கருப்புநிறம் என்றால் அவளுக்கு மிகவும் பிடிக்கும். மற்றவர்கள் வண்ணமயமான பூக்களையும்,அழகான காலைப் பொழுதுகளையும் ரசித்த போது, அவளோ இரவின் அமைதியையும் மரங்களின் அடர்ந்த நிழல்களையும் விரும்பினாள். குறிப்பாக, உயரமான மரங்கள் சூழ்ந்திருந்த அந்தக்காடு அவளுக்கு மிகவும் பிடித்தமான இடமாக இருந்தது. அந்தக்காடு தன்னிடம் ஏதோ பேசுவதாகவும், தன்னைப் புரிந்து கொள்வதாகவும் அவளுக்குத் தோன்றும்.
ஒருநாள் மாலை,வழக்கம் போல அந்தக்காட்டில் இருந்த பழைய மரத்தின் அடியில் அமர்ந்து படம் வரைந்து கொண்டிருந்தாள். இதமான காற்று வீசியது. மரங்களின் இலைகள் சலசலத்தன. மறைந்து கொண்டிருந்த சூரியனின் ஒளி மரங்களுக்கு இடையே ஊடுருவி, தரையில் விசித்திரமான நிழல்களை உருவாக்கியது. கண்களை மூடிக் கொண்டு அந்த அமைதியை ரசித்தாள்.
அப்போது, திடீரென ஒரு குரல் கேட்டது. முதலில் அதிக காற்றின் ஓசை என்று தான் நினைத்தாள். ஆனால், உற்றுக் கேட்ட போது யாரோ தன் பெயரை அழைப்பது போல் இருந்தது. மரங்களுக்கு இடையே இருந்து வந்த அந்தக்குரல் அவளைத் தன்பக்கம் வருமாறு அழைப்பது போல் உணர்ந்தாள்.
அவள் கண்களைத் திறந்து சுற்றிலும் பார்த்தாள். எல்லாம் அமைதியாக இருந்தன. காற்று கூட வீசவில்லை.
அப்போது தான் அந்தப் பழைய மரத்தின் பின்னால் மறைந்திருந்த ஒரு குறுகிய பாதையை அவள் கவனித்தாள். கொடிகளும் அடர்ந்த கிளைகளும் அந்தப் பாதையை மறைத்திருந்தன. இதற்கு முன்பு பல முறை அங்கு வந்திருந்தும், அவள் அந்தப் பாதையைப் பார்த்ததே இல்லை.
ஆர்வம் அவளை ஆட்கொண்டது. என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் மெதுவாக அந்தப் பாதையில் நடக்கத் தொடங்கினாள்.
காய்ந்த இலைகள் அவளுடைய காலடியில் நொறுங்கின. இருபுறமும் உயர்ந்து நின்ற மரங்கள் சூரியஒளியை மறைத்தன. ஒவ்வொரு அடியாக அவள் முன்னேறிய போது, வெளிச்சம் குளறந்து இருள் அதிகரித்தது. காற்றும் முன்பைவிடக் குளிர்ச்சியாக மாறியது. மீண்டும் அந்தக் குரல் கேட்டது. இப்போது அது இன்னும் தெளிவாக இருந்தது.
அவளுடைய இதயம் வேகமாகத் துடித்தது. ஒருபுறம் பயமாக இருந்தாலும், மறுபுறம் அந்த மர்மம் அவளை ஈர்த்தது. ஏதோ ஒரு சக்தி தன்னை முன்னோக்கி அழைத்துச் செல்வதைப் போல அவளுக்குத் தோன்றியது.
சிறிது நேரத்தில், அவள் ஒரு சிறியதிறந்த வெளியை அடைந்தாள். அங்கே கொடிகளால் சூழப்பட்டிருந்த ஒரு பழைய கட்டிடம் இருந்தது. அதன் சுவர்களும் கதவும் சிதிலமடைந்திருந்தன. பல ஆண்டுகளாக யாருடைய காலடிகளும் அங்கு படாதது போல் அந்த இடம் காட்சியளித்தது.
அவள் மெதுவாகக் கட்டிடத்தின் அருகில் சென்றாள். அப்போது, தரையில் கிடந்த ஒரு பழைய அடையாள அட்டை அவளுளடய கண்ணில் பட்டது. அதை எடுத்துத் தூசியைத் துடத்தாள். புகைப்படம் மங்கியிருந்தது. பெயரையும் தெளிவாகப் படிக்க முடியவில்ளல.
அவள் அந்த அட்டையை உற்றுப் பார்த்து கொண்டிருந்த போது, பின்னால் காலடிச் சத்தம் கேட்டது. யாரோ நடந்து வருவது போல் இருந்தது. அவள் திரும்பிப் பார்த்தாள். அங்கே யாரும் இல்லை.
மீண்டும் அந்தச் சத்தம் கேட்டது. இம்முறை இன்னும் அருகில் கேட்பது போல் இருந்தது. அவளுடைய கைகள் நடுங்கின. அடுத்த நொடியே பலமான காற்று வீசியது. அந்தப் பழைய கட்டிடத்தின் கதவு தானாகவே திறந்தது. நீண்ட கிரீச்சிடும் சத்தம் அந்தக் காட்டையே அதிரச் செய்தது. அவளைச் சுற்றிலும் அந்த மர்மமான குரல்கள் ஒலித்தன.
அதே நேரத்தில், அவளுடைய கிராமத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வீடுகளின் விளக்குகள் அணைந்தன. தெருக்கள் இருளில் மூழ்கின. காட்டின் அந்தப் பகுதியிலும் எஞ்சியிருந்த வெளிச்சம் மறைந்தது.
வியப்பாக, அவளுக்குப் பயத்தை விட அமைதியே அதிகமாகத் தோன்றியது. அவள் கையில் இருந்த அளடயாள அட்டையை மீண்டும் பார்த்தாள். இந்த முறை அதிலிருந்த பெயர் தெளிவாகத் தெரிந்தது. அது அவளுடைய பெயர்!
அவளால் நம்பவே முடியவில்லை. அந்த அட்டை எப்படி அங்கே வந்தது? அந்தக் கட்டிடத்தை அவள் இதுவரை பார்த்ததே இல்லை. அந்தப் பாதையில் நடந்ததும் இல்லை. அப்படியிருக்க, அவளுடைய அடையாள அட்டை மட்டும் அங்கே எப்படி கிடைத்தது? அப்போது, காலையில் நடந்த ஒரு சம்பவம் அவளுடைய நினைவுக்கு வந்தது.
அன்றும் அவள் அந்த மரத்தின் அடியில் அமர்ந்து படம் வரைந்திருந்தாள். தனது அடையாள அட்டையைத் தாளின் அருகில் வைத்திருந்ததும் நினைவுக்கு வந்தது. காற்று பலமாக வீசிய போது, இலைகள் சிதறிப் பறந்தன. அப்போது அட்டை எங்கே விழுந்தது என்பதை அவள் கவனிக்காமல் விட்டிருக்கலாம்.
ஒருவேளை, அந்த அட்டை மரத்தின் அருகிலேயே விழுந்திருக்கலாம். அதைத் தேடித்தான் அவள் அந்தப் பாதையில் வந்திருக்க வேண்டுமோ?
ஆனால், அவள் மனதில் இன்னும் சில கேள்விகள் எழுந்தன. அந்தக் குரல் ஏன் அவளை அழைத்தது? யாருமே இல்லாத இடத்தில் காலடிச் சத்தம் கேட்டது ஏன்? இதற்கு முன்பு பார்த்திராத அந்த இடம், அவளுக்கு ஏன் இவ்வளவு பழக்கமானதாகத் தோன்றியது? அவளால் எந்தக் கேள்விக்கும் பதில் கண்டுபிடிக்க முடியவில்லை.
திடீரெனக் காற்று பலமாக வீசியது. கட்டிடத்தின் கதவு படாரென்று மூடியது. இதுவரை கேட்டுக் கொண்டிருந்த குரல்கள் அனைத்தும் ஒரே நொடியில் நின்று விட்டன. அந்த அமைதி அவளுக்குள் விவரிக்க முடியாத ஓர் உணர்வை ஏற்படுத்தியது.
அவள் அங்கிருந்து வெளியேறி, வந்த பாதையிலேயே திரும்பிச் சென்றாள். இந்த முறை பின்னால் திரும்பிப் பார்க்கக் கூட அவளுக்குத் தோன்றவில்லை. மரங்களின் கிளைகள் மெதுவாக அசைந்தன. அவளை வழியனுப்புவது போல் அவை தோன்றின.
மீண்டும் அந்தப் பழைய மரத்தை அடைந்ததும் அவள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டாள். தான் விட்டுச் சென்ற தாளும் பேனாவும் அங்கேயே இருந்தன.
தனது ஓவியத்தை எடுத்துப் பார்த்தாள். அவளுடைய இதயம் ஒரு நொடி துடிக்க மறந்தது போல் இருந்தது.
அந்தப் பாழடைந்த கட்டிடம், குறுகிய பாதை, அடையாள அட்டை என அவள் பார்த்த அனைத்தும் அந்த ஓவியத்தில் இருந்தன. ஆனால், அவற்றை அவள் எப்போது வரைந்தாள் என்பது அவளுக்குச் சுத்தமாக நினைவில்லை.
அதுமட்டுமல்ல, அந்த ஓவியத்தின் ஒரு மூலையில் இன்னொரு உருவமும் இருந்தது.
மரங்களின் நிழலில் ஒரு கருமையான உருவம் நின்று கொண்டிருந்தது. அது தொலைவில் இருந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தது.
அந்த உருவத்தைப் பார்த்தபடி அவள் நீண்ட நேரம் அசையாமல் நின்றாள். பிறகு, மெதுவாகத் தனது குறிப்பேட்டை மூடினாள்.
அந்த நேரத்தில் காற்று மீண்டும் வீசியது. அவளுடைய காதருகே யாரோ மெதுவாகக் கிசுகிசுப்பது போல் இருந்தது.
அவள் காட்டைத் திரும்பிப் பார்த்தாள். அவளுடைய மனதில் பயமும் ஆர்வமும் ஒன்றாகக் கலந்திருந்தன.
அன்று அந்தக் காடு அவளை அழைத்தது மட்டும்தானா? அல்லது அவளுக்காக நீண்ட காலமாகக் காத்திருந்ததா?
அவள் அளடயாள அட்டையை இறுகப்பற்றிக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தாள். ஆனால், அவளுடைய மனம் மட்டும் அந்தக் காட்டிலேயே தங்கி விட்டது. அங்கு நடந்ததை அவளால் விளக்க முடியவில்ளல. இருந்தாலும், மீண்டும் ஒருநாள் அந்தக் காட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை அவளுக்குள் எழுந்தது.
வீட்டிற்குச் செல்லும் வழியில் அவளுடைய மனதில் ஒரு எண்ணம் தோன்றியது.
சில இடங்கள் தங்களுடைய ரகசியங்களை உடனே வெளிப்படுத்திவதில்லை. சில உண்மைகள், அவற்றை உணர நாம் தயாராகும் வரை காத்திருக்கின்றன.
தொலைவில், அடர்ந்த மரங்களுக்கு நடுவே அந்தக்காடு அமைதியாக நின்றிருந்தது. திடீரென மீண்டும் ஒருகுரல் கேட்டது. விழித்துப் பார்த்தாள் அத்தனையும் கனவு. இந்த முறை, அது வெறும் அழைப்பாக இல்லை.
அது மீண்டும் அவளைச் சந்திப்பதாகக் கொடுத்த ஒரு வாக்குறுதியைப் போல இருந்தது.
G. பிரணவிகா
ஆலஜி டெக் பள்ளி,
பீளமேடு, கோயம்புத்தூர்.
Leave a Reply