உரிமைப் பறிப்பாளர் முன்  ஒப்பாரி வைக்காதே! முழங்கு!

  • By Magazine
  • |

பூ.வ.தமிழ்க்கனல்

தமிழர்களின் தாயகமான தமிழ்நாடு இன்றுள்ள நிலஎல்லைகளோடு நீடிக்குமா அல்லது 2029-க்குள் மோடி அரசினால் மூன்று ஒன்றியப் பிரதேசங்களாகப் பிரிக்கப்படுமா என்ற வினா பூதமாக நம் முன் நிற்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள சாதி அரசியலும், தமிழ்நாட்டை முப்பெரும் சாதிகளின் மூன்று மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்ற அந்தரங்க ஆசையில் மிதக்கின்றன!

தமிழர்களின் தாயகமான தமிழ்நாடு எந்த மன்னனாலும், உருவாக்கப்பட்ட மண் மண்டலமல்ல. வரலாற்றால் வடிவமைக்கப்பட்ட தமிழர்களின் இயற்கைத் தாயகம்! தமிழ்நாட்டிற்குள் ஆட்சி செய்த தமிழ் மன்னர்கள் தாம் சேரர், சோழர், பாண்டியர்! மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு, மொகலாயப் பேரரசு போல், மன்னர்களால் உருவாக்கப்பட்டதல்ல தமிழ்நாடு! ‘என்றும் உள்ள தென்தமிழ்” போல், தமிழ்நாடும் பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது. தமிழ்நாட்டிற்குள் தான் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள்!

தொல்காப்பியரின் வகுப்புத் தோழரான பனம்பாரனா; – தொல்காப்பியத்திற்கு எழுதின அணிந்துரையில், 5,000 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டின் எல்லை கூறுகிறார். (வடவேங்கடம் – தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல் உலகம்). மன்னராட்சிக்கும் தமிழர் தாயகத்திற்கும் தொடர்பில்லை!

சேர நாடு, சோழநாடு, பாண்டியநாடு என்பவை தமிழ்நாட்டிற்குள் தனித்தனி நிலப்பரப்பு கொண்டவை! ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் மூன்று உட்கூறுகள் தாம் சேர, சோழ, பாண்டியநாடுகள்! சேர,சோழ,பாண்டியர்களின் தாயகம் தமிழ்நாடு!

நம் தாய்மொழியான தமிழ்தான் உலகின் மூத்த செம்மொழி! ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது தொல்காப்பியம்! அது மாணவர்களுக்கான நூல்! அது முழுமையான இலக்கண நூல் அல்ல – தொல்காப்பியர்க்கு முழுமையான இலக்கணம் தெரியாது என்று பொருள் அல்ல, அவர் பாடம் சொல்லப் புகுந்த மாணவர்களுக்கு அது போதும் என்று கருதினார். தொல்காப்பியத்திற்கு முன் விரிவான – ஆழமான – இலக்கண நூற்கள் இருந்து அழிந்து போயின. அதனால்தான் தொல்காப்பியர் 180 இடங்களுக்கு மேல் ‘என்மனார் என்ப” என்று தமக்கு முன்னால் இருந்த இலக்கண ஆசான்களை அப்படிச் சொல்வார்.

அப்படிப்பட்ட தமிழ் – இன்று இந்திக்கு அடிமையாம்! ஏற்கெனவே சமற்கிருதத்திற்கு அடிமை என்றார்கள்! சமஸ்கிருதம் தேவபாஷ – தமிழ் நீசபாஷை அல்லது சூத்திரபாஷை! இதுவே பிராமணபாஷை!

தமிழ்நாட்டில்! ஆம் வகுப்பிலிருந்து மும்மொழித் திட்டம் செயல்பட வேண்டுமாம். அதில் இந்தி கட்டாயமாகப் பாடமொழியாக இருக்க வேண்டுமாம்! இப்படி இந்தியைத் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் கற்பிக்கவில்லை என்றால், தமிழ்நாட்டிற்கு இந்தியஅரசு தரவேண்டிய நிதிமானியத்தை இந்திய பா.ச.க. அரசு தராதாம்!

தமிழ்நாட்டிற்கு இந்திய அரசு தரும் கல்விமானியத் தொகை – இந்திக்காரன் வரிப் பணமா? எவன் அப்பன் வீட்டுப் பணம்? இந்திய அரசு தமிழ்நாட்டில் வசூலித்துக் கொண்ட பல்லாயிரம் கோடி ரூபாயில் – மிகமிகச் சிறுதொகை, தில்லிக்காரர்கள் தரும் கல்வி உதவித் தொகை!

இந்திய அரசு தமிழ்நாட்டில் 100 ரூபாய் வரியாக வசூலித்துக் கொண்டால், அதில் 27 ரூபாய்தான் தமிழ்நாட்டிற்குத் திருப்பித் தருகிறது. எஞ்சிய 73 ரூபாயும் இந்திய அரசுக்குப் பீகார் உள்ளிட்ட இந்தி மாநிலங்களுக்குப் போகிறது!

இந்திய அரசின் இந்த அநீதிக்கு என்ன தீர்வு? திராவிடக் கவர்ச்சி அரசியலிலும், திரைப்படக் கவர்ச்சி அரசியலிலும் மனம் பறிகொடுத்து, மயங்கிக் கிடக்கும் தமிழர்களே, சிந்தியுங்கள்!

இந்தி படிக்காத எங்களை – தமிழர்களை சுமக்க முடியாது என்று இந்திக்காரர்களே நீங்கள் கருதினால், எங்களை நீங்கள் சுமக்க வேண்டாம், விட்டுவிடுங்கள்!

இந்திகாரர்களைத் தமிழர்கள் சுமக்கிறார்களா? தமிழர்கள் இந்திக்காரர்களை சுமக்கிறார்களா? உண்மையை வெட்ட வெளிச்சமாக்குங்கள்!

திராவிடவாதிகளின் இருமொழிக் கொள்கை – அம்மாவிலிருந்து ஆட்சித்துறை – ஆராய்ச்சித்துறை அனைத்தையும் ஆங்கிலமயமாக்கி – தமிழை வெளியேற்றி வருகிறது.

ஆரியத்துவா காங்கிரசு – பா.ச.க. ஆட்சிகள் மும்மொழிக் கொள்கை பேசி, அனைத்தையும் தமிழ்நாட்டில் சமற்கிருதமயமாக – இந்தி மயமாக வடவர் ஆதிக்கமயமாக மாற்றுகின்றன.

திராவிடக் கட்சிகளின் இருமொழிக் கொள்கை ஆங்கில ஆதிக்கம் – தமிழ்மொழி அழிப்பு உள்ளடக்கம் கொண்டது. இந்தியத் தேசியவாதக் காங்கிரசு – பா.ச.க கட்சிகளின் மும்மொழிக் கொள்கை இந்தி – சமற்கிருதத் திணிப்பு – தமிழ் ஒழிப்பு!

இருமொழிக் கொள்கை – மும்மொழிக் கொள்கை இரண்டும் தமிழ் அழிப்புக் கொள்கைகள்! தமிழ் அழிப்பு என்பதன் விளைவு என்ன? தமிழ் இன அழிப்பு!

ஏமாந்து திரியும் தமிழினமே – உன் இன அழிப்பு என்பதன் விளைவென்ன? உன் தாத்தா – பாட்டி இரத்த உறவை – உளவியல் உறவை மங்கச் செய்வது – அவர்களின் பண்புகளைப் புறக்கணிக்கத் தூண்டுவது! உன் பெருமைக்குரிய பேராசான்கள் தொல்காப்பியர். திருவள்ளுவர் இளங்கோவடிகள், பெருஞ்சித்திரனார், பாரதிதாசன் போன்றோரைப் புறக்கணிக்கத் தூண்டுவது! உன் குருதிவகை உறவுகளான மாமன்னர்கள், கரிகால் பெருவளத்தான் – பாண்டிய நெடுஞ்செழியன் – சேரன் செங்குட்டுவன், பேரரசன் இராசராசன் – நிகழ்காலப் பெருந்தமிழன், மேதகு. பிரபாகரன் உள்ளிட்ட அனைவரையும் மறக்கச் செய்து, வடநாட்டு மன்னர்களை உன் தலைக்குள் ஏற்றி, உன்னை உளவியல் அடிமை ஆக்குவது அண்டிப் பிழைக்கும் தாழ்வு மனப்பான்மையை உனக்குள் வளர்ப்பது!

ஏ தமிழனே, தமிழச்சியே எண்ணிப் பார்! நம் தலைமுறையில் உலகத் தொன்மைத் தமிழினம் அழிந்து போவதா?

1947-இல் வெள்ளையன் வெளியேறி இந்தியாவுக்கு விடுதலை வந்தது உண்மைதான்! ஆனால், அந்த ஆங்கிலேயன் தனது காலனி ஆதிக்கக் கங்காணியாக உருவாக்கிய நியமன ஆளுநர் பதவி நீடிப்பது ஏன்? கவர்னர்களின் தலைவராக – கவர்னர் ஜெனரலாக – ஆங்கிலேயன் அமா;த்தும் பதவியை நீக்கி விட்டதே இந்தியஅரசு! தமிழ்நாட்டிற்குள் ஏன் புதுதில்லி அமர்த்தும் ஆளுநர்? ஆளுநருன்றி அணுவும் அசையாது என்ற இந்திய அரசமைப்புச் சட்டம் விதிப்பது சுதந்திரமா? புதுதில்லியின் சூழ்ச்சியா?

இந்தி மாநிலங்களைப் பொருத்தவரை, இந்திய அரசே – இந்திக்காரர்களின் அரசு! இந்திய அரசமைப்புச் சட்டமே அவர்களின் இந்திக்கு இந்தியாவின் ஆதிக்கமொழித் தகுதி வழங்குகிறது.

ஏ, தமிழனே தமிழச்சியே! எண்ணிப்பார்! இங்கிலாந்துக்காரன் இந்தியாவை ஆண்டபோது, மாநில அரசு விற்பனை வரி விதித்து வசூலித்துக் கொள்ளும் உரிமை வழங்கினான். தில்லிக்காரன் இப்போது சரக்கு – சேவைவரி என்று கொண்டு வந்து, மாநில அரசுக்கிருந்த விற்பனை வரியைப் பிடுங்கிவிட்டானே! இது வளர்ச்சியா? தேய்வா?

ஆங்கிலேய அயலான் ஆட்சியில் கூட, கல்வியும் பொதுநலமும் மாநில அதிகாரத்தில் இருந்தன. இந்தியன் ஆட்சியில், மாநிலத்திடமிருந்து அவற்றைப் பறித்து இந்தியஅரசு ஆதிக்கம் செலுத்தும் மாறுவேடப் பட்டியலுக்கு (பொதுப் பட்டியல்) – மாற்றி விட்டானே!

மாநிலங்களில் கிடைக்கும் கனிமவளங்களை அந்தந்த மாநில ஒப்புதல் இல்லாமலே இந்திய அரசு எடுத்துக் கொள்ளலாம் என்று இப்போது சட்டம் செய்துள்ளார்களே, இது கூட்டாட்சியா? ஏகாதிபத்தியக் காட்டாட்சியா?

உன் ஊரிலே என்ன விதை விதைக்கலாம் – விளைந்தநெல் – கரும்பு போன்றவற்றிற்கு என்ன விலை வைக்கலாம் என்பதெல்லாம் புதுதில்லியில் தான் முடிவாகும் என்றால், தமிழ்நாட்டில் சட்டமன்றம் ஏன்? அமைச்சரவை ஏன்? இவையெல்லாம் தமிழர்களின் கவனத்தை மடைமாற்றி – அவர்களை அடிமைகளைப் போல் நடத்தும் உத்திகளா?

எல்லா உரிமைப் பறிப்புகளையும் தூக்கிச் சாப்பிடும் – ஒற்றை உரிமைப் பறிப்பு தான் தேந்ந்தெடுக்கப்பட்ட மாநில ஆட்சிகளைப் புதுதில்லி அரசு விரும்பினால் கலைத்து விடலாம் – அதற்கொரு காரணம் சொல்லிக் கொள்ளலாம் என்ற அரசமைப்புச் சட்டஏற்பாடு! உலகத்தில் எந்தக் கூட்டாட்சியில் இப்படி மாநில ஆட்சியைக் கலைக்கும் அதிகாரம் மைய ஆட்சிக்கு இருக்கிறது? உலகில் எந்தக் கூட்டாட்சியில் அமர்த்தப்படும் ஆளுநர் பதவி இருக்கிறது?

திராவிடத் தனிநாடு பெறப் போவதாகத் திட்டமிட்டுப் பொய் பரப்பிய கூட்டம் திராவிட அரசியல் கூட்டம்! புதுதில்லி ஏகாதிபத்தியத்தின் விசுவாச ஊழியர்கள் திராவிடத் தலைவர்கள் தாம்!

இலெனின் பெயரைச் சொல்லித் தமிழர்களை ஏமாற்றிய கம்யூனிஸ்டுகள் இலெனின் உருவாக்கிய கூட்டரசு போன்ற ஒரு முன்மாதிரிக் கூட்டரசுக் கோட்பாட்டை அன்றிலிருந்து இன்று வரை முன் வைக்கவில்லை!

பாரதீய ஒற்றை ஏகாதிபத்திய இடதுசாரிப் பக்க வாத்தியங்கள் தாம் தமிழ்நாட்டுக் கம்யூனிஸ்டுகள்!

உரிமைப் பறிப்பாளர் முன் ஒப்பாரி வைத்தால் கூட, ‘அபசகுனம்” என்று நம்மை அடிப்பார்கள்!

பட்டுவேட்டி பற்றிப் பகல் கனவு காணும் திண்ணைத் தூங்கிகளாகநாம் இருந்தால், கட்டியிருக்கும் கோவணத்தையும் களவாடி விடுவார்கள் என்றவன் தமிழ்ப் பாவலனே!

குழப்பமில்லாத கோரிக்கை முழக்கம் எழுப்பு! ஆளுநர் பதவியை நீக்கு!

மாநிலஆட்சிக் கலைப்பு விதியை நீக்கு!

இந்தியா வைத்தேசிய இனங்களின் கூட்டரசாக மாற்று!

எல்லா அதிகாரங்களும் தேசிய இனங்களுக்கே! மாநிலங்களுக்கே!

இந்திய அரசுக்குப் படை, வெளிநாட்டுறவு, பணஅச்சடிப்பு என்று சுருக்கு!

வரிவிதித்து வசூலிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே!

வசூலித்த வரியில் 25 விழுக்காடு நிதி இந்திய அரசுக்கென்று ஒதுக்கு!

இப்போதுள்ள நாடாளுமன்ற முறையை மாற்று!

இந்தியக் கூட்டரசு அவை கொண்டுவா!

இவ்வாறான கோரிக்கை முழக்கங்களை முன்வைத்து மக்கள் திரள் போராட்டம் நடத்தவேண்டும். தியாகம் செய்யத் தயங்காத மக்கள் திரள் போராட்டங்களின் வழியாகவே  தமிழ்த்தேசியக் கருத்தியலை வென்றெடுக்க இயலும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *