SAVKIA-வின் 277-வது கருத்தாய்வுக் கூட்டமானது திரு.அசரி ஆசான் தலைமையில் மூலச்சல் மருத்துவர்.த.இராஜேந்திரன் , திரு.கே.செல்வநாதன் ஆசான், திரு.இராஜன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 06.07.2024 அன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்தில்,திரு. இராஜன் ஆசான் மேகநோய், வாய்ப்புண், குடல்புண், வாய்நாற்றம், வாந்தி, உஷ்ண நோய்கள் இவற்றுக்கு ஏலாதி சூரணம் செய்முறையை தெளிவாகக் கூறினார்.
அடுத்ததாக திரு.ஜெரின் ஆசான் ஆண்மைக்குறைவு, வாதம் இவற்றுக்கு லிங்க செந்தூரம் செய்முறையையும், விந்தணு உற்பத்திக்கு கெந்தக மாத்திரை செய்முறையையும் தெளிவாக கூறினார்.
அடுத்ததாக திரு.வினோத் குமார் அடிபட்டகாயம், வீக்கம் இவற்றை குணப்படுத்துவதற்கான தைலம், மற்றும் பூச்சுமருந்து செய்முறையை கூறி, தடவுமுறை குறித்தும் தெளிவாகப் பேசினார்.
அடுத்ததாக புதுச்சேரி மருத்துவர். கமலக்கண்ணன் அவர்கள் வர்ம வசவு தைலம் செய்முறையைக் கூறினார். அடுத்ததாக திரு.ஜெகஜீவன் ஆசான், கருப்பைக்கட்டி, நீர்க்கட்டி, மாதவிடாய் நேர வயிற்றுவலி, சிறுநீரில் புழு வருதல் இவற்றுக்கு குமட்டி குளம்பு செய்முறையை கூறினார்.
அடுத்ததாக திரு. ஜாண் ஆசான் மலச்சிக்கல், மூலம், வாயு இவற்றுக்கு சூரணம் செய்முறையை கூறினார். திரு.ஜெபமணி ஆசான் பித்தம், கிரிசம் இவற்றுக்கான கசாயம் செய்முறையைக் கூறினார்.
அடுத்ததாக மூலச்சல் மருத்துவர் த.இராஜேந்திரன் வர்ம மருத்துவம் குறித்து பேசியதோடு மாதவிடாய் சம்பந்தப்பட்ட நோய்கள், வெள்ளை, வெட்டை, சிறுநீரக நோய்கள் குணமாவதற்கான சுண்ணம் செய்முறை கூறினார். மேலும், அலுப்பு மருந்து செய்முறையையும் கூறினார்.
கூட்டத்தின் இறுதியில் திரு.கே.செல்வநாதன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத்தினை நிறைவு செய்தார்.
நூல் வெளியீட்டு விழா…
மூலச்சல் டாக்டர் த. இராஜேந்திரன் அவர்கள் எழுதிய முல்லை தமிழின் கவிதை குமுறல்கள் என்ற நூல் வெளியீட்டு விழா கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அரசு ஊழியர் சங்க வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் பொன்விழா ஆண்டு தொடக்க நிகழ்ச்சி மற்றும் புத்தக வெளியீட்டு விழா ஆகியவை கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அரசு ஊழியர் சங்க வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கவிஞர் அரங்கசாமி தலைமை வகித்து பொன்விழா கருத்துரை வழங்கினார். திருவை சுவாமி வரவேற்றார். தமுஎகச குமரி மாவட்டத் துணைச் செயலாளர் மிகையிலான் மரு. கஃபீல் கானின் கோராக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – ஒரு மருத்துவரின் நினைவலைகள் என்ற நூலை அறிமுகம் செய்து பேசினார்.
தொடர்ந்து மூலச்சல் டாக்டர் த. இராஜேந்திரன் எழுதிய முல்லைத் தமிழின் கவிதைக் குமுறல்கள் என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. சாகித்ய அகாடமி யுவபுஷ்கார் விருதாளர் எழுத்தாளர் மலர்வதி நூலை வெளியிட்டார். என்.கே கலா நூலைப் பெற்றுக் கொண்டார்.
நூல் அறிமுகம் செய்து தமுஎகச துணைத் தலைவர் கவிஞர் தக்கலை ஹலீமா பேசினார். தமிழ்ச் செம்மல் விருதாளர் எழுத்தாளர் குமரி ஆதவன் வாழ்த்துரை வழங்கினார். நூலாசிரியர் மருத்துவர்.த.இராஜேந்திரன் ஏற்புரை வழங்கினார். அருள் மனோ, றோஸ் ராபின், விடியல் குமரேசன், கார்த்திக் நாத் ஆகியோர் பாடல்கள் பாடினர்.
தமுஎகச மாவட்டக் குழு உறுப்பினர் ஆன்டனி ஜோசப், எழுத்தாளர் பென்னி, சமூக சேவகர் தக்கலை சந்திரன், பத்திரிகையாளர்கள் பூமணி, ஜெயகர்ணன், ஓலக்கோடு ஜாண், லெனின், பட்டிமன்ற பேச்சாளர் நடராஜன், கவிஞர் நாகராஜன், ஜஸ்டின் ராஜ், ஜாண் ராஜ், மருத்துவர்கள் டாபின், பியூலா மனோ, புதிய தென்றல் வடிவமைப்பாளர்கள் ராஜேஸ்வரி, அனிதா, மேலாளர் ஜெனிஷ், விலவூர் பேரூராட்சி தலைவர் பில்கான், கவுன்சிலர் ஜுட்ஸ் பெர்லின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முல்லைப்பூங்கா…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி கன்னியாகுமரி மாவட்டம் சுருளகோடு ஊராட்சிக்குட்பட்ட ஆலம்பிலாவடி பகுதியில் முல்லை பூங்கா அமையவுள்ள இடத்தினை மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோதங்கராஜ் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, கன்னியாகுமரி மாவட்டம் சுருளகோடு ஊராட்சிக்குட்பட்ட ஆலம்பிலாவடி பகுதியில் தோட்டக்கலைத்துறை சார்பில் புதிதாக அமையவுள்ள முல்லைபூங்காவிற்கான இடத்தினை மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோதங்கராஜ் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
ஐவகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றான காடும் காடு சார்ந்த இடத்தைச் சேர்ந்த முல்லை நிலத்தில் வாழ்ந்த தமிழ்மக்களின் வாழ்வியல், புவியியல் நிலைகளை எடுத்துக்காட்டும் விதமாக முல்லைப்பூங்கா கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை வட்டத்திற்குட்பட்ட வேளிமலை கிராமத்தில் தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை சார்பில் முல்லை பூங்கா அமைப்பதற்கு 2024-25 ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் சுருளகோடு ஊராட்சிக்குட்பட்ட ஆலம்பிலாவடி அருகில் முல்லைப்பூங்கா அமைக்கப்படவுள்ளது. இப்பூங்காவில் முல்லைதிணை தொடர்பான சிற்பங்கள் (ஆயர், ஆய்ச்சியர், இடையர், இடைச்சியர், ஏறுதழுவுதல், மாயோன்), விலங்குகள்& பறவைகளின்சிற்பங்கள் (கருடன், காட்டுக்கோழி, முயல், மான், யானை, புலி, பசு, ஆடு, சேவல், கானக்கோழி), முல்லைதிணை சங்கீத கருவிகள் (முல்லையாழ், புல்லாங்குழல், பறை), முல்லைதிணை நாகரிகம் தொடர்பான சிற்பங்கள் (ஆநிரைமேய்த்தல், களைஎடுத்தல், குழலுதல், ஏறுதழுவுதல், கூத்தாடல், மந்தைமேய்த்தல்), காட்சிபலகைகள் (குற்றால குறவஞ்சிபாடல், முல்லைப்பாட்டு, நற்றிணை, புறநானூறுபாடல், ஆலோளம்பாடல்), மரவகைசேகரம் (வாழை, மா, பலா, கொய்யா, மங்குஸ்தான், ரம்புட்டான், ஜாதி, கிராம்பு, துரியன், கமுகு, கொன்றை), முல்லைதிணை சிறுதானியசாகுபடி (சாமை, வரகு, கேழ்வரகு), முல்லைதிணைமலர்கள்சாகுபடி (முல்லை, பிச்சி, குண்டுமல்லி), குழந்தைகள்விளையாட்டுதிடல், நிழல்கூடாரம், பாறைதோட்டம், மரப்பாலம், நீரோடை போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் அமைய உள்ளது.
மேலும் மலைஏற்றம், இம்மாவட்டத்தின் தட்பவெப்பநிலைக்கு உகந்த பாரம்பரிய மர வகைகள் நடவு செய்தல், ஏற்கனவே இருக்கின்ற மரவகைகளை பாதுகாத்து எதிர்கால சந்ததியினர் பயன்பெறும் வகையிலும் இப்பூங்கா அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோதங்கராஜ் அவர்கள் தெரிவித்தார்கள்.
நடைபெற்ற ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஜெ.பாலசுப்பிரமணியம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி.ஷீலாஜாண், கல்குளம் வட்டாட்சியர் திரு.முருகன், சுருளகோடு ஊராட்சிமன்ற தலைவர் திருமதி.விமலாசுரேஷ், திரு.சுரேஷ், அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
வெளியீடு –
செய்தி மக்கள்தொடர்புதுறைஅலுவலகம், கன்னியாகுமரி மாவட்டம்
Leave a Reply