விழுந்தாலும் எழுவேன் என்பதே நம்பிக்கை. தவறி விழுந்த விதையே முளைக்கும்போது தடுமாறி விழும் நம் வாழ்க்கை மட்டும் ஏன் சிறக்காது? நம்பிக்கையுடன் எழுவோம். தோல்விகள் கூட தோற்றுப் போகும் நம்பிக்கை இருந்தால்.
தளராத இதயம் இருந்தால் இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை. என்னை தோற்கடிக்கவே முடியாது என்பது நம்பிக்கை அல்ல. விழுந்தாலும் எழுவேன் என்பதே நம்பிக்கை. உள் மனதில் எதை எண்ணி அந்த எண்ணத்திற்கு உயிர் கொடுக்கிறோமோ அதுவாகவே நம் மனம் செயல்பட்டு வெற்றி அடையும். இதற்கு நம்பிக்கை என்னும் விதையை நம் மனதில் தூவி வர அதுவே விருட்சமாக உயிர்த்தெழும்.
நம் கனவுகள் தொட முடியாத உயரத்தில் இருந்தாலும் அதனை எளிதாக தொட்டுவிடலாம் நம்பிக்கை என்னும் ஆணிவேர் மட்டும் பலமாக இருந்தால். எந்த கடினமான செயலையும் சாதனையாக மாற்றுவது என்பது எளிது நம்பிக்கை மட்டும் நம் மனதில் இருந்து விட்டால்.
மனதில் வலிமையும் உறுதியும் இருந்துவிட்டால் எதையும் சாதித்து விடலாம். தோல்விகள் கூட தோற்றுப் போகும் நம்பிக்கை என்ற ஒன்று இருந்தால். தோற்காமல் எதையும் வென்றவர்கள் என்று இவ்வுலகில் யாரும் இல்லை. தோற்று விட்டோம் என்று துவண்டு விடாமல் வெல்வது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்தால் தோல்விகள் கூட தோற்றுப் போகும் நம் மீது நம்பிக்கை இருந்தால்.
எது எப்படியாயினும் வாழ்க்கையில் கடைசி வரை நம்பிக்கையை மட்டும் இழக்காமல் இருப்பது அவசியம். கடைசி வரியில் கூட நமக்கான வெற்றி எழுதப் பட்டிருக்கலாம்! எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போனாலும் தளர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் நம்பிக்கையுடன் முயற்சிக்க தோல்விகள் கூட தோற்றுப் போகும்.
விழுந்த அடிகளை நினைத்து வாழ்வில் உயர உதவும் படிக்கட்டுக்களாக எண்ணி முயற்சிக்க நாம் அடைய எண்ணும் இலக்கை எளிதாக தொட்டு விடலாம். தோல்வியைக் கண்டு துவளாத உள்ளம் கொண்டவர்களுக்கு இவ்வுலகில் முடியாதது எதுவுமில்லை. நம் திறமையின் மீது நம்பிக்கை கொண்டு எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சரியாக இருந்தால் வெற்றி நிச்சயம்தான்.
மனதிலிருந்து எதிர்மறை எண்ணங்களைப் போக்கி, கடந்து சென்றவை அனைத்தும் தோல்வி அல்ல வாழ்வில் நாம் கற்றுக் கொண்ட பாடங்கள் என்று எண்ணி முயற்சிக்க நம் வாழ்க்கைக்கான ஆதாரமும், அங்கீகாரமும் கிடைக்கும். தோல்விகள் கூட தோற்றுப் போகும் நம்பிக்கை இருந்தால்.
வாழ்வில் தோல்வி வந்தால் பொறுமை அவசியம். வெற்றி வந்தால் பணிவு அவசியம். எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம். நம்பிக்கையுடன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றிக்கான முதல் படி என்பதை அறிந்து கொண்டால் தோல்விகள் கூட தோற்றுப்போகும். எட்டி இருக்கும் நட்சத்திரத்தையும் தொட்டு விடலாம். அடைய முடியாது என்றெண்ணும் வாழ்வின் உயரத்தையும் அடைந்து விடலாம் நம்பிக்கை இழக்காது முயற்சித்தால் முடியாதது என்று ஏதுமில்லை. வாழ்வில் இழந்த எதனையும் மீட்டு விடலாம் நம்பிக்கையை மட்டும் இழக்காதிருந்தால்! நம்பிக்கையுடன் செயல்படுவோம்!
Leave a Reply