– நமது மூலிகை மருத்துவர்
“உள்ளுர் பண்டங்கள்” விலை போகாது என்பது போல, பாதாம் பருப்பிற்கு சற்றும் குறைவில்லாத அனைத்து சத்துப்பொருள்களும் நிலக்கடலையில் இருந்தும், அதிக விலை கொடுத்து வாங்கும் பாதாம் பருப்பையே மக்கள் கொண்டாடுகின்றனர்.
நிலக்கடலையின் பூர்வீகம் தென் அமெரிக்கா. சைனாவிற்கு அடுத்தபடியாக, இந்தியா, அமெரிக்காவில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, குஜராத்திலும் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
நிலக்கடலை விதை மூலம் பயிரிடலாம். இது 120 முதல் 150 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகிறது. இச்செடி மஞ்சள் நிற பூக்களை கொண்டிருக்கும். பூவிலிந்து வரும் நீட்சி மண்ணில் புதைந்து கடலையை உருவாக்குகிறது.
நிலக்கடலை செடி மண்ணில் நைட்ரஜன் சத்தை உருவாக்குகிறது. மண்வளத்தை பெருக்குகிறது.
நிலக்கடலையை வெயிலில் உலர வைத்து ஈரப்பதத்தை அகற்றி பாதுகாக்க வேண்டும். இல்லையெனில், பூஞ்சை தொற்று ஏற்படும். இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது.
நிலக்கடலையில் அதிக அளவில் புரதசத்து, நல்ல கொழுப்பு சத்து, உயிர்சத்துக்கள், தாதுசத்துக்கள் உள்ளதால் இது ஒரு சிறந்த ஆரோக்கியமான உணவுபொருள் என்பதில் சந்தேகம் இல்லை.
தாவரவியல் பெயர்
Arachis hypogaea
ஆங்கிலப்பெயர்கள்
Peanuts, ground nuts, monkey nuts
வேறுபெயர்கள்
வேர்கடலை, கடலை, நிலக்கடலை, மணிலாகொட்டை
சத்துப்பொருள்கள்
அதிக அளவில் புரதசத்து, நார்சத்து, நல்ல கொழுப்பு சத்து உள்ளது.
உயிர்சத்துக்கள்
விட்டமின் E, விட்டமின் B1, விட்டமின் B3, விட்டமின் B9
தாதுசத்துக்கள்
கால்சியம், இரும்புசத்து, தாமிரம், நாகசத்து, பாஸ்பரஸ், மெக்னீசியம், மாங்கனீசு
தாவரவேதிப்பொருள்கள்
Resveratrol, beta sitosterol, coumaric acid
நிலக்கடலையின் மருத்துவபயன்கள்
1. தசை வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு
நிலக்கடையில், தசைவளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு தேவையான புரதசத்து அதிக அளவில் (25%) உள்ளது. 100 கிராம் நிலக்கடலையில், நமக்கு ஒருநாள் தேவையான புரதசத்தில் பாதி அடங்கியுள்ளது. குறிப்பாக 20 வகை அமினோ அமிலங்களும் அடங்கியுள்ளது. ஆகவே குழந்தைகள் மற்றும் தசை வளர்ச்சியை விரும்புபவர்களும் தினம் 50 கிராம் முதல் 100 கிராம் வரை நிலக்கடலையை தண்ணீரில் ஊற வைத்து அல்லது அவித்து அல்லது வறுத்து சாப்பிடலாம்.
2. எலும்பு வலு மற்றும் ஆரோக்கியத்திற்கு
நிலக்கடலையில் எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான துத்தநாகச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்து இருப்பதால், இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர எலும்பு வலிமை பெறும்.
3. தோல் ஆரோக்கியத்திற்கு
நிலக்கடலையில் தோல் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் E சத்து அதிக அளவில் உள்ளது. ஆகவே இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர தோலில் அதிக எண்ணெய் சுரப்பு, முகப்பரு, தோல் சுருக்கம் ஆகியன நீங்கி முகம் பழபழப்படையும். மேலும் நல்ல முடி வளர்ச்சிக்கும் சிறந்தது.
4. இருதய ஆரோக்கியத்திற்கு
நிலக்கடலையில் கெட்ட கொழுப்பு சிறிது இருப்பினும், நல்ல கொழுப்பு அதிக அளவில் (49%) உள்ளது. மேலும் இருதய ஆரோக்கியத்திற்கு தேவையான மெக்னீசியம், நியாசின், தாமிரசத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளது. பொட்டாசியம் சத்து மிக அதிகம் இருப்பதால் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. Resveratrol என்ற தாவர வேதிப்பொருள் மூளையில் இரத்த அடைப்பு உண்டாகாமல் பாதுகாத்து பக்கவாதத்தை தடுக்கிறது.
நிலக்கடலையை தண்ணீரில் ஆறுமணி நேரம் ஊறவைத்து தினம் 30 கிராம் அளவில் சாப்பிட்டு வர (அதிக அளவில் உண்ணக்கூடாது) இருதய ஆரோக்கியத்தை பேணலாம். நிலக்கடலையை வேகவைத்து பயன்படுத்தினால் நல்லகொழுப்பு பாதி அளவில் பலன் குறைந்து விடுகிறது.
5. மூளை ஆரோக்கியத்திற்கு
நிலக்கடலையில் விட்டமின் E சத்து, நியாசின் (B3) போன்ற விட்டமின் சத்து அதிகம் உள்ளது. இது மூளை சுருக்கத்தை தடுத்து, ஞாபகசக்தியை தருகிறது. மேலும் Tryptophan என்ற அமினோஅமிலம் Serotonin என்னும் மூளை வேதிப்பொருளை சுரக்கச் செய்து மனச்சோர்வை (Depression) மாற்றுகிறது.
6. நீரிழிவு நோயாளர்களுக்கு
நிலக்கடலையில் சர்க்கரை சத்து குறியீட்டு அளவு (Glycemic index – 23) மிகவும் குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளர்கள் தினம் குறைந்த அளவில் (தினம் 30 முதல் 50 கிராம் வரை) பயன்படுத்தி வரலாம். மேலும் புரதசத்தும், நல்ல கொழுப்பு சத்தும், நார்சத்தும் இருப்பதால் அதிக பசியை குறைத்து இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
7. புற்றுநோய் தடுப்பதற்கு
நிலக்கடலையில் புற்றுநோயை தடுக்க உதவும் Resveratrol, beta sitosterol, phenolic acid போன்ற தாவர வேதிப்பொருள்களும், Arginine என்னும் அமினோ அமிலமும் இருப்பதால் வாரத்திற்கு மூன்று நாள்கள் 30 முதல் 50 கிராம் வரை நிலக்கடலையை சாப்பிட்டு வர புற்றுநோய்கள் வராமல் தடுக்கலாம்.
8. ஆண்மை தன்மை அதிகரிக்க
Arginine என்ற அமினோ அமிலமும் Resveratol என்ற தாவரவேதிப்பொருள்களும் நிலக்கடலையில் அதிகம் இருப்பதால், இவை விறைப்பு தன்மையை அதிகரிக்க செய்கிறது. மேலும் விந்தணு குறைபாடுகளை நிவர்த்தி செய்து குழந்தைப்பேறு உண்டாகச் செய்கிறது.
9. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
நிலக்கடலையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்ய தேவையான விட்டமின் E சத்து மற்றும் நாகச்சத்து அதிகம் உள்ளது. மேலும் ஆன்டி ஆக்ஸிடன்டுகளும் அதிகம் இருப்பதால் நிலக்கடலையை குறைந்த அளவில் தொடர்ந்து சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
10. குழந்தையின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு
நிலக்கடலையில் போலிக் அமிலம் என்ற விட்டமின் B9 சத்து அதிகம் உள்ளது. இது வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை மற்றும் உடல் உறுப்புகளின் சீரான வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆகவே கர்ப்பிணி தாய்மார்கள் சிறிதளவு நிலக்டலையை தினம் சாப்பாட்டில் சேர்த்து உண்ணலாம்.
11. கவனிக்க வேண்டியவைகள்
Leave a Reply