தமிழர் மரபில் நிலமும் – நீரும்

தமிழர் மரபில் நிலமும் – நீரும்

  • By Magazine
  • |

– ஓர் சூழலியல் பார்வை

– கோவை சதாசிவம்

மனிதர்கள் தமது முன் கால வரலாற்றை அறிந்து கொள்வதில் தீராத தாகம் கொண்டவர்கள்! பத்து தலைமுறைக்கு முன்பு எம் பாட்டன் எப்படி இருந்திருப்பார்..? எப்படி வாழ்ந்திருப்பார்..? இத்தகைய கேள்விகளில் இருந்தே தொடங்குகின்றன… எப்போது பூமி தோன்றியது..? எப்போது மனிதன் தோன்றினான் ..?  எனும் புதிய கேள்விகள்.

பூமி, இறைவனின் படைப்பு என்று பண்டைய சமயங்கள் அனைத்தும் நம்பின. பூமி தட்டையானது என்னும் கருத்தாக்கத்தில் பூமியை பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலுக்குள் ஒழிந்து கொண்ட கதைகள் ஏராளம்.

பூமி யாராலும் உருவாக்கப்பட்டதன்று! அஃது தன்னைத்தானே படைத்துக்கொண்ட இயற்கை நிகழ்வு. இப்படி உரைக்கும் தமிழ் மெய்யியலின் கூற்றை நவீன கண்டு பிடிப்புகளும் மறுக்க இயலாது!

சூழலின் பருப் பொருட்கள் அனைத்தும் ஐம்பெரும் ஆற்றல்களால் உருவானவை என்ற கருத்தியல் நமது மூதாதைகளின் மனதில் ஆழமாக வேரூன்றியிருந்தது. நிலம், நெருப்பு, நீர், காற்று, வானோடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் என்னும் பரந்த சிந்தனை கொண்டவர்கள் தமிழர்கள்.

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம். பூமியின் வடிவம் உருண்டை. அது சுழன்று கொண்டிருக்கிறது என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உரைத்துள்ளது தமிழ் இலக்கியங்கள்.

எல்லாவற்றையும் போல்  மொழியும் உழைப்பில் இருந்துதான் பிறந்தது. வெப்ப மண்டலப் பகுதியின் உயிர்ச்சூழலை உள்வாங்கிய மொழி தமிழ் மொழி. வாழும் நிலத்தின் இயற்கை வளம், பல்லுயிரியம் போன்ற இன்றியமையாத இயற்கை நிகழ்வுகளை தமது படைப்புகளில் பதிவு செய்துள்ளனர் நம் மூதாதையர். ஒவ்வொரு பாடலின் நூடே ஊடாடும் உவமைகளின் தாவரங்கள், பூச்சிகள், பறவைகள், விலங்குகள் பற்றிய குறிப்புகள் என்றென்றும் பொருந்தும் அறிவியல் தரவுகளுடன் இருப்பது தமிழ் மொழியின் தனிச் சிறப்பு.

இயற்கை நியதிகளையும், சூழியல் அறங்களையும் வகுத்துக் கொண்டு எவ்வுயிர்களுக்கும் தீங்கு செய்யாத வாழ்வை வாழ்ந்த அறிவு மரபினர் தமிழர்கள் என்பதை நினைக்கையில் நெஞ்சம் நிமிர்கிறது ..!

நிலம் செழுமையின் களம்

                நிலமெனும் வெளியை பனிமலையாக, பாறைக்குவியலாக மண்ணாக, மணலாக ,அள்ளக்குறையா வளமாக கருதும் போக்கு மாந்தர்களின் பொது புத்தியில் உறைந்துள்ளது.

ஆனால் …

நிலம் என்பது “ உயிர்களின் கருவறை “ நிலத்தை ஆதாரமாகக்கொண்டே எல்லா உயிர்களும் தத்தமது வாழ்வினை நிலத்தின் மீது கட்டமைக்கின்றன. அதன் பொருட்டே

“ எல்லா உயிர்களும் இன்பம் எய்துக “ என்கிறது தமிழ் மரபு.

விளைச்சல் என்பதை தாவரங்களின் எழுச்சியாகக் கருத வேண்டும்! பூப்பதும், காய்ப்பதும் தாவரங்களின் பண்பு. தாவரங்கள் விளைவது பூச்சிகள் தொடங்கி … பேருயிர் யானைகள் வரை பசியாற்றவே.

தாவரங்களையும் – நிலத்தையும் முன் வைத்து “ நிலத்திணையை “ உருவாக்கியது தமிழ் சமூகம். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனும் நானிலமும் தாவர, நிலத்தொகுதி சார்ந்தவை. பெருமரத்தின் வேரினை, விழுதினைப் போன்றே தமிழர்களின் வாழ்வியல் மரபில் நிலமும் – பொழுதும் இரண்டறக்கலந்தவை!

ஓர் இனத்தின் வாழ்வும் – நம்பிக்கையும் அவ்வினம் உயிர்த்தெழும் நிலத்தில் இருந்து தோன்றுகின்றன. அதற்கேற்ப பருவங்கள் உயிர்கள் வாழும் சூழலை வழங்குகின்றன. இதனை மெய்பிக்கவே தொல்காப்பியம் முதல் பொருள் கருப்பொருள் என்பதை,

    “ முதல் எனப்படுவது,நிலம்பொழு

     திரண்டின் இயல் பென மொழிப

      இயல்பு உணர்ந்தோரே” – என்கிறது.

அண்டத்தில் உயிர்கள் வாழும் ஒரே கோளமான பூமிக்கு இன்னொரு பெயர் “ நிலம்.” அந்நிலத்தின் மீது காலச் சுழற்சியில் .. சமூக மாற்றங்கள் நிகழ்ந்தன! ஓர்மையுடைய உற்பத்திப் பண்பாட்டுக்கு மாறிய மனித சமூகம் உயிர்களின் கருவறையான நிலத்தை உற்பத்திக் கருவியாக மாற்றியது. நிலத்தை கவர்தலும், மீட்டலும் ஆளுமையின் அடையாளமானது! சொத்தும், அரசும் நிலத்தின் மீது கட்டமைக்கப்பட்டன. அன்பும், அறமும் நிலத்தின் அடியில் புதைக்கப்பட்டன.

நிலத்தை வெறும் மண்ணாகப் பார்க்கலானான் மனிதன். மண்ணுக்குள் இயங்கும் ஓர் உலகத்தை மனிதன் பார்க்கவில்லை! மனிதக் கண்களுக்குப் புலப்படாத எண்ணற்ற உயிரிகள் மண்ணில் வாழ்கின்றன. நிலத்தின் மேற்பரப்பில் ஒரு செ.மீ.மண்ணை உருவாக்க சுமார் ஐநூறு ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறது இயற்கை.

என்ன ..? மண்ணும் உயிரா என்று நீங்கள் மலைக்க வேண்டியதில்லை! புவியில் காணும் இடமெல்லாம் உயிர்கள் வாழ்கின்றன. ஒரு கிலோ மண்ணை பாத்திரத்தில் போட்டு தீயில் சூடேற்றி மீண்டும் பாதி எடை குறைந்திருக்கும். காரணம் மண்ணுள் இருக்கும் ஈரப்பதம் மட்டுமன்று! பல்லாயிரம் நுண்ணுயிரிகளும் கரைந்து காணாமல் போயிருக்கும். நெருப்பில் சுட்ட மண் ஓர் ஆதி ஞெகிழி என்பதை உணர வேண்டும்!

மண் தாவரங்களை மலர்த்தும் ஒரு தாது. இதை மனிதர்களால் ஒரு போதும் உருவாக்கவோ, புதுப்பிக்கவோ முடியாது! மக்கும் கழிவுகளின் ஊட்டச்சத்தாலும், காற்றும், நீரும் கலந்த கனிம, கரிய துகள்களில் மண்ணை உருவாக்குகிறது இயற்கை. அத்தகைய மண்ணுக்கு ஒவ்வாத நச்சுக்கழிவுகளை கொட்டி சிறிது சிறிதாக மண்ணை சாகடித்து வருகிறது இன்றைய உற்பத்தி பண்பாட்டு.

மனிதகுலம் இதுவரையிலும் சந்தித்திராத இயற்கை இடர்பாடுகளை சந்திக்க நேர்கிறது. மனிதனின் அதிதீவிர நுகர்வுப் பசிக்கு இயற்கையின் வளங்கள் அனைத்தும் பலியாகின்றன. நகர்மயமாகுதலும், தொழில் மயமாகுதலும் வேக, வேகமாகநிலத்தை விழுக்குகின்றன.

எல்லா உயிர்களுக்கும் பசியாற்றும் உணவை, உறைவிடத்தை நிலம் தான் வழங்குகிறது.உயிர்களுக்கு நிலத்தை விட்டால் வேறு போக்கிடமில்லை! நிலம் பாழாகப் பாழாக விளிம்புநிலை மனிதர்களும் இன்னும் பிற உயிரினங்களும் துயரத்தின் எல்லைக்கு துரத்தப்படுகிறார்கள். நிலச் சீரழிவின் தாக்கம் உலகெங்கும் சுமார் 3.2.பில்லியன் மக்களின் நல்வாழ்வை பறித்துள்ளது.

நிலத்தை சுரண்டி எடுக்கப்படும் வளங்களை வாங்கும் சக்தி படைத்த மனிதர்கள் வெறி கொண்டு நுகர்ந்து வருகிறார்கள். வளமான குறிஞ்சி நிலத்தில் வணிகப்பயிர்களின் பெருக்கம்.முல்லை நிலப்பகுதிகள் அற்றும், அருகியும் வருகின்றன. மருத நிலம் வீட்டடிமனைகளாக மாறிவிட்டன.நெய்தல் நிலத்தை மெல்ல மெல்ல கடல் உள்வாங்கி விடும். மேலும் மேலும் நிலம் மாசடையுமானால் உலகு தழுவிய பொருளாதார நெருக்கடிகள், உணவு பற்றாக்குறை, உடல்நல கேடுகள் பெருகும். மண்ணுக்கு என்னென்ன நேர்கிறதோ அவை எல்லாம் உயிர்களுக்கும் நேரும் என்பதை மனிதகுலம் உணர வேண்டும்!

 நீர் – உயிர்களின் வேர்

தமிழர்களின் பாரம்பரிய வாழ்வு நீரில் தொடங்கி, நீரில் நிறைகிறது. தமிழ் சமூகத்தைப்போல் நீரின் அருமையை உணர்ந்த சமூகம் உலகில் வேறு எங்கும் உள்ளனவா என்பதை அறியேன்! நீரினை அறிவியல் தொழில் நுட்பத்தோடு பயன் படுத்தப்பட்ட ஆவணங்கள் தமிழர்களின் பழந்தமிழ் பனுவல்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், அணைகள், அடுக்குத்தொடர் ஏரிகள், புதையுண்ட உறை கிணறுகள் என்று தொல்லியல் தேடல்களில் பொதை பொதையாகக் கிடைக்கின்றன.

நீர்நிலைகளுக்கு அகழி தொடங்கி கேங்கை வரை முப்பதிற்கும் மேலான சொற்கள் தமிழில் உள்ளன.வேறு எந்த மொழிகளிலும் நீர் குறித்து இவ்வளவு சொற்கள் இருக்க வாய்ப்பில்லை! தமிழில் ஒவ்வொரு சொற்களும் காரணமில்லாமல் பொருளில்லாமல் இடம் பெறாது! 

“ நீரின்றி அமையாதது யாக்கை “ எனும் புறநானூற்றுப்பாடலில் உடல் உணவால் ஆனது ..! உணவு நீரால் ஆவது என்னும் உண்மையை வேறொரு பாடலும் உறுதிபடுத்துகிறது.  “ உணவெனப் படுவது நிலத்தொடு நீரே “ என்று.

நீரின் ஆதாரம் மழைதான்.  மழையின்றி நீரில்லை! வான் பரப்பில் இருந்து மழை எப்படிப் பொழிகிறது ..?உலகெங்கும் வாழ்ந்த பண்டைய மனிதர்களின் மண்டையைக் குடையும் கேள்வியாகயிருந்தது .அரிஸ்டாட்டிலிருந்து கிரேக்க அறிஞர்கள் பலரும் மழை வருதல் குறித்து பலவிதமான சிந்தனைப் போக்கை கொண்டிருந்தனர்.

கடலின் ஆழத்தில் நீர் உற்பத்தியாகிறது. கடலிலுள்ள நீர் மண்ணால் உறிஞ்சப்பட்டு. பிறகு, மலைகளிலிருந்து அருவியாக, ஆறாக ஓடுகின்றன என்கிறார் தேல்ஸ் என்னும் அறிஞர்.

குளிர்காலத்தில் காற்று உறைந்து மழையாகப் பொழிகிறது என்று நம்புகிறார் அரிஸ்டாட்டில். இவர்கள் வாழ்ந்த சம காலத்தில் இயற்கையை நுட்பமாக அவதானித்த நமது சங்கப் புலவர்கள் மழை வருதல் குறித்து அறிவு பூர்வமான சிந்தனையை கொண்டிருந்தனர் என்பதை இப்போது நினைத்தாலும்  வியப்பாக உள்ளது.

    “ வான் முகந்த நீர் மழைபொழியவும்

      மழைப்பொழிந்த நீர் கடல்பரப்பவும்

      மாரி பெய்யும் பருவம் போல்

      நீரின்றும் நிலத்து ஏற்றவும்

      நிலத்தினின்று நீர்ப்பரப்பவும்

     அளந்து அறியாப் பல பண்டம் “

என்கிறார் பட்டினப்பாலையில் உருத்திரங்கண்ணனார்.

கடல் நீர் ஆவியாகி மேகமாக வானில் திரண்டு மழை பொழிகிறது. பெய்த மழை ஆறுகளில் ஓடி கடலில் கலக்கிறது. என்பதை சங்க காலப் புலவர்கள் நீரியியல் சுழற்சியை வெகு தெளிவாக உலகிற்கு உணர்த்தி உள்ளார்கள். அது மட்டுமன்று…

     “ இரு விசும்பு அதிர மின்னி

      கருவி மாமழைகடல் முகந்தனவே”

என்னும் நற்றிணைப்பாடலில் … கருமையான வானத்தில் பெரும் இரைச்சலுடன் கேட்கும் இடியை, மின்னலை பாடியுள்ளனர்.

வானில் சில நட்சத்திரங்களின் இருப்பையும், நகர்வையும் வைத்து வடக்கு திசையில் சில நட்சத்திரங்கள் நகர்ந்தால் மழை வளம் அதிகமாகும். அதுவே தென் திசை நகர்ந்தால் மழை வளம் குறையும் என்பதை கணித்திருந்தனர். அத்தோடு பூச்சிகள், தவளைகள், பறவைகளின் பருவகால நடப்பியலைப் புரிந்து கொண்டு மழை அளவினை கணக்கிட்டனர். நீர் வரும் தடங்களின் அருகே குடிமனைகளை அமைத்து திணையியல் பேணிய ஓர் இனத்தால் மட்டுமே இயற்கையை இப்படி அணுவணுவாக அறிந்திட முடியும் ..!

மாமழை போற்றிய மரபின் நீட்சியாகவே இன்றும் திரைப்படங்களில் தலைவனும், தலைவியும் மழையில் நனைந்தவாறு தங்களின் அன்பை, காதலை வெளிப்படுத்துகிறார்கள்.

“ சின்னச்சின்ன தூறல் என்ன | பொன் வானம் பன்னீர் தூவுது | வான் மேகம் பூப்பூவாய்தூவும் | தேன் சிந்துதே வானம்” | இப்படி நிறைய, நிறைய மழைப்பாடல்கள் உள்ளன. மழையின் ஒவ்வொரு துளிகளுக்கும் தனித்தனியான பெயர்கள் இருப்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.          “மழை” என்பது வெறுமனே ஒற்றைச் சொல்லன்று.

மழையும் – மாரியும் ஒன்றல்ல! தூறல், துவலை, சாரல் மூன்றுக்கும் இடையே உள்ள நுண்ணிய வேறுபாடுகள் உள்ளன. ஆலங்கட்டி மழையும் – பனிமழையும் ஒன்றல்ல துளி,தளி,துடி மழையின் சின்னஞ்சிறு வேறுபாட்டினை நமது மூதாதைகள் அறிவார்கள். புயலும் – பெயலும் ஒன்றல்ல! ஆழி, கலி, ஆலி மழையின் ஒவ்வொரு துளிகளின் ஈரத்தை, குளுமையை உள்வாங்கியவர்கள் தமிழர்கள். நீரினை சேமிக்க, பயன்படுத்த, பாதுகாக்க தெரிந்தவர்களின் மரபணுவில் பிறந்தவர்கள் இன்று நீர் நிலைகள் நஞ்சாவதைப்பற்றி கொஞ்சமும் கவலைப் படுவதில்லை!

நீர்நிலை என்பது உயிர்களின் தொகுதி என்பதை உணராத பொறுப்பற்ற உற்பத்தி சமூகத்தில் நாமும் வாழ்கிறோம்! பேராசை மனிதர்கள் நன்னீரை நஞ்சாக்கி, அதனையே சுத்திகரித்து பணமாக்குகிறார்கள்! தொழில் சாலைகள் வெளியேற்றும் திடக்கழிவுகள், வீடுகளிலிருந்து வெளியேறும் சோப்பு, சாம்பு, பற்பசை போன்ற வேதியியல் கழிவுகள், வேளாண்நிலத்தில் உழவர்கள் கொட்டும் பூச்சிக்கொல்லிகள், உரங்கள், நெகிழி என்று கழித்துக்கட்ட முடியாத கழிவுகள் ஒருவித பாசியாக, பூஞ்சையாக மாறி, தவளைகளின் தோல் திசுவில் படிந்து தவளைகளை நீர்நிலைகளை விட்டு வெகு தொலைவு விரட்டி விட்டது.

தற்போது உலகில் சுமார் ஐந்து மில்லியன் மக்கள் அசுத்தமான தண்ணீரைக் குடிப்பதால் இனம் காணமுடியாத பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். மனிதர்களின் நோயும், இறப்பும் பேசப்படுவதுபோல் பிற உயிர்களின் இழப்பை உலகம் பேசுவதில்லை!

பூமியின் நன்னீர் இருப்பு குறைந்து வருவதை உலக சுகாதார நிறுவனம் கவனப்படுத்தி உள்ளது. என்றாலும் … இப்புவியில் இருந்து நீரின் இருப்பை முற்றிலும் அழிக்க முடியாது! நீர் ஆவியாகுதல், மழைபொழிதல் போன்ற இயற்கையின் நீர்ச்சுழற்சியில் எந்த மாற்றமும் நிகழாது!

ஆனாலும் … உலகெங்கும் அதிகரித்து வரும் மழைக்காடுகளின் அழிப்பு, மட்டுமீறிய நுகர்தல், வகைதொகையற்று சுரண்டப்படும் இயற்கை வளங்கள் போன்ற மனிதச் செயல்களால் பருவங்களின் தடுமாற்றமும், உயர்ந்து வரும் வெப்பமும் புதியபுதிய சிக்கல்களை, நெருக்கடிகளை பூமிக்கு சேர்க்கும். இன்னும் பிறவா தலைமுறைக்கு வாழத்தகுதியான பூமியை கையளிக்கும் கடமை உணர்வு வாழும் தலைமுறைக்கு வரவேண்டும்! பூமியின் பல்லுயிர் வாழ்வைப் பாதுகாக்கும் அறத்தினை நோக்கிப் பயணிப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *