கட்டுப்பாடாய் இருந்தால் தான்
காக்கமுடியும் சுதந்திரத்தை;
எட்டுப்பட்டி யானாலும்
இந்தியாவே ஆனாலும்
விட்டுக் கொடுக்கும் மனத்துடனும்
விதியை மதிக்கும் பண்புடனும்
கட்டுப்பாடாய் இருந்தால் தான்
காக்க முடியும் சுதந்திரத்தை!
கொட்டும் செல்வம் குவித்தவுடன்
குவலயத்தை மிதிப்பதுவும்
ஒட்டிக் கொண்ட இனம்சாதி
ஒன்றை மட்டும் எண்ணுவதும்
மட்டில்லாமல் பேசுவதும்
மற்றோரையே ஏசுவதும்
முட்டுக்கட்டை யாகிடுமே;
முற்றாய் வீழும் சுதந்திரமே!
எட்டுத்திக்கும் இருப்போரை
என்றும் அன்பாய் அணைத்தபடி
ஒட்டி உறவோடு இருத்தல் தான்
உண்மையான சுதந்திரம் காண்;
தட்டி ஏறும் பகைநீக்கித்
தனது குற்றம் தனை நீக்கிக்
கட்டுப்பாடாய் இருந்தால் தான்
காக்க முடியும் சுதந்திரத்தை!
நெட்டித்தள்ளி முன்னேற
நீதி நேர்மை வாய்மையினை
வெட்டிச் சாய்த்து வீழ்த்துவதும்
வெற்று முழக்கத் தாலிங்கே
கெட்டிக்காரன் போல் வாழ
கேட்டை நாட்டில் கூட்டுவதும்
கட்டிக் காவா சுதந்திரத்தை;
கடிதில் தேவை பொதுவொழுக்கம்!
Leave a Reply