எடை போடுபவன்

எடை போடுபவன்

  • By Magazine
  • |

இரா. அரிகரசுதன்

மூச்சு இரைக்க மிதிவண்டி ஓட்டிய

நெடும்பயணங்களில்

நுகர்ந்த புத்தகங்கள்

ஒட்டியிருக்கின்றன உடலோடு

பழைய புத்தகங்கள் கிடைக்கும்

நடைமேடை கடைகளில்

நின்று நின்று கால்கள் வலிக்கும்

இலக்கியம் பேசும் சின்ன குழுக்களின்

கைகளில் கிட்டும் புத்தகங்கள்

மலைகளைப் போலிருக்கும்

இவர்கள் எங்கிருந்து

புத்தகங்களை கொய்து வருகிறார்கள்

அவர்களுக்கு கிடைக்கும் புத்தகங்கள்

நூலகங்களில் கிடைப்பதில்லை

கடைகளிலும் காண்பதற்கில்லை

கூட்டங்களில் பேசுகையில் மனதில் ஒளிரும்

யாரேனும்

படிக்காதப் புத்தகங்களை பரிசளித்திடமாட்டாரா

பணி ஓய்வும் கண் தளர்வும் கொண்டோர்

தரும் பழையப் புத்தகங்களின்

கையேந்து நேர்காணலில்

மதிப்பெண் கிட்டாது,

அவர்களுக்கான பதிலை எழுதும்

பேனா என்னிடம் எப்படி இருக்கும்?

கிடைக்காது போன புத்தகங்கள்

கண்ணாடிகளுக்குள்ளிருந்து

கண்ணடித்துக் கொண்டிருக்கும்!

புத்தகங்களே உடலாகிப் போனவன்

உருவி போடுகிறான் தன்னை..

இலவ மரங்களில் காய்களைப் பற்றி

உங்களுக்கு தெரிந்திருக்கும்

புத்தகங்களை கொடையளிப்போரும்

எடைக்குபோடுவோரும் வெவ்வேறானவர்

ஆனால்

எடை எடுப்பவனோ

புத்தகங்களின் இரத்தவாடையைத்

புரிந்துகொள்வான்

எனவே

ஒரு பத்துரூபாய் கூட்டித் தருவான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *