நம்மைச் சுற்றி இருக்கும் அனைவரும் நேர்மையில்லாமல் நடந்துக் கொள்ளும் சமயத்தில் நாம் மட்டும் ஏன் நேர்மையாக நடந்துக்கொள்ள வேண்டும்? அதனால் என்ன பயன் கிடைத்துவிடப் போகிறது. நேர்மையின்றி வாழ்பவர்கள் எல்லா சுகங்களையும் அனுபவிக்கிறார்கள். நேர்மையுடன் வாழ்வதால் நமக்கு என்ன கிடைக்கிறது? என்று நினைப்பவர்கள் இந்த கதையை முழுமையாகப் படியுங்கள்.
ஒரு நாட்டுடைய அரசர் அவருக்கு அதிகமாக வயதானதால் புது அரசரை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு வருகிறார். ஆனால் இந்த முறை தன்னுடைய குடும்பத்திலிருந்து இல்லாமல் மக்களில் இருந்து ஒருவரை அரசனாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
இதில் விருப்பம் இருப்பவர்களை அரண்மனைக்கு வரச் சொல்கிறார். இதனால் அரண்மனைக்கு நிறைய மக்கள் வருகிறார்கள். அங்கே வந்த எல்லா மக்களிடமும் அரசர் ஒரு விதையைக் கொடுத்து இதை உங்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று நன்றாக வளர்த்து ஒரு வருடம் கழித்து எடுத்து வரவும் என்று கூறுகிறார்.
‘நீங்கள் ஒரு வருடம் கழித்து திருப்பி எடுத்து வரும் செடியை வைத்துதான் உங்களில் யார் அரசன் என்பதை என்னால் சொல்ல முடியும்’ என்று கூறுகிறார். அந்த கூட்டத்தில் இருந்த சின்ன பையன் ஒருவன் அரசனிடமிருந்து விதையை வாங்கி கொண்டு வந்து வீட்டிலே வைத்து தண்ணீர் ஊற்றி பத்திரமாக பார்த்துக்கொண்டான்.
ஒருமாதம், இரண்டு மாதம் என்று காலங்கள் போனாலும் இவனுடைய செடி முளைக்கவில்லை. தன்னுடைய நண்பர்கள் அனைவரும் தன்னுடைய செடி வளர்ந்திருப்பதை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கையில், இந்த குட்டி பையனின் செடி மட்டும் வளரவில்லையே என்று நினைத்து மிகவும் வருத்தப்பட்டான்.
ஒருவருடம் கழித்து அரசர் அந்த செடியை திருப்பி கொண்டுவர சொல்கிறார். மக்கள் அனைவரும் விதவிதமான செடிகளை பெரிதாக வளர்த்து எடுத்து வந்திருந்தனர். ஆனால் அந்த குட்டி பையன் வெறும் பூந்தொட்டியை மட்டுமே அரண்மனைக்கு கொண்டு செல்கிறான். ஏனெனில் அவனுடைய விதை வளரவேயில்லை. இதை பார்த்த அரசரும் அந்த குட்டி பையன்தான் இந்த நாட்டினுடைய அடுத்த அரசன் என்று அறிவிக்கிறார்.
மக்கள் யாருக்கும் எதுவுமே புரியவில்லை. அப்போது அரசர் சொல்கிறார், ‘நான் ஒருவருடத்திற்கு முன்பு உங்கள் அனைவரிடமும் கொடுத்தது வேகவைத்த விதை. அது வளரவில்லை என்று தெரிந்ததும் புதுவிதையை போட்டு செடியாக வளர்த்து கொண்டு வந்திருக்கிறீர்கள். ஆனால் அந்த குட்டி பையன் மட்டும்தான் நேர்மையாக இருந்தான். நேர்மையான ஒரு அரசனை கண்டுப்பிடிக்கத்தான் இந்த போட்டியையே நடத்தினேன்’ என்று அரசர் கூறினார். எந்த சூழ்நிலையிலும் நேர்மையாக நடந்துக்கொள்ள வேண்டியது நம்முடைய கடமை. அதனால் நமக்கு நன்மை கிடைக்கிறதோ இல்லையோ? நம்முடைய கடமையை சரியாக செய்தால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும். முயற்சித்துப் பாருங்களேன்.
Leave a Reply