நிலவில்லா பூமி: ஒரு கற்பனை இயற்பியல்

  • By Magazine
  • |

ஸ்ரீ காளீஸ்வரர் செ,

நிலவு என்பது இரவு நேரத்தில் வெளிச்சம் தரும் ஒரு அழகான கோள் மட்டுமல்ல; அது பூமியின் சமநிலையைக் காக்கும் ஒரு உன்னதமான இயற்பியல் அச்சு. “ஒருவேளை நமக்கு நிலவு இல்லையென்றால் என்ன நடக்கும்?” என்ன இரவில் நிலாவை பார்க்க முடியாது. அடுத்தமுறை நீல் ஆம்ஸ்ட்ராங் போல யாரும் காய் பிடிக்க முடியாது என நினைக்கிறீர்களா? ஆனால் நிலவு இல்லாவிட்டால் நிலைமை வேறுவிதமாக இருக்கும். நிலவு இல்லாவிட்டால் பூமியின் ஈர்ப்புவிசை, கடலின் ஓதங்கள், வளிமண்டலக் காற்றின் வேகம், மனிதர்களின் வாழ்வியல் மற்றும் ஒட்டுமொத்த விண்வெளி ஆய்வுகள் எப்படி மாறும் என்பதை இந்த விரிவான கட்டுரையில் காண்போம்.

1. ஓதங்கள்: அமைதியாகும் கடல்களும் சுற்றுச்சூழல் மாற்றமும்

நிலவு பூமியின் மீது செலுத்தும் மிக முக்கியமான நேரடித் தாக்கம் – கடலில் ஏற்படும் ஓதங்கள் (Ocean Tides) ஆகும். நிலவின் ஈர்ப்புவிசை பூமியின் கடல்நீரைத் தன் பக்கமாக இழுக்கிறது. பூமி தன்னைத்தானே சுழலும்போது, இந்த இழுவிசை காரணமாகக் கடல் நீர் உயர்ந்து தாழ்கிறது. இதையே நாம் கடல் அலைகளின் ஏற்ற இறக்கங்கள் (High tides and Low tides) என்கிறோம்.

நமக்கு நிலவு இல்லையென்றால், கடலில் ஓதங்கள் முற்றிலும் அழிந்துவிடாது, ஆனால் அதன் வீரியம் மூன்றில் இரண்டு பங்கு (கிட்டத்தட்ட 67%) குறைந்துவிடும். ஏனெனில், சூரியனின் ஈர்ப்புவிசையும் கடலில் ஓதங்களை உருவாக்குகிறது. ஆனால், சூரியன் பூமியை விட்டு மிகத்தொலைவில் இருப்பதால், அதன் ஈர்ப்பு இழுவிசைத் தாக்கம் நிலவோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே இருக்கும்.

இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மிகவும் கடுமையானவை. ஓதங்கள் தான் உலகளாவிய கடல் நீரோட்டங்களை (Ocean Currents) இயக்குகின்றன. இந்த நீரோட்டங்கள் பூமியின் வெப்பநிலையைச் சமமாகப் பகிர்ந்தளிக்க உதவுகின்றன (பூமத்தியரேகையின் வெப்பத்தைத் துருவப் பகுதிகளுக்குக் கொண்டு செல்வதுபோல). நிலவு இல்லாவிட்டால், கடல் நீரோட்டங்கள் ஸ்தம்பித்து, பூமியின் வானிலை கடுமையாக மாறும். சில பகுதிகள் உறைந்துபோகும், சில பகுதிகள் கடுமையான வெப்பமடையும். அதுமட்டுமின்றி, கடலோரப்பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான நண்டுகள், சிப்பிகள், மீன்கள் மற்றும் கடல் தாவரங்கள் ஓதங்களின் சுழற்சியை நம்பியே வாழ்கின்றன. ஓதங்கள் இல்லாவிட்டால், இந்தச் சுற்றுச்சூழல் அமைப்பு (Inter tidal Ecosystem) முற்றிலுமாக அழிந்து, ஒட்டுமொத்த கடல் உணவுச் சங்கிலியையும் (Food Chain) உடைத்துவிடும்.

2.  பூமியின் அச்சு நிலைத்தன்மை

பூமி சூரியனைச் சாய்வாகச் சுற்றி வருகிறது என்பது நாம் அறிந்ததே. பூமியின் இந்தச் சாய்வு கோணம் (Axial Tilt)) தான் நமது பருவநிலைகளை (Seasons) தீர்மானிக்கிறது. தற்போது பூமி தோராயமாக 23.5 டிகிரி கோணத்தில் சாய்ந்துள்ளது. இதனால் தான் கோடைகாலம், குளிர்காலம், மழைக்காலம் போன்ற பருவநிலைகள் சீராக வருகின்றன. பூமியின் இந்தச் சாய்வை ஒரு குறிப்பிட்ட எல்லையோடு பிடித்து வைத்திருக்கும் ஒரு ‘ஈர்ப்புவிசை நங்கூரம்’ தான் நமது நிலவு ஆகும்.

நிலவின் ஈர்ப்பு விசை இல்லையென்றால், கோடிக்கணக்கான ஆண்டுகளில் பூமியின் அச்சு பம்பரம் போலத் தடுமாறத் தொடங்கும் (Wobbling). இந்தச் சாய்வுக் கோணம் 0 டிகிரி முதல் 85 டிகிரி வரை எப்படி வேண்டுமானாலும் மாறலாம். அச்சு 0 டிகிரியாக மாறினால், பூமியில் பருவநிலைகளே இருக்காது. எப்போதும் ஒரே மாதிரியான வானிலைதான் இருக்கும். அதுவே அச்சு 85 டிகிரியாக மாறினால், பூமி முற்றிலுமாக ஒரு பக்கமாகச் சாய்ந்துவிடும். அதாவது, பூமியின் வடதுருவம் நேரடியாகச் சூரியனை நோக்கி இருக்கும். இதனால் வருடத்தின் ஆறு மாதங்கள் உக்கிரமான கோடைகாலமும் (இரவே இல்லாத பகல்), அடுத்த ஆறு மாதங்கள் உறைபனி குளிர்காலமும் (பகலே இல்லாத இருள்) நிலவும். இத்தகைய கடுமையான வானிலையில் மனிதர்கள் அன்றாட வாழ்க்கையை நினைத்து பார்க்க கூட முடியாது.

3. காலத்தின் மாறுபாடு

பூமி தோராயமாக 24 மணிநேரத்திற்கு ஒருமுறை தன்னைத்தானே சுற்றிக்கொள்கிறது. அதனால் தான் நமக்கு 12 மணி நேரப்பகலும், 12 மணிநேர இரவும் கிடைக்கிறது. ஆனால், பிரபஞ்சத்தின் தொடக்கத்தில் பூமி இவ்வளவு மெதுவாகச் சுற்றவில்லை. சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி உருவான புதிதில், அது தன்னைத்தானே மிக அதிவேகமாகச் சுற்றியது. அப்போதெல்லாம் பூமியின் ஒரு நாள் என்பது வெறும் 6 மணிநேரம் மட்டுமே இருந்தது!

பூமி வேகமாகச் சுழலும்போது, நிலவின் ஈர்ப்புவிசை பூமியின் கடல் நீரையும், அதன் மேலோட்டையும் (Crust) பிடித்து இழுத்து ஒருவித உராய்வை (Tidal Friction) உருவாக்குகிறது. இது சுழலும் பம்பரத்தின் மீது மெதுவாகக் கையை வைப்பது போன்றது. கடந்த பில்லியன் கணக்கான வருடங்களாக நிலவு பூமிக்கு ‘பிரேக்’ போட்டு, அதன் சுழற்சி வேகத்தைக் குறைத்துக்கொண்டே வந்து, இன்று 24 மணிநேரமாக மாற்றியுள்ளது.

பூமிக்கு நிலவு என்ற பிரேக் இல்லாவிட்டால், இன்று நம்முடைய ஒரு நாள் என்பது இன்னும் 6 முதல் 12 மணி நேரமாகத்தான் இருக்கும். ஒரு நாள் 6 மணிநேரமாக இருந்தால், வருடத்திற்கு 1,000-க்கும் மேற்பட்ட நாட்கள் இருக்கும். பூமி இவ்வளவு அதிவேகமாகச் சுழலும்போது, வளிமண்டலத்தில் (Atmosphere) பயங்கரமான மாற்றங்கள் ஏற்படும். பூமியின் சுழற்சி வேகம் காற்றின் வேகத்தை உக்கிரமாக்கும். நிலவில்லாத பூமியில் தினமும் மணிக்கு 300 முதல் 500 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளியை மிஞ்சும் வகையிலான காற்று வீசும். இவ்வளவு பலத்த காற்றில் பெரிய மரங்களோ அல்லது உயரமான கட்டிடங்களோ நிலைத்து நிற்பது கடினம். நிலத்தில் வாழும் உயிரினங்களின் பரிணாமமே முற்றிலும் வேறானதாக, தட்டையான வடிவில்தான் இருந்திருக்கும்.

4. இருண்ட இரவுகளும் விண்மீன் நோக்கும் மனிதர்களும்

நிலவு இல்லாத பூமியின் இரவுகள் முற்றிலும் இருண்டதாக (Pitch Black) இருக்கும். இன்று நமக்குக் கிடைக்கும் நிலவொளி என்பது சூரிய ஒளியின் பிரதிபலிப்புதான் என்றாலும், அது இரவுநேரத்துச் சூழலை முழுமையாக மாற்றுகிறது.

இதனால் விலங்குகளின் வாழ்வியல் கடுமையாகப் பாதிப்படையும். இரவில் வேட்டையாடும் விலங்குகள் (ஆந்தைகள், பூனை, புலி இனங்கள்) மற்றும் நிலவின் ஒளியை வைத்துத் தங்களின் பாதையைத் தீர்மானிக்கும் புலம்பெயர் பறவைகள், கடல் ஆமைகள் ஆகியவை தங்களின் வழிசெலுத்தும் திறனை (Navigation) இழந்துவிடும். மனித நாகரிகத்தின் தொடக்கக்காலத்தில், மனிதன் விண்வெளியைப் பார்க்கத் தொடங்கியதே நிலவின் வடிவ மாறுபாடுகளை (Phases of Moon) கவனித்துத்தான். நிலவைக் கொண்டே மனிதன் முதல் நாட்காட்டிகளை (Calendars) உருவாக்கினான்.

5. நிலவு நோக்கிய பயணங்கள் (Moon Missions)

மனிதன் விண்வெளித் தொழில்நுட்பத்தில் அடைந்த அத்தனை மைல்கல்களுக்கும் நிலவுதான் முதல் படிக்கட்டாக இருந்திருக்கிறது. பூமிக்கு மிக அருகில் (தோராயமாக 3,84,400 கிலோமீட்டர்) நிலவு என்ற ஒரு பருப்பொருள் இருந்ததால்தான், மனிதனால் விண்வெளிப் பயணங்களைப் பற்றிச் சிந்திக்க முடிந்தது. மனிதகுலம் நிலவை நோக்கி நடத்திய மற்றும் நடத்திக்கொண்டிருக்கும் சில முக்கியப் பயணங்களை கீழே உள்ள அட்டவணையில் காண்போம்:

விண்கலம் / திட்டம்           நாடு / அமைப்பு        ஆண்டு            முக்கியத்துவம் / கண்டுபிடிப்பு

அப்பல்லோ 11 (Apollo 11)   NASA  (அமெரிக்கா) 1969    மனிதன் முதன்முதலில் நிலவில் கால் பதித்தான் (நீல் ஆம்ஸ்ட்ராங்). 

சந்திராயன்-1 (Chandrayan-1)              ISRO  (இந்தியா)           2008       நிலவின் துருவப் பகுதிகளில் நீர் மூலக்கூறுகள் (Water Ice) இருப்பதை முதன்முதலில் உலகிற்கு நிரூபித்தது.            

ஆர்ட்டெமிஸ் (Artemis) NASA& சர்வதேச கூட்டணி இந்த சகாப்தத்தில் மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் மற்றும் அங்கு நிரந்தர முகாம் அமைக்கும் திட்டம்.

நிலவு இல்லையென்றால், செவ்வாய் கோளுக்கோ (Mars) அல்லது பிற விண்வெளிப் பயணங்களுக்கோ மனிதன் நேரடியாகச் செல்ல வேண்டியிருந்திருக்கும். பூமியின் உக்கிரமான ஈர்ப்புவிசையைத் தாண்டி, விண்வெளி வீரர்களை நேரடியாகச் செவ்வாய்-க்கு அனுப்புவது தற்போதைய தொழில்நுட்பத்தில் மிகவும் கடினம் மற்றும் செலவுமிக்கது. நிலவு ஒரு ‘விண்வெளி நிலையமாக’ (Cosmic Pit-stop) பயன்படுகிறது. நிலவின் ஈர்ப்புவிசை பூமியை விட ஆறில் ஒரு பங்கு (1/6th Gravity) மட்டுமே என்பதால், நிலவிலிருந்து ஒரு விண்கலத்தை ஏவுவது மிகவும் எளிது. நிலவு இல்லாவிட்டால், மனிதனின் விண்வெளித் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பிரபஞ்சத் தேடல் பல நூறு ஆண்டுகள் பின் தங்கலாம்.

முடிவுரை

இந்தப் பிரபஞ்சத்தில் எந்த ஒரு பருப்பொருளும் தனித்து இயங்குவதில்லை. நிலவு என்பது ஏதோ வானத்தில் இருக்கும் ஒரு வெற்றுப்பாறை அல்ல. அது பூமியின் சுழற்சியைக் கட்டுப்படுத்தும் பிரேக்; கடலை இயக்கும் விசை; பூமியின் அச்சைத் தாங்கிப் பிடிக்கும் நங்கூரம்;

பூமிக்கு நிலவு இல்லை என்றால், பூமியில் உயிரினங்கள் தோன்றுவதற்கான வேதியியல் மற்றும் இயற்பியல் சூழலே அமைந்திருக்காது. இயற்கையின் இத்தகைய நுட்பமான பிணைப்புகளைப் புரிந்துகொள்வதே அறிவியலின் உண்மையான தேடுதலாகும். நாம் உருவாவதற்கு பின்னாலும், நாம் நினைத்துப் பார்க்க முடியாது காரணங்கள் புதைந்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *