சைக்கிள்

சைக்கிள்

  • By Magazine
  • |

– செல்லத்தங்கம்

என்னங்க… இந்த கசாயத்தை குடியுங்கள் என்று சொல்லியபடி வந்தாள் என் மனைவி. கையில் வாங்கிக் குடித்தேன். வெந்தயம், சீரகம் என்று ஏதோ சேர்த்து காய்ச்சி இருந்தாள். என்னப்பா இது கசாயம் என்று கேட்டு கொண்டு பக்கத்தில் வந்தான் எனது 8 வயது மகன் நிலவன்… அப்பாவுக்கு சுகர் ஆரம்பிச்சிருக்குடா அதுதான், இது ஒரு மருந்து என்றாள் என் மனைவி தேவகி. சுகர்னா… என்னப்பா… என்றான். அவனுக்கு அவன் புரியும் படி சொன்னான். ஏன் வருதுன்னா இப்போதுள்ள அவசர கதியிலான வாழ்க்கை, உடற்பயிற்சின்மை, உணவு எல்லாம் தான் என்றேன். நீங்கள் இதை எல்லாம் செய்தால் என்ன என்றான் மகன். எதையுமே அறிவுபூர்வமாக பேசுவான். நல்லா உரைக்கிற மாதிரி சொல்லுடா என்றாள் என் மனைவி. ஆமாம் வேலைக்கு செல்ல நீண்டதூரம் பைக் ஓட்டி ஓட்டி முதுகுவலி… பெல்ட் போட்டிருக்கேன். லோண் போட்டு ஒரு பழைய காரும் வாங்கி வச்சிருக்கேன். இப்ப எல்லாம் அதிகம் நடக்கிறதுல்ல. இனி காலையில் எழுந்து அரைமணி நேரம் நடக்கணும். மாலையிலே ஒரு சைக்கிள் வாங்கி ஓட்டுங்க… அப்படியாவது தொந்தி குறையட்டும் என்று சொல்லிக்கிட்டு அடுப்படிக்கு சென்றாள் மனைவி.

கொஞ்ச நாளாக தலைக்கனம், தலைசுற்றல், சோர்வு என இருந்தது. டாக்டர்கிட்டே போனால் சுகர் இருக்கு ஆரம்பக் கட்டம் தான். கொஞ்சம் உணவு கட்டுப்பாட்டோடு நடைபயிற்சி, உடற்பயிற்சியும் செய்யுங்கள் என்றார் டாக்டர். அதுதான் மனைவியின் இந்த புலம்பலுக்கு காரணம் . நடைபயிற்சி தொடங்கி விட வேண்டியது தான். சைக்கிள் என்று நினைத்ததும் என் நினைவுகள் பின்னோக்கி சென்றது.

நான் பிறந்து வளர்ந்தது கிராமத்தில். இப்போது பிழைப்புக்காக பட்டணம் வந்துள்ளேன். என் அப்பா காலையிலே எங்களை சைக்கிளில் வைத்து குளத்துக்கு குளிக்க கூட்டி செல்வார். அந்த சைக்கிளில் முன்னால் ஒரு வெல்ட் பண்ணிய சீட். அதிலே தங்கச்சி இருப்பாள். அடுத்தாலே சைக்கிள் கம்பிலே ஒரு டவலை மடிச்சிப் போட்டு நான் இருப்பேன். பின்னால சைக்கிள் சீட்டில் தம்பி அம்மா மடியிலே குடும்பத்தோட கோவிலுக்கோ, படம் பார்க்கவோ போனால் அந்த சைக்கிளில் தான் போவோம். அந்த வெல்ட் பண்ணப்பட்ட சீட் சமீபத்திலே கூட வீட்டில் பார்த்த ஞாபகம்… அந்த சைக்கிள் என் அப்பாவின் வாழ்வோடு இணைந்தது. மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்த அப்பா மளிகை கடையில் வேலை பார்த்தார். காலையிலே 9 மணிக்கு போவார். இரவு 11 மணிக்கு தான் வருவார். தினமும் போயிட்டு வர இந்த சைக்கிளில் தான் பயணம். வார விடுப்பு நாளில் குடும்பத்தோடு வெளியில் செல்வோம். அது ஒரு றாலி சைக்கிள்… அழகாக துடைத்து ஆயில் போட்டு வைத்திருப்பார். நாள்தோறும் காலையிலே துடைத்து விடுவார். அப்பாவுக்கு இப்போ எண்பது வயதாகிறது. இப்போதும் அந்த சைக்கிளை பாதுகாத்து வைத்திருக்கிறார். அந்த சைக்கிளில் காலையிலே கொஞ்ச நேரம் ஒரு ரவுண்டு சுற்றி கோவிலுக்கு போயிட்டு வருவார். மாலையிலே நடைபயிற்சி… மற்ற நேரம் மற்ற வேலைக்கு எல்லாம் வெளியே போவதற்கு நாங்கள் வளர்ந்த பிறகு ஒரு பேட்டரி சார்ஜ் போட்ட இரு சக்கர வண்டி வாங்கி கொடுத்துள்ளோம். அதை தான் பயன்படுத்துவார். அந்த கைக்கிளுக்கென்று ஒரு வரலாறு உண்டு. அப்பா ரொம்ப கஷ்டப்பட்ட போது சைக்கிள் வாங்க கூட காசு இல்லையாம். சிறிய வாடகை வீடு…. பாட்டியோடு நாங்கள் கஷ்டப்பட்ட போது எங்கள் தாத்தா தான் அம்மாவின் அப்பா அந்த சைக்கிளை வாங்கி கொடுத்தாராம். சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளாக அப்பா அதை பராமரித்து பாதுகாத்து வருகிறார். எதுக்குப்பா இந்த சைக்கிள்… உங்களுக்கு வேற வண்டி இருக்குல்லா என்றால் அப்பா கேட்க மாட்டார். இருக்கட்டும்… இருக்கட்டும்… அது யாருக்கு தொந்தரவு தருது. சும்மா இருங்க… என்று வாயை அடைத்து விடுவார். அபபா … தாத்தா ஞாபகமாக வச்சிருக்காங்க… நீங்கள் சும்மா இருங்கடா என்று எங்கள் வாயை அடைத்து விடுவாள் அம்மா. ஆம் சைக்கிள் ஒரு அற்புதமான உடற்பயிற்சி சாதனம். உடற்பயிற்சி கூடங்களில் கூட நிலைப்படுத்தப்பட்ட சைக்கிளில் தான் எல்லோரும் உடற்பயிற்சி செய்றாங்க. அவசர யுகத்திலே நாம் அதை மறந்துட்டோம். வேகமான செயல்பாட்டுக்கு அது ஒத்து வராதென்று நாம் நினைத்து விடுவோம் அது தான் காரணம்… அடுத்த மாதத்திற்குள் ஒரு சைக்கிள் வாங்கி கொஞ்ச நேரம் ஓட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். கிராமத்தைப் போல நகர்புறத்தில் ஓட்ட முடியாது. இயற்கையான காற்று கிடைக்காது. ஆனாலும் அதிகாலையிலே ஓட்டி விட வேண்டியது தான் என்று நினைத்தேன். அன்று மாலையிலே அம்மா போன் பண்ணுனாங்க. அப்பாக்கிட்டே கொடுக்கச் சொல்லி பேசினேன். அப்பா நான் ஒரு சைக்கிள் வாங்க போறேன் என்றேன். அப்பாச் சிரிச்சார். என்ன திடீர்னு… சைக்கிள் பேரனுக்கா என்றார் இல்லப்பா… எனக்கு தான் உடற்பயிற்சி செய்ய என்றேன். சிரித்தார் அப்பா… ஆம் அந்த சைக்கிளும் சிறு வயதிலே அந்த சைக்கிளில் எல்லோரும் சேர்ந்து செய்த பயணங்களும் வசந்த காலங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *