல்லூவ் மருத்துவ மையத்தில், அறுவை சிகிச்சை ஆராய்ச்சியின் இணைப் பேராசிரியராகவும், புற்றுநோய் ஆராய்ச்சி இயக்குநராகவும் ஒரு ஆராய்ச்சி நியமனத்தை ஏற்றுக்கொண்டார். ஆராய்ச்சி மற்றும் மருத்துவப் பணிகளுக்கு கூடுதலாக, ரைட் தொழில் ரீதியாக பங்களித்தார். 1964 -ஆம் ஆண்டில், அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் கிளினிக்கல் ஆன்காலஜியைக் கண்டறிய உதவிய ஏழு மருத்துவர்களில் ரைட் மட்டும்தான் ஒரே பெண். மேலும் 1971-ஆம் ஆண்டில் நியூயார்க் புற்றுநோய் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் இவரே.. ரைட் 1967-இல் நியூயார்க் மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய் கீமோதெரபி துறையின் இணை டீன் மற்றும் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அந்த நேரத்தில் ஒரு முக்கிய மருத்துவக் கல்லூரியில் மிக உயர்ந்த தரவரிசையில் இருந்த ஆப்பிரிக்க அமெரிக்க பெண் மருத்துவர். அவர் 1966 முதல் 1970 வரை பணியாற்றிய அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜான்சனால் தேசிய புற்றுநோய் ஆலோசனை வாரியத்திற்கு நியமிக்கப்பட்டார். இதய நோய், புற்றுநோய் மற்றும் பக்கவாதம் பற்றிய ஜனாதிபதியின் ஆணையத்தில் (1964-65). ரைட், சர்வதேச அளவில்செயல்பட்டார். சீனா, சோவியத் யூனியன், ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் புற்றுநோயியல் நிபுணர்களின் பிரதிநிதிகளுக்கு உதவி செய்தார். 1957 -இல் கானாவிலும் 1961-இல் கென்யாவிலும் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். 1973 பெண் 1984 வரை அவர் ஆப்பிரிக்க ஆராய்ச்சி மற்றும் மருத்துவ அறக்கட்டளையின் துணைத் தலைவராகப் பணியாற்றினார்.
பெருமை & இறப்பு
அவரது தொழில் ரீதியாக மற்றொரு பிரபலமான ஆப்பிரிக்க அமெரிக்க பெண் விஞ்ஞானி, குக் செல் உயிரியலாளர் மற்றும் உடலியல் நிபுணர் ஜூவல் பிளம்மர் கோப் உடன் இணைந்து பணியாற்றினார். பென்சில்வேனியாவின் மகளிர் மருத்துவக் கல்லூரியில் இருந்து கௌரவ டாக்டர் பட்டம் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றவர். ரைட் 1985 -ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். 1987- இல் நியூயார்க் மருத்துவக் கல்லூரியில் எமரிட்டா பேராசிரியராக நியமிக்கப்பட்டார். கீமோதெரபியில் தனது முன்னோடி ஆராய்ச்சியை விவரிக்கும் போது, அவர் நிருபர் ஃபெர்ன் எக்மேனிடம் “தெரியாததை ஆராய்வதில் நிறைய வேடிக்கைகள் உள்ளன. பரிசோதனை செய்வதை விட பெரிய மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை” கூறினார். ரைட் தனது பணியிலிருந்து 1987-இல் ஓய்வு பெற்ற பிறகு, அவர் தனது வாழ்நாள் முழுவதும் படகோட்டம், நீர் வண்ணம் தீட்டுதல் மற்றும் புதிர்களைப் படித்தல் போன்ற ரசித்த செயல்களில் ஈடுபட்டார். ரைட் பிப்ரவரி 19, 2013 அன்று நியூ ஜெர்சியின் குட்டன்பெர்க்கில் 93 வயதில் மரணித்தார்.
Leave a Reply